இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : ஜூலை 01, 2021 | Added : ஜூலை 01, 2021
Advertisement
இந்திய நிகழ்வுகள்நகைக்கடை அதிபர் கொலைமும்பை: மஹாராஷ்டிராவில் மும்பை புறநகர் பகுதியான தஹிசாரில் உள்ள நகைக் கடைக்குள், நேற்று திடீரென புகுந்த மூன்று கொள்ளையர்கள், துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இதில், கடை உரிமையாளர் விகாஸ் பாண்டே, 46, கொல்லப்பட்டார். பின், நகைகளை கொள்ளையடித்து சென்ற மூவரையும் போலீசார் தேடுகின்றனர்.விவசாயிகள் - பா.ஜ.,வினர் மோதல்காசியாபாத்: உத்தர
today, crime, round up, இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'


இந்திய நிகழ்வுகள்நகைக்கடை அதிபர் கொலை

மும்பை: மஹாராஷ்டிராவில் மும்பை புறநகர் பகுதியான தஹிசாரில் உள்ள நகைக் கடைக்குள், நேற்று திடீரென புகுந்த மூன்று கொள்ளையர்கள், துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இதில், கடை உரிமையாளர் விகாஸ் பாண்டே, 46, கொல்லப்பட்டார். பின், நகைகளை கொள்ளையடித்து சென்ற மூவரையும் போலீசார் தேடுகின்றனர்.

விவசாயிகள் - பா.ஜ.,வினர் மோதல்

காசியாபாத்: உத்தர பிரதேச எல்லையான காசிப்பூரில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்துகின்றனர். அப்பகுதியில், பா.ஜ., தலைவரை வரவேற்ற தொண்டர்களின் பேரணியால், இரு தரப்பினருக்கும் இடையே நேற்று கடும் மோதல் ஏற்பட்டது. இதில் சிலர் காயமடைந்தனர்.

காதலிக்காக லேப்டாப்கள் திருடிய பட்டதாரி கைது

கன்னுார்-கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கன்னுார் மாவட்டத்தில் உள்ள பரியாரம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், மருத்துவ மாணவரின் 'லேப்டாப்', சமீபத்தில் திருடு போனது. இந்த திருட்டு வழக்கில், தமிழ் செல்வம், 25, என்ற தமிழகத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி, சில தினங்களுக்கு முன், கைது செய்யப்பட்டார்.

இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு மாநிலங்களில் பயிலும் மருத்துவ மாணவர்களின் நுாற்றுக்கணக்கான லேப்டாப்களை, இவர் திருடி வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.கடந்த 2015ம் ஆண்டு, இவரின் காதலியிடம் மருத்துவ மாணவர்கள் தவறாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனால், ஒட்டுமொத்த மருத்துவ சமூக மாணவர்கள் மீதும், தமிழ் செல்வத்துக்கு வெறுப்புணர்வு ஏற்பட்டுள்ளது.எனவே, மருத்துவ மாணவர்களை பழிவாங்கும் விதமாக, அவர்களின் லேப்டாப்களை இவர் திருடி வந்துள்ளார். லேப்டாப்கள் திருட்டு வழக்கில், பல மாநிலங்களில், இவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


தமிழக நிகழ்வுகள்

நரிக் குறவர்களை சுட்டவர்களுக்கு வலை

அச்சிறுப்பாக்கம்--அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், சிறுகரணை கிராமத்தில், 40 நரிக்குறவர் குடும்பத்தினர் வசிக்கின்றனர். முயல், காடை, கவுதாரி உள்ளிட்ட பறவைகளை வேட்டையாடி விற்பது இவர்களது தொழில்.இப்பகுதியைச் சேர்ந்த முத்து, 42, என்பவர், நேற்று அதிகாலை வீட்டில் இருந்து, கோட்டைபுஞ்சை கிராமத்தை நோக்கி, வேட்டைக்காக வயல் வழியாக நடந்து சென்றார்.அப்போது, அங்கு மது அருந்திய மூவர், முத்து வைத்திருத்த துப்பாக்கியை கேட்டுள்ளனர். அவர் மறுக்கவே, அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த மூவரில் ஒருவர், முத்துவின் துப்பாக்கியை பறித்து, அவரை சுட்டு, அங்கிருந்து அனைவரும் தப்பிச் சென்றனர்.காயம்பட்டு கிடந்த முத்துவை, அவ்வழியே சென்றோர் மீட்டு, மேல்மருவத்துார் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். முத்து புகாரை வைத்து, துப்பாக்கியால் சுட்ட நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

டுபாக்கூர் மந்திரியை காரணம் காட்டி மகளிரிடம் ரூ 10 லட்சம் அபேஸ்

சென்னை:முன்னாள் அமைச்சரின் வலது கரம் எனக் கூறி, அவரது சிபாரிசில், கூட்டுறவு வங்கியில் வேலை வாங்கித் தருவதாக, 10 லட்சம் ரூபாய் சுருட்டிய நபர் மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மாதவரம், பால்பண்ணை குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி, 20. இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார்:என் சொந்த ஊர், திருச்சி மாவட்டம், துறையூர், சொக்கநாதபுரம். சென்னை, மாதவரத்தில், மளிகை கடை நடத்தி வரும் அக்கா வீட்டில் தங்கி உள்ளேன். அக்காவின் கடைக்கு, அதே பகுதியைச் சேர்ந்த சத்தியநாராயணன் என்பவர் வருவார்.

தன்னை ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனின் தம்பி என அறிமுகம் செய்தார். 'கூட்டுறவு துறை அமைச்சராக இருந்த ராஜு, என்னுடன் நெருங்கி பழகுவார். அவருக்கு நான் தான் வலது கரம்' எனக் கூறியவர், மந்திரி சிபாரிசின்படி, மாநில தலைமை கூட்டுறவு வங்கியில், உதவி கணக்காளர் வேலை வாங்கித் தருவதாக கூறினார்.அவரை நம்பி நானும், எங்கள் பகுதியைச் சேர்ந்த சம்பூர்ணம், பத்மாவதி ஆகியோரும் 10 லட்சம் ரூபாய் கொடுத்தோம்.

எங்களது கல்வி சான்றிதழ் நகலை பெற்றவர், அதன் பின்பகுதியில் ஒட்டப்பட்டு இருந்த, எங்கள் படத்தின் மேல், அமைச்சர் பச்சை நிறத்தில் கையெழுத்துப் போட்டு விட்டார் என, காண்பித்தார்.அதன்பின், 'வேலை கிடைத்து விட்டது. முதல்வரின் உதவியாளர், 'வாட்ஸ் ஆப்'பில், தகவல் அனுப்பி இருக்கிறார்' எனக் கூறினார்.'மாநில தலைமை கூட்டுறவு வங்கிக்கு, அமைச்சர் வருகிறார். வேலை வாங்கி தந்தமைக்காக, அவருக்கு நன்றி தெரிவித்து, சால்வை அணிவித்து, பூங்கொத்து தர வேண்டும்' என, எங்களை அழைத்துச் சென்றார்.

அங்கு, அரசியல்வாதி போல இருந்த நபரை காட்டி, இவர் தான் கூட்டுறவு துறை அமைச்சர் எனக் கூறி, நன்றி தெரிவிக்க வைத்தார். எங்களுக்கு, எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் அன்று, பணி உறுதி சான்றிதழ் வழங்க இருப்பதாக, முதல்வராக இருந்த பழனிசாமி., துணை முதல்வர் பன்னீர்செல்வம்., ஆகியோர் கையெழுத்திட்ட, அழைப்பு கடிதத்தை வழங்கினார்.

அதன்பின், தலைமறைவாகி விட்டார். சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று கேட்டபோது தான், நாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது. சத்தியநாராயணன் மீது சட்ட நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தர வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

ஆற்றில் மூழ்கி 4 பேர் பலி

திண்டுக்கல்:திண்டுக்கல் - கரூர் சாலையிலுள்ள என்.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல், 30; அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர். இவரது மனைவி அர்ச்சனா, 22. இவர்களது வீட்டிற்கு, உறவினர் மகள் ஐஸ்வர்யா, 14, விடுமுறைக்காக வந்துள்ளார்.

சக்திவேல், தன் மனைவி அர்ச்சனா, அண்ணன் தீனதயாளன் மகள் சத்யபாரதி, 11, ஐஸ்வர்யா ஆகியோருடன் சந்தனவர்த்தினி ஆற்றிலுள்ள குட்டையில் குளிக்க நேற்று காலை சென்றார்.நால்வரும் குட்டையில் குளித்த போது சிறுமியர் இருவரும் தண்ணீரில் மூழ்கினர். சக்திவேல், அர்ச்சனா சிறுமியரை மீட்க முயற்சித்தனர். இதில், நான்கு பேரும் தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.

நூற்பாலையில் தீ: கழிவு பஞ்சு நாசம்

அவிநாசி : அவிநாசி அருகே, ஆலத்துார் மேடு பகுதியில் உள்ள ஒரு நுாற்பாலை வளாகத்தில், பஞ்சு குடோன் உள்ளது. நேற்று காலை, இங்கு திடீரென தீப்பிடித்தது.

ஊழியர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டும், தீ, மளமளவென பரவியது.அங்கு வந்த அவிநாசி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ராதாகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.இதில், 'லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பஞ்சுக்கழிவு சேதமாகியிருக்கலாம்' என கூறப்படுகிறது. தீவிபத்துக்கான காரணம் குறித்து, அவிநாசி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


latest tamil news


கிணற்றில் தவறி விழுந்த அண்ணன் தங்கை பலி

விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த அண்ணன், தங்கை இறந்தனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த சித்தணி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார், 30; கூலித் தொழிலாளி. இவரது மனைவி சங்கரி, 25; மகன் தினேஷ், 5; மகள் சத்யஸ்ரீ, 4.ஆசூர் கிராமத்தில் சங்கரியின் பெரியம்மா கரும காரியம் நடந்தது. அதில் பங்கேற்க குடும்பத்துடன் ஆசூர் சென்றனர். அங்கு நேற்று மாலை, 4:00 மணிஅளவில் தினேஷ், சத்யஸ்ரீ விளையாடிக் கொண்டுஇருந்தனர்.

மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து, பெற்றோருக்கு தெரியாமல் அருகில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றுஉள்ளனர். கிணற்றில் இறங்கிய தினேஷ், சத்யஸ்ரீ இருவரும் நீரில் மூழ்கினர். மற்ற சிறுவர்கள் ஓடி வந்து விபரத்தை கூறியுள்ளனர். அப்பகுதி மக்கள் கிணற்றில் இறங்கி, தினேஷ், சத்யஸ்ரீ ஆகியோரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருவரையும் பரிசோதித்த டாக்டர், இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

மாமியாரை தவிக்க விட்ட மருமகள்

தஞ்சாவூர்:குடும்ப சண்டையால், மாமியாரை கும்பகோணம் கோவில் வாசலில் விட்டு சென்ற மருமகள், மூன்று நாட்களுக்கு பின் மனம் திருந்தி, வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வெள்ளனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் மார்க்கண்டன்; மனைவி ராதா. நான்கு நாட்களுக்கு முன், ராதாவிற்கும், அவரது மாமியாரான சுசிலா, 70, என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த ராதா, மாமியாரை காரில் ஏற்றி, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள கரும்பாயிரம் விநாயகர் கோவில் வாசலில் விட்டு சென்று விட்டார். மூதாட்டியான சுசிலா சாப்பிடாமல், துாங்காமல் அழுது கொண்டிருந்துள்ளார். அப்பகுதி ஆட்டோ டிரைவர்கள் சிலர், சுசிலாவிற்கு மூன்று நாட்களாக உணவு வழங்கி வந்துஉள்ளனர். நேற்று காலை மூதாட்டியை, திருவலஞ்சுழியில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்தனர்.

சுசிலா படத்தை, சமூக வலைதளத்திலும் பதிவிட்டனர். இதை பார்த்த சுசிலாவின் பேரன் வினோத்குமார், தன் அம்மா ராதாவிடம் காண்பித்து, பாட்டியை அழைத்து வரவேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.இதனால் மனம் மாறிய ராதா, நேற்று மதியம் மகனுடன் கும்பகோணம் வந்து, சுசிலாவிடம் மன்னிப்பு கேட்டு, அவரை மீண்டும் ஊருக்கு அழைத்து சென்றார்.


latest tamil news


ஆட்டோ மீது லாரி மோதி விபத்து உடல் நசுங்கி 3 பேர் பரிதாப பலி

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அருகே, ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் மூவர் உடல் நசுங்கி இறந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆலத்துாரைச் சேர்ந்தவர் மணிகண்டன், 35; ஆட்டோ டிரைவர்.இவர் நேற்று மதியம், 12:15 மணியளவில் அதே ஊரைச் சேர்ந்த அ.ம.மு.க., ஒன்றிய நிர்வாகி ராஜேந்திரன், 42; சரவணன், 37, ஆகியோருடன் ஆட்டோவில் சங்கராபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.ஆலத்துார் இந்தியன் வங்கி அருகே சிமென்ட் லோடுடன் சங்கராபுரம் நோக்கிச் சென்ற லாரி, ஆட்டோ மீது லாரி மோதியது. இதில், ஆட்டோவில் பயணித்த மூவரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். தப்பிய லாரி டிரைவரை, கள்ளக்குறிச்சி போலீசார் தேடி வருகின்றனர்.

இருவர் பலி: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த கார் டிரைவர் ஹரிபிரசாந்த், 27. இவரது நண்பர் இளையநம்பி, 25, உள்ளிட்ட நான்கு பேருடன் திண்டுக்கல் வந்தார். நேற்று காலை காரில் கோபிசெட்டிபாளையம் புறப்பட்டனர்.வேடசந்துார் கல்வார்பட்டி அருகே, டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார், பாலத்தின் மீது மோதி கவிழ்ந்தது. டிரைவர் ஹரிபிரசாந்த், இளையநம்பி உயிரிழந்தனர்.

ஆபாச தகவல்கள் சிவசங்கர் பாபா அனுப்பியதற்கு ஆதாரங்கள் போலீசார் சேகரிப்பு
சென்னை:'போக்சோ' வழக்கில் சிக்கிய சிவசங்கர் பாபா, பள்ளி மாணவியருக்கு ஆபாச தகவல்கள் அனுப்பியதற்கான ஆதாரங்கள் சிக்கி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

சென்னை, கேளம்பாக்கம், புதுப்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா, 73.இவர், பள்ளி மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, 'போக்சோ' வழக்கில், சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் டில்லியில் கைது செய்யப்பட்டார்.பின், சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்ட சிவசங்கர் பாபாவை, மூன்று நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர்.

நேற்று முன்தினம் பள்ளிக்கு அழைத்துச் சென்று, சொகுசு அறையில் இருந்த கணினி, மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து, ஆய்வு செய்தனர்.அப்போது சிவசங்கர் பாபா, மாணவியர் சிலருக்கு ஆபாச தகவல்கள், 'ஏ ஜோக்ஸ்' மற்றும் வீடியோக்கள் அனுப்பி இருக்கும் ஆதாரங்கள் சிக்கி இருப்பதாக, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.போலீஸ் விசாரணைக்கு சிவசங்கர் பாபா முழு ஒத்துழைப்பு அளித்துள்ளார். போலீஸ் காவல் முடிந்து, அவர் நேற்று மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆசிரியைக்கு நிபந்தனை ஜாமின்

சிவசங்கர் பாபாவுக்கு உதவியாக இருந்து கைதான ஆசிரியை சுஷ்மிதா, ஜாமின் கோரி செங்கல்பட்டு முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை நேற்று விசாரித்த, நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா, ஆசிரியை சுஷ்மிதா தினமும் காலை, 10:30 மணிக்கு, செங்கல்பட்டு கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன், ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X