புதுடில்லி : புதிய தகவல் தொழில்நுட்ப சட்டம் தொடர்பாக மத்திய அரசுடன், 'டுவிட்டர்' சமூக வலை தளம் மோதலில் ஈடுபட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் மீது, உத்தர பிரதேசத்தில் இரண்டாவது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. இது, கடந்த மாத இறுதியில் அமலுக்கு வந்தது. பெரும்பாலான சமூக வலை தளங்கள் நிபந்தனைகளைநிறைவேற்றியுள்ளன.அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும் டுவிட்டர் நிறுவனம் மட்டும் நிபந்தனைகளை ஏற்க மறுத்து, மோதலில் ஈடுபட்டுள்ளது.உத்தர பிரதேசத்தின் காஜியாபாதில் முஸ்லிம் பெரியவர் தாக்கப்பட்டது தொடர்பான, 'வீடியோ' டுவிட்டரில் வெளியானது.
நடவடிக்கை
மக்களிடையே மத மோதலை ஏற்படுத்த முயற்சிப்பதாக, அந்த நிறுவனத்தின் மீது எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.இதை எதிர்த்து, நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் மனிஷ் மகேஸ்வரி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், கைது செய்ய தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாட, உத்தர பிரதேச அரசு திட்டமிட்டிருந்தது.'என்னை விசாரிக்காமல் இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது' என, மனிஷ் மகேஸ்வரி சார்பில், உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உ.பி., அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
வரைபடம்
இதற்கிடையே ஜம்மு - காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களை தனி நாடுகளாக காட்டும் வகையில், டுவிட்டரில் சர்ச்சைக்குரிய வரைபடம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, மக்களிடையே பிளவு ஏற்படுத்த முயற்சிப்பதாக டுவிட்டர் நிறுவனம் மீது, உத்தர பிரதேசத்தில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டு உள்ளது. புலந்த்ஷஹர் பகுதியைச் சேர்ந்த பஜ்ரங் தளம் பிரமுகரின் புகாரின் அடிப்படையில் இந்த எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, டுவிட்டர் வீடியோ வாயிலாக சிறார் ஆபாச படங்களை பார்ப்பதற்கான வழிமுறைகள் உள்ளதாக கூறி, அந்த நிறுவனத்தின் மீது, டில்லி போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
'பேஸ்புக்' அறிக்கை
புதிய தகவல் தொழில்நுட்ப சட்டங்களின்படி, பெறப்பட்ட புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, சமூக வலைதளங்கள் மாதம் ஒரு முறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி, மே 15 - ஜூன் 15 காலகட்டத்துக்கான இடைக்கால அறிக்கையை, ஜூலை 2ம் தேதியும், இறுதி அறிக்கையை, ஜூலை 15ம் தேதியும் தாக்கல் செய்ய உள்ளதாக, 'பேஸ்புக்' நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE