டாக்டரை மிரட்டி போலீஸ் பறித்த தொகை: சரக்கு சங்கமத்தில் ரூ.40 லட்சத்தால் புகை| Dinamalar

டாக்டரை மிரட்டி போலீஸ் பறித்த 'தொகை': 'சரக்கு சங்கமத்தில்' ரூ.40 லட்சத்தால் 'புகை'

Updated : ஜூன் 29, 2021 | Added : ஜூன் 29, 2021
Share
பணி நிமித்தமாக, கோவில்பாளையம் சென்றிருந்த சித்ராவும், மித்ராவும், கோவை நோக்கி, ஸ்கூட்டரில் திரும்பிக் கொண்டிருந்தனர். தீவிரமாக யோசித்த மித்ரா, ''எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில் ஏதோ பிரச்னை இருக்குன்னு கேள்விப்பட்டேனே,'' என்றாள்.''அதுவா, கொண்டயம் பாளையம் ஊராட்சியில இருக்கற ஒரு குளத்துல, அனுமதியில்லாம, சட்ட விரோதமா, லோடு லோடா மண் அள்ளியிருக்காங்க. 'ரெவின்யூ
  டாக்டரை மிரட்டி போலீஸ் பறித்த 'தொகை': 'சரக்கு சங்கமத்தில்' ரூ.40 லட்சத்தால் 'புகை'

பணி நிமித்தமாக, கோவில்பாளையம் சென்றிருந்த சித்ராவும், மித்ராவும், கோவை நோக்கி, ஸ்கூட்டரில் திரும்பிக் கொண்டிருந்தனர். தீவிரமாக யோசித்த மித்ரா, ''எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில் ஏதோ பிரச்னை இருக்குன்னு கேள்விப்பட்டேனே,'' என்றாள்.

''அதுவா, கொண்டயம் பாளையம் ஊராட்சியில இருக்கற ஒரு குளத்துல, அனுமதியில்லாம, சட்ட விரோதமா, லோடு லோடா மண் அள்ளியிருக்காங்க. 'ரெவின்யூ ஆபீசர்ஸ்' ஸ்பாட்டுக்கு போயி, வாகனங்களை பறிமுதல் செஞ்சிட்டாங்க,''

''ஜாதி பெயரை சேர்த்து, கெத்து காட்டுற, ஆளுங்கட்சி பொறுப்பாளரின் நிர்பந்தத்துனால, இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கலையாம். ஏன்னா, மண் கடத்தலில் ஈடுபட்டது, ஆளுங்கட்சி பிரமுகருக்கு நெருக்கமானவராம். அள்ளுன இடத்திலேயே மண்ணை திருப்பிக் கொட்டிடுறதா சொன்னதுனால, வழக்கு பதியாம இருக்காங்களாம்,''

''ஓ... அப்படியா... சங்கதி,'' என்ற மித்ரா, ''கஞ்சா சேல்ஸ், போதை ஊசி, மூணாம் நம்பர் லாட்டரி விற்பனைனு ஏகப்பட்ட கேஸ் போட்டுட்டு இருக்காங்களே; இதுல, ஏதோ மர்மம் இருக்கற மாதிரி தெரியுதே''

''மித்து, இந்த மாதிரியான சட்ட விரோத செயல்களை துணிச்சலா செய்றாங்கன்னா, பின்புலம் சக்தி வாய்ந்ததா இருக்கணும்; அரசியல்வாதிகள் 'நெட்ஒர்க்' இருக்கலாம்னு போலீஸ் உயரதிகாரிகள் சந்தேகப்படுறாங்க. ஒவ்வொரு வழக்கையும் தீவிரமாக விசாரிக்கிறாங்க. பின்னணியில எந்தெந்த அரசியல்வாதிகள் இருக்காங்க; யாருடைய பணம் விளையாடுதுன்னு துருவிகிட்டு இருக்காங்களாம்,'' என்ற சித்ரா, சாய்பாபா காலனி அருகே வந்ததும், இளநீர் கடை முன் ஸ்கூட்டரை ஓரங்கட்டி, இரண்டு இளநீர் வெட்டச் சொன்னாள்.

''அக்கா, இந்த ஏரியாவுல இருக்கற ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரி விவகாரம் எனக்குத் தெரியும், சொல்லட்டுமா,'' என்ற மித்ரா, ''ஆஸ்பத்திரி சீனியர் டாக்டர், பெண் ஊழியர் ஒருத்தரை பாலியல் ரீதியா தொந்தரவு செஞ்சிருக்காரு. எல்லை மீறி போனதும், போலீஸ் ஸ்டேஷன் படியேறி, கண்ணீர் மல்க புகார் எழுதிக் கொடுத்திருக்காங், அந்த லேடி,''

''ஆனா, எஸ்.ஐ., - எஸ்.எஸ்.ஐ., - ஏட்டுன்னு போலீஸ் வட்டாரம் கூட்டு சேர்ந்து, டாக்டரை மிரட்டி, பெரிய தொகையை பறிச்சிட்டாங்களாம். பெண்ணுக்கு நீதி கேட்டு வந்த வக்கீலையும் மடக்கிட்டாங்களாம். பாலியல் ரீதியா துன்புறுத்தலுக்கு ஆளான அபலை பெண், நிற்கதியா நிற்குதாம்,''

''அடக்கொடுமையே,'' என, 'உச்' கொட்டிய சித்ரா, இளநீரை பருக ஆரம்பித்தாள்.அப்போது, மதுபானங்களை ஏற்றிக் கொண்டு, ஒரு லாரி, அவ்வழியாகச் சென்றது. அதை பார்த்த மித்ரா, ''அக்கா, 'டாஸ்மாக்' சங்கத்தை சேர்ந்த ஒருத்தரு, தி.மு.க.,வுல ஐக்கியமாயிட்டாராமே,'' என, வம்புக்கு இழுத்தாள்.

''ஆமாப்பா, வசூலிச்ச பணத்துல, 40 லட்சம் ரூபாயை சுருட்டிட்டதா, உறுப்பினர்கள் பலரும் புகார் வாசிக்கிறாங்க. எஸ்.பி.,யை நேர்ல சந்திச்சு, நடவடிக்கை எடுக்கச் சொல்லி, மனு கொடுக்கறதுக்கு, சங்கத்துக்காரங்க ரெடியாகிட்டு இருந்திருக்காங்க,''

''அதை கேள்விப்பட்ட அந்த பிரமுகர், ஆளுங்கட்சி பொறுப்பாளர் காலில் விழுந்து, அடைக்கலம் ஆகியிருக்காருப்பா. இதை கேள்விப்பட்ட சங்கத்துக்காரங்க, கொந்தளிப்புல இருக்காங்க,''

''நம்ம மாவட்டத்துலதான், தி.மு.க.,வுல ஒரு எம்.எல்.ஏ., கூட இல்லையே; யாரு அதிகார மையமா செயல்படுறாங்க,''

''மித்து, முந்தைய ஆட்சியில, டாஸ்மாக் 'பார்' கலெக்சன் வேலையை இலைக்கட்சி எம்.எல்.ஏ., வாரிசு கவனிச்சிட்டு இருந்தாரு. இப்போ, ஜாதி பெயரை அடைமொழியா வச்சிருக்கிறவரு கவனிக்கிறாராம். அதனால, 'இல்லீகல் பிசினஸ்' செய்றவங்க பலரும் அவரை போயி பார்க்குறாங்க. இதுல, இலைக்கட்சிக்காரங்க, யாரை பார்க்குறதுன்னு தெரியாம தவிக்கிறாங்க,''

''ஏன்ங்கா, அவுங்க எதுவும் பிசினஸ் செய்றாங்களா. இலைக்கட்சிக்காரங்க, எதுக்கு ஆளுங்கட்சிக்காரங்கள தேடுறாங்க,''

''இலைக்கட்சி ஆட்சி நடந்தப்போ, கார்ப்பரேசன் லிமிட்டுல 'போர்வெல்' போடுறது; 'ஆபரேட்' செய்றது; ரோடு போடுறதுன்னு, ஏகப்பட்ட வேலைகளை ரத்தத்தின் ரத்தங்களே 'கான்ட்ராக்ட்' எடுத்து செஞ்சிருக்காங்க. ஏகப்பட்ட பில் 'பெண்டிங்'ல இருக்கு. வேலையை தரமாவும் செய்யலை; முழுசாவும் செய்யலை,''

''அதிகார மையமா செயல்படுறது யாருன்னு தெரிஞ்சு, சரிக்கட்டலாம்னு நெனைக்கிறாங்க. ஆனா, கரன்சியை கொடுத்துட்டு காரியம் ஆகலைன்னா, திருப்பி வாங்க முடியாதேன்னு, தயக்கத்துல சுத்திக்கிட்டு இருக்காங்க,'' என்றபடி, மீண்டும் ஸ்கூட்டரை 'ஸ்டார்ட்' செய்தாள் சித்ரா.

''அதெல்லாம் இருக்கட்டும்! இலைக்கட்சி ஆட்சியில, டவுன் பிளானிங் செக்சன்ல கோலாச்சுன, 'டிராவல்ஸ்' பிரமுகர் மறுபடியும் வாலாட்ட ஆரம்பிச்சிட்டாராமே. நம்மூருக்கு 'வாழவந்தவரு', அவரை வச்சு, வாழ்றாராமே,'' என, 'ரூட்' மாறினாள் மித்ரா.

''ஆமாப்பா, கரெக்ட்டா சொல்றே. முந்தைய ஆட்சிக்காலத்துல, கார்ப்பரேஷன் அதிகாரியை, தன்னுடைய கட்டுப்பாட்டுல, 'டிராவல்ஸ்காரர்' வச்சிருந்தாரு. விஷயம் கேள்விப்பட்ட இலைக்கட்சி வி.ஐ.பி., ரெண்டு பேரையும் ஓரங்கட்டுனாரு,''

''கொஞ்ச நாள் ஒதுங்கியிருந்த அவரு, ஆட்சி மாறியதும், நகர ஊரமைப்புத்துறையில வேலையை காட்ட ஆரம்பிச்சிட்டாராம். கட்டட வரைபட அனுமதி கேட்டு யாரு விண்ணப்பம் கொடுத்தாலும், அங்கிருக்கிற அதிகாரி ஒருத்தரு, 'விசிட்டிங் கார்டு' கொடுக்குறாராம். மத்தவங்க விண்ணப்பத்தை பரிசீலனை செய்றதே இல்லையாம். விசிட்டிங் கார்டு பார்ட்டியிடம் இருந்து சிக்னல் வந்தா மட்டும் 'அப்ரூவல்' கிடைக்குதாம்,''

'இத்தனை நாளா, அபார்ட்மென்ட்டுல பதுங்கியிருந்து லஞ்சப்பணத்தை எண்ணிக்கிட்டு இருந்தாராம். இப்போ, ஆபீசிலேயே தில்லா உட்கார்ந்து, எண்ணுறாராம். லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ்காரங்க என்ன செய்றாங்கன்னே தெரியலைன்னு, 'புரமோட்டார்ஸ்' புலம்புறாங்க,'' என்றாள்.

வழியில் கார்ப்பரேஷன் ஜீப்பை கவனித்த மித்ரா, ''அக்கா, கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் பலரும் பீதியில இருக்காங்களாமே,'' என, நோண்டினாள்.

''அதுவா,உதவி கமிஷனர் அந்தஸ்துல யாரெல்லாம் இருக்காங்க. யாருக்கு பதவி உயர்வு கொடுக்கணும்னு, சீனியாரிட்டி லிஸ்ட் தயாரிச்சு, கவர்மென்ட்டுக்கு அனுப்பி இருக்காங்க. கவர்மென்ட் ஆர்டரை எதிர்பார்த்து 'வெயிட்' பண்றாங்க. யாருக்கு பதவி கிடைக்கப் போகுதோ, தெரியலை,''

''இதுமட்டுமில்லாம, டவுன் பிளானிங் ஆபீசர்கள் மேலேயும் எக்கச்சக்க கம்ப்ளைன்ட் வர்றதுனால, கார்ப்பரேஷன்ல வேலை பார்க்குற எல்லா ஆபீசர்களையும், வெவ்வேறு மாவட்டத்துக்கு மாத்திடலாமான்னு யோசிச்சிட்டு இருக்காங்களாம். ஆபீசர்ஸ் லிஸ்ட்டும் சென்னைக்கு போயிருக்காம். அதனால, ஆபீசர்ஸ் பலரும் துாக்கமில்லாம சுத்திக்கிட்டு இருக்காங்களாம்,''உப்பிலிபாளையம் சிக்னலை கடந்து சென்றபோது, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை பார்த்த மித்ரா, ''போலீஸ்காரங்களும் பயந்து நடுங்குறாங்களாமே,'' என, 'ரூட்' மாறினாள்.

''இருக்காதா, பின்னே! லஞ்சம் வாங்குன குற்றத்துக்காக, தொடர்ச்சியா, அஞ்சு பேரை 'சஸ்பெண்ட்' செஞ்சிட்டாங்க. அதனால, பயப்படுறாங்க. இருந்தாலும், ஸ்டேஷன் மாமூல் கலெக்சன் குறையாம நடக்குதாம். ஸ்டேஷன் வாரியா, உயரதிகாரிகள் ஆய்வுக்கு போகணும்; இல்லைன்னா, லஞ்ச ஒழிப்புத்துறைக்காரங்க ரெய்டுக்கு போகணும்னு, உளவுத்துறை போலீஸ்காரங்க சொல்றாங்க,'' என்ற சித்ரா, ரேஸ்கோர்ஸ் வழியாக, ஸ்கூட்டரை செலுத்தினாள்.

பொது சுகாதாரத்துறை அலுவலகத்தை கடந்து சென்றபோது, ''அக்கா, இலவசமா போட வேண்டிய தடுப்பூசிக்கு, விளாங்குறிச்சியில இருக்கற நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துல, 200 ரூபாய் வசூலிக்கிறாங்களாம். தற்காலிக ஊழியரா நியமிச்சிருக்கிற ஒருத்தருதான், கலெக்சன் செய்றாராம். இதுசம்ந்தமா, கம்ப்ளைன்ட் சொல்லியும், நடவடிக்கை எடுக்கலையாம்,'' என்றாள் மித்ரா.

''அப்படியா,'' என கேட்டபடி, வீட்டுக்கு முன் ஸ்கூட்டரை நிறுத்தினாள் சித்ரா.வீடு வீடாக வந்த தி.மு.க.,வினர், ஸ்மார்ட் ரேஷன் கார்டு ஜெராக்ஸ், மொபைல் போன் எண் வாங்கிச் சென்றனர்.

அதை கவனித்த மித்ரா, ''அக்கா, முந்தைய ஆட்சியில, அ.தி.மு.க., தரப்புல, கொரோனா நிவாரணப் பெட்டி கொடுத்தாங்க. அதே மாதிரி, 'ஒன்றிணைவோம் வா' திட்டத்துல, தி.மு.க., தரப்புல, வீடு வீடா, நிவாரண பை கொடுக்கப் போறாங்களாம். அதுக்குதான், கணக்கெடுக்குறாங்களாம். உதயநிதியை வரவழைச்சு, விழா நடத்தி, கொடுக்கப் போறாங்களாம்,'' என்றாள்.

''நம்ம ஜனங்க ஓட்டுப்போடலைன்னு புறக்கணிக்காம, நல்லது செஞ்சா, சரி,'' என்றபடி, சமையலறைக்குள் நுழைந்தாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X