கோவை:'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கோவையில், 998 கோடி ரூபாய்க்கு பல்வேறு பணிகள் செய்தாலும், முழுமைபெறாத காரணத்தால், மத்திய அரசு விருதை மாநகராட்சி நிர்வாகம் கோட்டை விட்டுள்ளது.மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன், கோவை மாநகராட்சியில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் கடந்த, 2015ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில், 1,570 கோடிக்கு திட்டங்கள் துவக்கப்பட்டன. அதன்பின், 998.49 கோடியில் பணிகள் செய்யப்படுகின்றன. திட்ட செயலாக்கம் தொடர்பாக, மத்திய வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் ஆண்டுதோறும் ஆய்வு செய்து, மதிப்பெண் வாயிலாக தரவரிசைப்படுத்தி, 'ரேங்க்' வழங்குகிறது. அந்த வகையில், இவ்வாண்டு மாநில அளவில், தமிழக அரசு மூன்றாம் இடம் பெற்றுள்ளது. நீர் நிலையை மேம்படுத்திய திட்டத்துக்கு சென்னை மாநகராட்சி, குப்பையில் உரம் தயாரிக்கும் திட்டத்துக்கு ஈரோடு மாநகராட்சிக்கு விருது கிடைத்துள்ளது.கோவை மாநகராட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தினாலும், பணிகள் முழுமை பெறாததாலும், முறையாக ஆவணப்படுத்தாததாலும், விருது பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உதாரணமாக, காற்று மாசு கண்டறிய நகரின் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்ட கருவிகளை, தொடர்ந்து கண்காணித்து, மாசு அதிகரிப்பை ஆய்வு செய்து, பசுமை பரப்பை அதிகரிக்கும் எந்த முயற்சியையும் மாநகராட்சி எடுக்கவில்லை.'ஸ்மார்ட் சிட்டி' செயலி பயன்பாட்டில் இருப்பதாக, மத்திய, மாநில அரசுகளுக்கு மாநகராட்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், செயலி குறித்த அறிவிப்பு முறையாக இல்லை; அதன் பயன்பாடும் மக்களுக்கு தெரியவில்லை. உக்கடம், கவுண்டம்பாளையத்தில் அமைக்கப்பட்ட சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் மையங்களின் செயல்பாட்டை ஆவணப்படுத்தி, மத்திய, மாநில அரசுகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்காமல், 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட அதிகாரிகள் விட்டு விட்டனர்.இதேபோல், 'மாடல் ரோடு' பணிகள், மல்டி லெவல் கார் பார்க்கிங் திட்டம் உள்ளிட்ட பணிகள் முழுமைபெறவில்லை. திட்டங்களை உருவாக்குவதில் முனைப்பு காட்டும் மாநகராட்சி அதிகாரிகள், அவற்றை செயல்படுத்துவதிலும், ஆவணப்படுத்துவதில் போதிய அக்கறை காட்டாததால், மத்திய அரசு விருது கை நழுவி விட்டதாக அதிருப்தி எழுந்துள்ளது.திட்டம் முடியவில்லை!கோவை நகர் பகுதியில், நாளொன்றுக்கு, 850 டன் முதல், 1,000 டன் வரை குப்பை சேகரமாகிறது. மக்கும் குப்பையை உருவாகும் இடத்திலேயே அழிக்க, பசுமை தீர்ப்பாயத்தில் உறுதி கூறியுள்ள மாநகராட்சி, 69 இடங்களில் குப்பை உரம் தயாரிக்கும் மையம் கட்ட முடிவு செய்தது. ஷ்ரவன்குமார், குமாரவேல் பாண்டியன் என இரு கமிஷனர்கள் பணியாற்றி, 'டிரான்ஸ்பராகி' சென்று விட்டனர். 10 இடங்களில் மட்டுமே அம்மையங்கள் செயல்படுகின்றன. சில இடங்களில் மெஷின் பழுது என, மூடி வைக்கப்பட்டுள்ளன. மற்ற இடங்களில் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.