சேலம்: நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினின் கோரிக்கையின் அடிப்படையில் உள் ஒதுக்கீடு கொண்டுவந்ததாக கூறப்படுவது பச்சை பொய் என முன்னாள் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் முன்னாள் தமிழக முதல்வரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி 450 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 10 கிலோ அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் என 4.5 லட்சம் மதிப்பில் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இந்தாண்டு நீட் தேர்வு நடைபெறுமா நடைபெறாதா என தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். பெற்றோர்களும் மாணவர்களும் கடும் குழப்பத்தில் உள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றனர். தேர்தல் அறிக்கையிலும் வெளியிட்டனர் இன்றுவரை நடைமுறைப்படுத்தவில்லை.

சசிகலா அதிமுக.,வில் இல்லை. அவருக்கும் அதிமுக.,வுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் யாரிடம் பேசினாலும் கவலை இல்லை. அணில் ஏதாவது ஒரு பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும். தமிழகம் முழுவதுமா பாதிப்பு ஏற்படுத்தும்? இது விஞ்ஞான காலம். இதுபோன்று பேசுவதை விடுத்து மின்வெட்டை சரிபடுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றவேண்டும். மின் உற்பத்தி செலவு அதிகமாக உள்ளது. சம்பள உயர்வு, உதிரிபாகங்கள் விலை உயர்வு என பாதி தொகை சொத்தாக உள்ளது.

திமுக ஆட்சி முடிவில் 2011ல் 46 ஆயிரம் கோடி கடன் வைத்திருந்தது. நிதி அமைச்சரின் பேச்சு திமுக.,வின் தேர்தல் அறிக்கை பொய் என்பது நிரூபணமாகி உள்ளது. கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்படுவதால் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கொண்டு வந்தேன். இதனை, அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கையின் அடிப்படையில் கொண்டுவந்ததாக கூறுவது பச்சை பொய். இதுபோன்ற பேச்சுகளை சுகாதாரத்துறை அமைச்சர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
2010ல் நீட் தேர்வு கொண்டு வந்ததாக அவர்களே கூறி உள்ளனர். அதிமுக ஆட்சியில் மின்சாரம் கூடுதலாக விலை கொடுத்ததாக கூறுகின்றனர். அப்போது டீசலில் இருந்து மின் உற்பத்தி செய்யப்பட்டது. அப்போது தேர்வு நேரம், பீக் நேரம் என்பதால் அந்த விலைக்கு வாங்கினோம். மின் உற்பத்தி செலவும் அதிகமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE