கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாயில் படகு போக்குவரத்து; ‛சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் ஏற்பாடு| Dinamalar

கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாயில் படகு போக்குவரத்து; ‛சிங்கார சென்னை 2.0' திட்டத்தில் ஏற்பாடு

Updated : ஜூன் 30, 2021 | Added : ஜூன் 30, 2021 | கருத்துகள் (69) | |
4 ஆண்டுகளில் செயல்படுத்த இலக்கு 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தில், சென்னையின் முக்கிய நீர்வழித் தடங்களான, கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய்களில், படகு போக்குவரத்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வர, நான்காண்டுகள் வரை ஆகலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில், முக்கிய நீர் வழித்தடங்களாக, கூவம், அடையாறு,
கூவம், அடையாறு, பக்கிங்ஹாம், கால்வாய், படகு போக்குவரத்து, சிங்கார சென்னை,


4 ஆண்டுகளில் செயல்படுத்த இலக்கு


'சிங்கார சென்னை 2.0' திட்டத்தில், சென்னையின் முக்கிய நீர்வழித் தடங்களான, கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய்களில், படகு போக்குவரத்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வர, நான்காண்டுகள் வரை ஆகலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில், முக்கிய நீர் வழித்தடங்களாக, கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவை உள்ளன. இவை குப்பை நிறைந்து, கழிவு நீர் ஆறுகள் போல் காட்சியளிக்கின்றன. மேலும், நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகள், ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளது.


ஆக்கிரமிப்பு


சென்னையில், 2௦15ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்திற்கு பின், நீர்வழித்தடங்களில் இருந்த ஆக்கிரமிப்புக்களை அகற்ற, முந்தைய அரசு தீர்மானித்தது.இதன்படி, கூவம், அடையாற்றின் ஓரத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அங்கு குடியிருந்தோர் வேறு இடங்களில் மறுகுடியமர்த்தப்பட்டனர். மேலும், நீர்வழித்தடங்களில், குப்பை, ஆகாய தாமரை அகற்றும் பணியும், கழிவு நீர் சுத்திகரிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. தொடர்ந்து ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்க, வேலிகள் அமைக்கப்பட்டு, கரையோரங்களில் பல்வேறு வகையான மரங்கள், பூச்செடிகள் நடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின், 20 ஆண்டுகளுக்கு முன், சென்னை மாநகராட்சி மேயராக இருந்த போது, 'சிங்கார சென்னை' திட்டத்தை கொண்டு வந்தார். ஆட்சி மாற்றம் காரணமாக, அத்திட்டம் கைவிடப்பட்டது.


உத்தரவு


தற்போது, தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளதால், தற்போதைய மற்றும் வருங்கால தேவை, வளர்ச்சிக்கு ஏற்ப, 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர, மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், குடிநீர் வாரியம், பொதுப்பணித்துறை, மின் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து, அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில், மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.

இதில், முக்கியமான நீர்வழித்தடங்களான கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய்களில், படகு போக்குவரத்து கொண்டு வரும் திட்டம் இடம் பெறும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தின் முக்கிய அம்சங்களில், நீர்வழித்தடங்களில் படகு போக்குவரத்து அமைப்பதும் ஒன்று. சென்னை மாநகரில், கூவம் மற்றும் அடையாறு, 42 கி.மீ., துாரத்திற்கு பயணிக்கிறது. அதேபோல், பக்கிங்ஹாம் கால்வாய், 30 கி.மீ., துாரத்திற்கு பயணிக்கிறது. முதற்கட்டமாக, நகர பகுதிகளில் ஓடும் நீர்வழித்தடங்களில், படகு போக்குவரத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். அதன்பின், கூவம், அடையாறு பயணிக்கும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும், படகு போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படும்.

இதில் முக்கியமாக, சென்னையில் இருந்து பக்கிங்ஹாம் கால்வாயில், 100 கி.மீ.,க்கு மேல், படகு போக்குவரத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இப்பணிகள் அனைத்தும் செயல்பாட்டுக்கு கொண்டு வர, நான்கு ஆண்டுகள் வரை ஆகலாம். இதற்கான செலவு குறித்தும் ஆராய்ந்து வருகிறோம். இப்பணிகளை, மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவன பங்களிப்புடன் செயல்படுத்தவே வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. சென்னையில், நீர்வழித்தடங்களில் படகு போக்குவரத்தை துவக்கினால், மாநகரில் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், சுற்றுலா பயணியரை வெகுவாக கவர முடியும். சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுப்பதுடன், ஆக்கிரமிப்புகளையும் தடுக்கலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


சென்னை மக்களின் கனவு நிஜமாகுமா?


சென்னையில் பயணிக்கும் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் போன்ற நீர்வழித்தடங்கள், 5௦ - 90 ஆண்டுகளுக்கு முன், நல்ல நிலையிலேயே இருந்தன; படகு போக்குவரத்தும் நடந்துள்ளது. நகர்ப்புற வளர்ச்சி காரணமாகவே, இந்த நீர்வழித்தடங்கள் பாழாக்கப்பட்டன.


latest tamil newsஇதில், 50 ஆண்டுகளாக ஆண்ட, இரண்டு திராவிட கட்சிகளுக்குமே, சம பங்கு உண்டு. அதே நேரத்தில், சென்னையில் நீர்வழித்தடங்களை உலக தரத்திற்கு மாற்றுவதே லட்சியம் என, முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருவருமே அடிக்கடி கூறி வந்தனர்.

அதற்காக, இருவரும் ஆட்சி பொறுப்பில் இருந்த ஆண்டுகளில், இந்த நீர்வழித்தடங்களின் மேம்பாட்டிற்கு, பல நுாறு கோடி ரூபாய்களை செலவழித்ததும் உண்டு. ஆனால், இதுவரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில், 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தில், நீர்வழித்தடங்களின் மேம்பாடு முக்கியமானதாக கருதப்படுகிறது. சென்னையின் மீது எப்போதும் தனி அக்கறை கொண்டவர் ஸ்டாலின். அவரை, இம்மாநகர மக்கள் தான், நேரடியாக மேயராக தேர்வு செய்து அழகு பார்த்தனர். அந்த மக்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், இவ்வளவு ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல், வெறும் கனவாகவே உள்ள, கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் மேம்பாட்டு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றித்தர வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X