கோடநாடு எஸ்டேட்டை ஏலம் விடுமா தமிழக அரசு?: ரூ.1,000 கோடி அரசு கஜானாவில் சேர வாய்ப்பு

Updated : ஜூலை 01, 2021 | Added : ஜூலை 01, 2021 | கருத்துகள் (145)
Advertisement
மக்களால் நான்...மக்களுக்காகவே நான்!மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தன் வாழ்வின் இறுதிக்காலத்தில் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்த வார்த்தைகள் இவை. இந்த வார்த்தைகளை நம்பித்தான், அவரை தொடர்ச்சி யாக இரண்டாம் முறையாக ஆட்சிப்பீடத்தில் அமர வைத்தனர் தமிழக மக்கள்.அவர் ஆறே மாதங்களில் விட்டுச் சென்ற ஆட்சியைத்தான், 'அம்மா ஆட்சி' என்று சொல்லி, அ.தி.மு.க., தலைவர்கள்
kodanadu estate, tamil nadu, auction, கோடநாடு, எஸ்டேட், ஏலம், விடுமா, தமிழகம்


மக்களால் நான்...மக்களுக்காகவே நான்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தன் வாழ்வின் இறுதிக்காலத்தில் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்த வார்த்தைகள் இவை. இந்த வார்த்தைகளை நம்பித்தான், அவரை தொடர்ச்சி யாக இரண்டாம் முறையாக ஆட்சிப்பீடத்தில் அமர வைத்தனர் தமிழக மக்கள்.அவர் ஆறே மாதங்களில் விட்டுச் சென்ற ஆட்சியைத்தான், 'அம்மா ஆட்சி' என்று சொல்லி, அ.தி.மு.க., தலைவர்கள் ஐந்தாண்டும் முழுமையாக ஆண்டனர்; அதனால் கிடைக்கும் எல்லா நன்மைகளையும் அனுபவித்தனர்.

ஆனால் 'மக்களால் நான் மக்களுக்காகவே நான்' என்று சொன்னதற்கான அர்த்தத்தை, உண்மையாக்குவதற்கு அவர்கள் முயற்சி செய்யவே இல்லை. ஜெயலலிதாவினால் கிடைத்த பதவிக்காக நன்றிக்கடன் செலுத்த அரசு கஜானாவிலிருந்து பணத்தை எடுத்து, 80 கோடி ரூபாய் செலவழித்து, அவருடைய சமாதியை அழகுபடுத்தினர்; அவருடைய சொந்த வீட்டை அரசுடைமையாக்கி, நினைவில்லமாக மாற்றினர். அதனால் மக்களுக்கு என்ன பயன்?


கருவில் கலைந்த 'அம்மா அறக்கட்டளை!'

ஜெயலலிதா இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், தமிழக மக்களுக்குதான் தன் சொத்துக்களை எழுதி வைத்திருக்கக்கூடும். அவர் உயிருடன் இருக்கும்போது தன் சொத்துக்களை விற்று, 'அம்மா அறக்கட்டளை' என்ற பெயரில் ஓர் அறக்கட்டளையை நிறுவி, ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆண்டுதோறும் பல ஆயிரம் மக்களுக்கு உதவ வேண்டுமென்று அவர் நினைத்ததாகவும் கூறப்படுகிறது.

அது உண்மையாக இருக்கவும் வாய்ப்புண்டு. ஏனெனில், ஜெயலலிதா கொண்டு வந்த 'தொட்டில் குழந்தை திட்டம், இலவச சைக்கிள், விலையில்லா மடிக்கணினி' போன்ற திட்டங்கள், அவர் வெறும் வாக்கு அரசியலுக்காக மட்டுமே கொண்டு வந்த திட்டங்களில்லை; தமிழக மக்கள் மீது அவருக்கு இருந்த உண்மையான அக்கறையின் வெளிப்பாடுதான்.ஜெயலலிதாவின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டிய அ.தி.மு.க., தலைவர்கள், தங்கள் ஆட்சிக்காலத்தில் அதைச் செய்யவில்லை. சட்டப்படியாவது அதை அவர்கள் செய்திருக்க வேண்டும்.

ஏனெனில், சுப்ரீம் கோர்ட்டில் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பின்படி, சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்ட அனைத்து சொத்துக்களும், அப்போதே அரசுடைமையாக்கப்பட்டிருக்க வேண்டும். குற்றவியல் நடைமுறைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி, அந்த சொத்துக்களை பறிமுதல் செய்து ஏலம் விட்டு அரசு கஜானாவில்சேர்த்திருக்க வேண்டும்.


latest tamil newsஅல்லது முதற்கட்டமாக இவற்றை அரசுடைமையாக்கி, அவற்றில் வரும் வருவாயை அரசுக்குக் கிடைக்க வழி வகை செய்திருக்க வேண்டும். இவை எதையுமே அ.தி.மு.க., அரசு செய்யவில்லை. அந்த சொத்துக்கள் அனைத்தையும் சசிகலாவின் உறவினர்கள்தான் நான்காண்டுகளாக ஆண்டு அனுபவித்து வந்தனர். பல சொத்துக்கள் பார்ப்பாரின்றிக் கிடந்தன.சிறைவாசத்துக்குப் பின், சசிகலா விடுதலையாகி, சென்னைக்கு வருவதற்கு முதல் நாளில், அரசியல் காரணத்துக்காக சில அவசர நடவடிக்கைகளை அரைகுறையாக எடுத்தது அ.தி.மு.க., அரசு.


அவசரமாக அரசுடைமை

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், துாத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களில், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் பெயர்களில் இருந்த 100க்கும் மேற்பட்ட சொத்துக்கள் அரசுடைமை ஆக்கப்பட்டன. துாத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 1050 ஏக்கர் நிலம் அரசுடைமை ஆக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தான் அறிவித்தனர்.

ஆனால், 900 ஏக்கர் பரப்பளவுள்ள கோடநாடு எஸ்டேட் மற்றும் 113 ஏக்கர் பரப்பளவுள்ள சிறுதாவூர் பங்களா ஆகிய இரண்டு சொத்துக்களை, பினாமி சொத்து பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் முடக்கி விட்டதாக கடந்த ஆண்டு அக்டோபரில் வருமானவரித்துறை அறிவித்தது. இதற்கான நோட்டீசை அந்த பங்களாக்களில் ஒட்டியதோடு, முடக்கப்பட்ட விபரமும் சார் - பதிவாளர்களுக்கு அனுப்பப்பட்டது. அதற்குப் பின்னும் இந்த சொத்துக்கள் உட்பட ஏராளமான சொத்துக்கள், சசிகலாவால் நியமித்தவர்களின் பராமரிப்பில்தான் உள்ளன.

மற்ற மாவட்ட கலெக்டர்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் பெயர்களிலான சொத்துக்களை அரசுடைமை ஆக்கியதாக அறிவித்த நிலையில், கோடநாடுஎஸ்டேட்டை அரசுடைமை ஆக்கியதாக, நீலகிரி கலெக்டர் அறிவிக்கவில்லை.இதுபற்றி அப்போதைய முதல்வர் இ.பி.எஸ்.,சிடம் கேட்டதற்கு, 'அதை நீங்கள் அந்த கலெக்டரிடம்தான் கேட்க வேண்டும்' என்றார்.

ஆனால் அ.தி.மு.க., அரசு இருந்தவரை, நீலகிரி கலெக்டர் அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று, 50 நாட்களை நெருங்கும் நிலையிலும், கோடநாடு எஸ்டேட்டை அரசுடைமையாக்க எந்த நடவடிக்கையையும் நீலகிரி மாவட்டநிர்வாகம் எடுக்கவில்லை.

இதுபற்றி நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் கேட்டதற்கு, ''இதுபோன்ற எந்த அறிவுறுத்தல்களையும் நான் அரசிடமிருந்து பெறவில்லை,'' என்று சுருக்கமாக பதிலளித்தார்.கோடநாடு எஸ்டேட்டை அரசுடைமை ஆக்காததற்கு, அங்கு 2017 ஏப்ரல் 24 அன்று நடந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்பான வழக்கும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. மற்றொரு காரணமும் சொல்லப் படுகிறது.

கோடநாடு எஸ்டேட் வாங்கப்பட்டபோது அதன் பரப்பு, 900 ஏக்கர். இப்போதிருப்பது ஆயிரம் ஏக்கருக்கும் அதிகம். இணைத்த நிலங்களுக்கு முறையான ஆவணங்கள் இல்லாததும், அரசுடைமை ஆக்காமலிருக்கக் காரணமாக இருக்கலாம் என்கின்றனர் இவ்வழக்கை கூர்ந்து கவனிக்கும் நீலகிரி வழக்கறிஞர்கள் சிலர்.


எந்தெந்த சொத்துக்கள் வாரிசுகளுக்கு?

அரசுடைமை ஆக்கப்படாத ஜெயலலிதாவின் சொத்துக்கள் யாருக்குப் போகுமென்ற கேள்வி எழுகிறது. ஹிந்து வாரிசுரிமை சட்டப்படி, ஜெயலலிதாவின்அண்ணன் மகள், மகன் இருவரும்தான் அவரின் வாரிசுகள். ஆனாலும், ஜெயலலிதா முதல்வராகும் முன்பு, அவருக்கிருந்த பூர்வீகச்சொத்து, சினிமாவில் சம்பாதித்த சொத்துக்களுக்கே இவர்கள் உரிமை கோரலாம். முதல்வரான பின் வாங்கப்பட்டு, சொத்துக் குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்ட சொத்துக்களுக்கு உரிமை கோர முடியாது என்கின்றனர் சட்ட நிபுணர்கள்.

இந்த சொத்துக்களின் சந்தை மதிப்பு பல ஆயிரம் கோடியைத் தாண்டும். இந்த நிதிப்பின்புலத்தில்தான், சசிகலாவின் உறவினர்கள், தினகரன், திவாகரன் என பலரும் கம்பெனி ஆரம்பிப்பது போல தனித்தனியாக கட்சி ஆரம்பித்து நடத்தி வருகின்றனர். பணத்தைத் தண்ணீராகச் செலவழிக்கின்றனர். சசிகலா மீண்டும் அ.தி.மு.க.,வை அபகரிக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார். எனவே, ஊழலில் சேர்த்த பணம் மீண்டும் ஒரு ஊழல் ஆட்சிக்கு விதை போடுவதற்கு அனுமதிக்கக்கூடாது.

தமிழக அரசு தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் தவிக்கிறது. ஆறு லட்சம் கோடி கடன் இருக்கிறது. இந்த சொத்துக்கள் அனைத்தையும் ஏலத்தில் விட்டால் பல ஆயிரம் கோடி கடனை அடைக்கலாம். அல்லது மக்கள் நலத்திட்டங்களுக்கும், வளர்ச்சிப் பணிகளுக்கும் பயன்படுத்தலாம். எனவே, இந்த விஷயத்தில் எந்த தயவு தாட்சண்யமும் பார்க்காமல், அரசியலும் செய்யாமல், வழக்கில் இணைக்கப்பட்ட ஊழல் சொத்துக்களை ஏலத்தில் விடுவதற்கு தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அது அரசின் கடமையும் கூட.


மதிப்பிடவே முடியாத கொடநாடு எஸ்டேட்!

ஒரு காலத்தில் அடர்ந்த சோலைக்காடுகளைக் கொண்ட பகுதியாக இருந்தது கோடநாடு. ஆங்கிலேயர் காலத்தில் இப்பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் பரப்புள்ள காடுகள் அழிக்கப்பட்டு, தேயிலைத் தோட்டங்களாக மாற்றப்பட்டன.

அதிலொன்றுதான் கோடநாடு எஸ்டேட். இயற்கையாக அமைந்த 11 ஏக்கர் ஏரி, அழகான மலைச்சரிவுகள் என எழில் கொஞ்சும் இந்த எஸ்டேட், 1860களில் துவங்கி நுாறாண்டுகளுக்கும் மேலாக, பல்வேறு ஆங்கிலேயர்களின் குடும்பங்களின் கைகளில் மாறிவந்தது.சுதந்திரத்திற்குப் பின், 1955 ஆம் ஆண்டிலிருந்து ரஜினிகாந்த் மத்வானி என்பவரின் குடும்பத்திடமிருந்த இந்த எஸ்டேட்டை, 1975 ஆம் ஆண்டில் கிரேக் ஜோன் என்ற ஆங்கிலேயர் வாங்கினார். சில ஏக்கர் நிலங்களை விற்ற பின் மீதம் 900 ஏக்கர் எஸ்டேட் இருந்தது.

கடந்த 1994 ஆம் ஆண்டில் இந்த எஸ்டேட்டை கிரேக் ஜோன்ஸ் குடும்பத்திடமிருந்து வாங்க, சசிகலா, பாஸ்கரன் போன்றோர் முயற்சி செய்துள்ளனர்.ஜோன்ஸ் குடும்பத்துக்கு விருப்பமில்லாத நிலையில், மிரட்டலும் நடந்துள்ளது. அதன்பின், 'உடையார்' மூலமாக பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

மூன்று கோடி வங்கிக்கடன் இருந்ததால், 9 கோடியே 60 லட்ச ரூபாய் விலை கூறியுள்ளார் ஜோன்ஸ். வங்கிக்கடனை அடைப்பதாகக் கூறி, ஏழரை கோடி ரூபாய் கொடுத்து 'உடையார்' மூலமாக இந்த சொத்துக்களை ஜெயலலிதாவும், சசிகலாவும் வாங்கியுள்ளனர்.சொன்னபடி வங்கிக்கடனையும் அடைக்கவில்லை. ஆனால் அப்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால், கிடைத்தவரை லாபம் என்று ஏழரை கோடி ரூபாயை வாங்கிக் கொண்டு, எஸ்டேட்டைக் கொடுத்துவிட்டு, கர்நாடக மாநிலம் கூர்க் பகுதிக்கு இடம் பெயர்ந்தது ஜோன்ஸ் குடும்பம்.

அதன்பின் இந்த எஸ்டேட்டில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, தினகரன் பங்குதாரர்களாக இருந்துள்ளனர்.சொத்துக்குவிப்பு வழக்கின்போது, இந்த நிலைதான் இருந்தது. வழக்கு முடிவுக்கே வராத நிலையில், 2016 ஏப்.,1ல் பங்குதாரர் நிறுவனமாக மாற்றப்பட்டதாக சசிகலா கூறியுள்ளார். சட்டப்படி இது யாருக்குச் சொந்தம் என்பதை அரசுதான் இனி முடிவு செய்ய வேண்டும். இப்போது இதன் மதிப்பு, எவ்வளவு இருக்கும் என்பதுதான் பலருடைய கேள்வி. உண்மையில்

கோடநாடு எஸ்டேட்டுக்கு யாராலும் மதிப்பை நிர்ணயிக்கவே முடியாது என்கின்றனர் இந்த எஸ்டேட் பற்றி நன்கு விபரம் அறிந்தவர்கள்.முதலில் இந்த எஸ்டேட்டின் பரப்பே, ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாகிவிட்டது. அருகிலுள்ள 650 ஏக்கர் ஹர்சன் எஸ்டேட்டும், அதைச் சுற்றிலுமுள்ள சின்னச் சின்ன எஸ்டேட்டுகளும் வாங்கப்பட்டு, 'கிரீன் டீ எஸ்டேட்' என்று பெயர்மாற்றப்பட்டுள்ளன.

ஒட்டு மொத்தமாக இவற்றின் அளவு ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக இருக்கும். இவற்றைத் தவிர்த்து அளக்கரையில் 300 ஏக்கர் எஸ்டேட்டும் சசிகலா குடும்பத்தால் வாங்கப்பட்டுள்ளது.பொதுவாக எஸ்டேட் என்றால், தேயிலையின் தரம், பிராண்ட், ஏற்றுமதி வர்த்தகம் போன்ற வர்த்தக வாய்ப்புகளை வைத்து ஏக்கருக்கு மதிப்பு கணக்கிடப்படும். ஆனால், கோடநாடு எஸ்டேட்டுக்கு இது எதுவும் பொருந்தாது என சொல்லப்படுகிறது. அந்தளவிற்கு அந்த எஸ்டேட்டின் ஒவ்வொரு அங்குலமும் மதிப்பு கூட்டப்பட்டுள்ளது.

உள்ளே 30 கி.மீ., துாரத்துக்கு, சர்வதேச தரத்தில் சிமென்ட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சாலையோரங்களில், கனமான பாறைகளால் 'கான்கிரீட்' தடுப்புச்சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. அங்குள்ள 11 ஏக்கர் ஏரி துார் வாரப்பட்டு, படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது.

அதையொட்டி பல ஏக்கர் பரப்பில் மலர்த்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு பிரமாண்டமான 'டீ பேக்டரி' அங்குள்ளது. அதில் உள்ள இயந்திரங்கள் அதிநவீனமானவை. எவ்வளவு ஆயிரம் கிலோ தேயிலையையும் அரைக்கலாம்.ஜெயலலிதா தங்கிய கோடநாடு பங்களா மொத்தம் 30 ஆயிரம் சதுர அடி பரப்பிலானது. பிரதான படுக்கை அறை மட்டும் 60 அடிக்கு 40 அடி பரப்பளவு கொண்டது. எட்டு விருந்தினர் படுக்கை அறைகள், ஒவ்வொன்றும் தலா 700 சதுர அடி கொண்டவை. இத்தாலியன்மார்பிளிலேயே மிக உயர்ந்த ரக 'மார்பிள்' பதிக்கப்பட்டுள்ளது.


latest tamil newsஅதுமட்டுமின்றி, இத்தாலியில் இருந்து உயர்ந்த விலை சோபா மற்றும் அலங்கார விளக்குகள் என, பல லட்சம் மதிப்பிலான பொருட்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள மரவேலைகள் அனைத்தும் ஈட்டி (ரோஸ்வுட்) மரத்தால் ஆனவை. அவற்றின் மதிப்பே பல கோடிகள் பெறுமானது. அலங்கார வேலைப்பாடுகளின் மதிப்பும் அப்படித்தான்.

தொழிலாளர் குடியிருப்பு, செயலர்கள் குடியிருப்புகள் தனித்தனியாக உள்ளன. ஒரே நேரத்தில் மூவாயிரம் பேர் அமரக்கூடிய ஆடிட்டோரியம், டைனிங் ஹால் கொண்ட 'மெகா' கட்டடம் உள்ளது. கோடநாடு எஸ்டேட்டிலிருந்து கிரீன் டீ எஸ்டேட்டுக்கும் இடையில் அடர்ந்த வனச்சோலைகளை ஊடுருவிச் செல்லும் சுரங்கம் போன்ற இணைப்புப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. நுாறடிக்கு நுாறடி அளவில் ஹெலிபேடு இருந்தால் போதுமென்றாலும், அங்கு 100 மீட்டருக்கு 100 மீட்டர் அளவில், கால்பந்து மைதானம் அளவுக்கு பிரமாண்ட ஹெலிபேடு கட்டப்பட்டுள்ளது.

காவிரியில் மணல் அள்ளும் உரிமை, கூடலுார் வனங்களில் ஈட்டி மரங்களை அனுமதியின்றி வெட்டிக்கடத்தும் உரிமை பெற்ற இரண்டு பெரும்புள்ளிகள்தான் இத்தனை கோடியைக் கொட்டி எஸ்டேட்டை வார்த்துள்ளனர்.

இந்த எஸ்டேட் வாங்கப்பட்ட 1995லிருந்து ஜெயலலிதா மரணமடைந்த 2016 ஆம் ஆண்டு வரையிலும், பெரும்பாலான நாட்களில் பத்திலிருந்து 15 லோடு லாரிகளில் மணல், செங்கல், கற்கள், மரம் என எஸ்டேட்டிற்குக் கொண்டு செல்லப்படும் அளவுக்கு, அங்கு வேலைகள் நடந்திருக்கின்றன.

அதனால் கோடநாடு எஸ்டேட்டிற்கு யாராலும் மதிப்புப் போடவே முடியாது. கோடநாடு எஸ்டேட்டின் இன்றைய சந்தை மதிப்பை கணக்கிட்டால், குறைந்தபட்சமே ஆயிரம் கோடி என்றுதான் மதிப்பிட வேண்டும்; அதிகபட்சமாகக் கணக்கிட்டால் அது இரட்டிப்பாகலாம். இந்த எஸ்டேட்டை சர்வதேச அளவில் ஏலம் விட்டால், வெளிநாட்டுக்காரர்களும் வாங்க முடியும் என்பதுதான் இவர்களின் கருத்தாகவுள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி இருக்கும்போது, 2014 மார்ச் 24 அன்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த வாதங்களை வைத்து 'ஜெயலலிதா ஊழலில் சேர்த்த சொத்துக்களின் மதிப்பு 4000 கோடி ரூபாய் என்று அரசு வழக்கறிஞரே சொல்லியிருக்கிறார்' என்று கேள்வி பதில் பாணி அறிக்கை விட்டார். அப்போதே அவ்வளவு என்றால் இப்போது...?

Advertisement
வாசகர் கருத்து (145)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri - Ghisin,கோஸ்டாரிகா
01-ஜூலை-202122:24:05 IST Report Abuse
Sri Good suggestion..please nationalise all political parties assets they have come to serve people ...govt should take over RS 2000cr Anna arivalayam congress properties worth RS 1000 crores like 100 grounds in Mount road, satyamurty Bhavan , Ezhaigal bangalqn CPI office worth RS 509 fr , Kqmqlalayam worth rs50 cr immediately and sp it for People's welfarein this pandemic
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
01-ஜூலை-202121:49:29 IST Report Abuse
Pugazh V தலபுராணம் சார்... ஜெலுசில் இன்னும் பத்து டன் ஆர்டர் குடுத்துடுங்கோ...பாவம் கதறி பதறி புலம்பி..வயறு எரியறதுகள்
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
01-ஜூலை-202121:47:06 IST Report Abuse
Pugazh V யார் எப்படியாகினும், இறந்தவர்களுக்கு, மாண்புமிகு முன்னாள்...என்பதற்கு மரியாதை தருவது நல்லது, அதுவே தமிழர்களின் பண்பாடு//.நான் மேலும் எழுதியது:: " இந்த வரிகளை கோகாஸ் கில்விங் கொக்கி குமாரு க்கும் மற்றும் உள்ள நாகரிகமற்றதும் அவமரியாதை யானதுமான. உங்கள் பாஜக. வாசகர்ர்களுக்கும்.சொல்ல வேண்டும்.""
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X