கோவை: அருகம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் தனது இரு மகள்களை, அரசுப்பள்ளியில் சேர்த்து பிறருக்கு முன் உதாரணமாகியுள்ளார்.
சூலுார் ஒன்றியத்திற்குட்பட்ட, அருகம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி யில், 29 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு இரு ஆசிரியர்கள் கொண்டு, வகுப்புகள் கையாளப்படுகின்றன. இரு வகுப்பறைகள் மட்டுமே உள்ளதால், சிலர் தனியார் பள்ளிகளில், குழந்தைகளை சேர்க்க ஆர்வம் காட்டுவதால், சேர்க்கை ஆண்டுதோறும் சரிந்து வருகிறது.இந்நிலையில், அரசின் நலத்திட்டங்களை எடுத்துக்கூறி, சேர்க்கையை அதிகரிக்கவும், பிறருக்கு முன்னுதாரணமாக விளங்கவும், இப்பள்ளியின் இடைநிலை ஆசிரியர் மணிகண்டன், மூத்த மகள் பிரதிக் ஷாவை ஐந்தாம் வகுப்பிலும், இளைய மகள் தனுக் ஷாவை, ஒன்றாம் வகுப்பிலும் சேர்த்துள்ளார். இவரின் முயற்சிக்கு, சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.
இடைநிலை ஆசிரியர் மணிகண்டன் கூறுகையில்,''அருகம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளிக்கு, எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளை துவக்கினால், தனியார் பள்ளிகளை, தேடி செல்வோர் எண்ணிக்கை குறையும். ஈராசிரியர் பள்ளியாக இருப்பினும், அந்தந்த வகுப்புக்கு தேவையான, அனைத்து தொழில்நுட்ப வழி கற்பித்தலுக்கும், முயற்சி செய்கிறோம். மூத்த மகளை ஒன்றாம் வகுப்பிலே, அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டுமென முடிவெடுத்தேன். சில காரணங்களால் முடியாத நிலையில், தற்போது இரு மகள்களையும், நான் பணிபுரியும் பள்ளியிலே சேர்த்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பொதுமக்களிடம் என் குழந்தைகளும், இப்பள்ளியில் தான் படிப்பதாக கூறி, சேர்க்கை பணிகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளேன்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE