சென்னை,--ரேஷன் கடைகளில், 'பயோமெட்ரிக்' எனப்படும் கைரேகை பதிவு முறை, இன்று முதல் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது.தமிழகத்தில், 'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' திட்டம், 2020 அக்., 1ல் அமல்படுத்தப்பட்டது.

அத்திட்டத்தின் கீழ், பிற மாநிலங்களை சேர்ந்த கார்டுதாரர்கள் அரிசி, கோதுமை வாங்கலாம்.தமிழக கார்டுதாரர்கள், கார்டில் உள்ள குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்கள் மட்டும், பொருட்கள் வாங்குவதை உறுதி செய்ய, கடைகளுக்கு கைரேகை பதிவுடன் கூடிய விற்பனை முனைய கருவிகள் வழங்கப்பட்டன.கார்டுக்கு உரியவர்களின் கைரேகை பதிவு செய்யப்பட்டு, பொருட்கள் வழங்கப்பட்டன. மே மாதம், முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், அரிசி கார்டுதாரர்களுக்கு, கொரோனா நிவாரண தொகையாக, தலா 4,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டார். அதில் முதல் தவணையான 2,000 ரூபாய் அம்மாதமே வழங்கப்பட்டது.
ஜூனில் இரண்டாவது தவணையுடன் 14 வகை மளிகை தொகுப்பும் வழங்கப்பட்டது. அவற்றை கார்டுதாரர்களுக்கு விரைவாக வழங்க, கைரேகை பதிவு முறை நிறுத்தப்பட்டு ரேஷன் கார்டு, 'ஸ்கேன்' செய்யப்பட்டு, நிவாரணங்கள் வழங்கப்பட்டன.கைரேகை பதிவு நிறுத்தத்தால், பிற மாநிலங்களை சேர்ந்த கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்க முடியவில்லை. இரண்டாவது தவணை மற்றும் மளிகை தொகுப்பு வழங்கும் பணி 95 சதவீதம் முடிந்துள்ளது.

இதையடுத்து, இன்று முதல் மீண்டும் கைரேகை பதிவு செய்து, அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது நடைமுறைக்கு வருகிறது.கொரோனா தொற்று பரவல் முழு ஊரடங்கு மற்றும் ஏற்கனவே உள்ள கார்டுதாரர்களுக்கு, நிவாரண உதவிகள் வழங்கப்பட்டதால், மே இரண்டாவது வாரத்தில் இருந்து, புதிய ரேஷன் கார்டுக்கு ஒப்புதல் அளிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.இன்று முதல், கார்டுக்கு ஒப்புதல் அளிப்பது, புதிய ரேஷன் கார்டு அச்சிடுவது ஆகிய பணிகள் மீண்டும் துவங்கப்பட உள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE