மலுமிச்சம்பட்டி:ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.மலுமிச்சம்பட்டியை அடுத்து ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சியில், 35 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். அரசு மேல்நிலைப்பள்ளி, பஞ்சாலை, தொழிற்சாலைகள், கல்லூரிகள் அதிகம் உள்ளன. ஒக்கிலிபாளையம் பகுதியில் மூன்று, பிரிமியர் மில்ஸ் மற்றும் ஒத்தக்கால்மண்டபம் ஊர் பகுதிகளில் தலா ஆறு வார்டுகள் உள்ளன.பேரூராட்சி அலுவலகத்திலிருந்து, 6 கி.மீ., தொலைவிலுள்ள மயிலேறிபாளையம், 5 கி.மீ., தொலைவிலுள்ள அரிசிபாளையம் பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைந்துள்ளன. இரு தனியார் மருத்துவமனைகளும் உள்ளன. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அதிகம் வசிக்கும் நிலையில், அரசு மருத்துவ உதவிபெற குறிப்பிட்ட இரு மையங்களுக்குத்தான் செல்லவேண்டியுள்ளது. அலைச்சலை தவிர்க்க பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் சுகாதார மையம் அமைக்க வேண்டுகோள் எழுந்துள்ளது.முன்னாள் கவுன்சிலர் அமிர்தராஜ் கூறுகையில், "இப்பகுதியிலுள்ள மில் தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்ட, 60 சென்ட் இடம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரையிலும் பயன்பாடின்றி, புதர் மண்டி உள்ளது. ''இவ்விடத்தில் அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைந்தால் அனைவருக்கும் உதவியாக இருக்கும். இதுகுறித்து, முதல்வரிடமும் மனு கொடுத்துள்ளேன்," என்றார்.