ஒகேனக்கல் குடிநீரில், நிலத்தடி நீர் கலக்கப்படுவதால், புளோரைடு பாதிப்பு குறையாமல், மக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாவது, மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை வாயிலாக அம்பலமாகி உள்ளது. ''அறிக்கையின் முழு விபரம் கிடைத்ததும், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தர்மபுரி கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

குடிநீரில் அனுமதிக்கப்பட்ட புளோரைடு அளவு, 1.5 மில்லி கிராம். ஆனால், ஒருங்கிணைந்த தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், 9 முதல், 13 மி.கி., வரை புளோரைடு உள்ளது.இதனால், இம்மாவட்ட மக்கள் எலும்பு, கர்ப்பப்பை பாதிப்பு, பற்கள் பாதிப்பு, தைராய்டு உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டனர். இதை தடுக்க, ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என, மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர்.அடுத்தடுத்து தோல்வி
இதையடுத்து, 1986ல், தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., 120 கோடி ரூபாய் மதிப்பில், ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த அறிக்கை தயாரித்தார். இத்திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை.பின், 1994ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு, 350 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட அறிக்கை தயார் செய்தபோதும், போதிய நிதியுதவி கிடைக்காததால், இத்திட்டம் முடங்கியது.
கடந்த, 2005ல், ஜெ., முதல்வராக இருந்தபோது, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள மூன்று நகராட்சிகள், 17 பேரூராட்சிகள் மற்றும் 18 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள, 6,755 ஊரக குடியிருப்பு மக்களுக்கு, ஒகேனக்கல் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டது.
இதற்காக, 1,005 கோடி ரூபாய் நிதியுதவியுடன், இத்திட்டத்தை நிறைவேற்ற கருத்துரு அனுப்பப்பட்டது. பல்வேறு காரணங்களால், இத்திட்டம் செயல்படுத்த முடியவில்லை. திட்ட மதிப்பீடு தொடர்ந்து உயர்ந்து வந்தது.ஜப்பான் உதவிஇந்நிலையில், ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன், 1,928 கோடி ரூபாய் மதிப்பில், ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கான அடிக்கல்லை, 2008 பிப்., 29ல், அப்போதைய முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார்.
அதைத் தொடர்ந்து, அப்போது துணை முதல்வராக இருந்த ஸ்டாலின், இத்திட்டத்தை தன் நேரடி கண்காணிப்பில் செய்து வந்ததுடன், அடிக்கடி ஒகேனக்கல் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.அதைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த, அ.தி.மு.க., அரசின் முதல்வர் ஜெயலலிதா, ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை, 2013 மே, 29ல் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.இதில், நகர் பகுதியில் இருப்பவர்களுக்கு தலா ஒருவருக்கு, 70 லிட்டர்; கிராம பகுதிகளில் இருப்பவர்களுக்கு, 30 லிட்டர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தணிக்கையில் 'பகீர்!'
ஒகேனக்கல் குடிநீருடன் உள்ளாட்சி, ஊரக பகுதிகளில் நிலத்தடி நீர் கலந்து வழங்கப்பட்டு வருவதால், பொதுமக்கள் தொடர்ந்து, புளோரைடால் பாதிக்கப்பட்டு வருவது, சமீபத்தில், சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட, மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை வாயிலாக தெரியவந்துள்ளது.

திட்டம் துவங்கி மூன்று ஆண்டுகளுக்கு பின்னர், 1,096 பள்ளிகளுக்கு குடிநீர் வழங்கும் நடவடிக்கையை தமிழ்நாடு குடிநீர் வாரியம், 2016 டிசம்பரில் துவங்கியது. இரண்டு மாவட்டங்களிலும், 1.69 லட்சம் பள்ளி மாணவர்கள் உள்பட, 11.94 லட்சம் பேர், புளோரைடால் பாதிக்கப்பட்டவர்கள் என, அடையாளம் காணப்பட்டது.இதில், 2.05 லட்சம் பேருக்கு கால்சியம், விட்டமின் - சி, போலிக் அமில மாத்திரைகள் வழங்க திட்டமிடப்பட்டது. இதில், 36 ஆயிரம் பேர் மட்டுமே பயனடைந்தனர்.
இத்திட்டத்தின் கீழ் பாதுகாப்பான நீர் குறைவான அளவில் வழங்கப்பட்டது. ஆற்று நீருடன், நிலத்தடி நீர் கலப்பு பிரச்னை இருந்ததால், பாதுகாப்பான குடிநீர் வழங்கும் அரசின் நோக்கம் நிறைவேறவில்லை என, தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் உறுதிஇதுகுறித்து, தர்மபுரி கலெக்டர் திவ்யதர்ஷினி கூறுகையில், 'ஒகேனக்கல் குடிநீரில், நிலத்தடி நீர் கலப்பதால் ஏற்படும் புளோரைடு பாதிப்பு தொடர்பான, மத்திய கணக்கு தணிக்கை குறித்த விபரங்கள் கிடைத்தவுடன், அதிலுள்ள குறைபாடுகளை தடுக்க, விரைந்துநடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டியும், ''ஒகேனக்கல் குடிநீரில், நிலத்தடி நீர் கலப்பு, புளோரைடு பாதிப்பு தொடர்பான தணிக்கை விபரங்கள் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தெரிவித்துள்ளார்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE