மதுரை ;மதுரை இதயம் அறக்கட்டளையின் ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி சிவக்குமார் உள்ளிட்டோர், குழந்தைகள் இறந்ததாக பெற்றோரிடம் கூறிவிட்டு ரூ.2 லட்சத்திற்கு விற்றது தெரியவந்துள்ளது. குழந்தைகளை சட்டவிரோதமாக வாங்கிய 2 தம்பதிகள், புரோக்கராக செயல்பட்ட இருவர், ஆதரவற்றோர் இல்ல பொறுப்பாளர் கலைவாணி 33, கைதுசெய்யப்பட்டனர்.
மதுரை ஆயுதப்படை மைதான வளாகத்தில் இந்த இல்லம் செயல்பட்டது. கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஆதரவற்றோரை இங்கு பராமரித்து வந்தனர். இங்கு ஒரு வயது ஆண் குழந்தை மாணிக்கத்துடன் ஐஸ்வர்யாவும், 2 வயது மகள் தனத்துடன் பெங்களூரு ஸ்ரீதேவியும் தங்கியிருந்தனர். மாணிக்கத்திற்கு உடல்நிலை பாதித்ததாக கூறி இல்ல உரிமையாளர் சிவக்குமார், பொறுப்பாளர் மதர்ஷா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது போல் நடித்து 15 ஆண்டுகள் குழந்தை இல்லாத மதுரை இஸ்மாயில்புரம் 4வது தெரு நகை கடை உரிமையாளர் கண்ணன் தம்பதிக்கு ரூ.1.50 லட்சத்திற்கு 100 ரூபாய் பத்திரம் எழுதி விற்றனர்.
சட்டப்படி தத்து கொடுக்க வேண்டும் என கண்ணன் கேட்டதற்கு, 2 மாதத்தில் அதற்கான ஏற்பாட்டை செய்கிறோம் என சமாளித்தனர். மேலும் குழந்தையை ரயில்வே ஸ்டேஷனில் கண்டெடுத்ததாகவும் தெரிவித்தனர். குழந்தையை விற்க புரோக்கராக இருந்தவர் முத்துப்பட்டி ராஜா 36. இவர் ஆதரவற்றோர் இல்லத்திற்கு குடிநீர் கேன் சப்ளை செய்தவர். இவர் வழியாகத்தான் குழந்தை கை மாறியுள்ளது. இதற்கு கமிஷனாக ராஜா ரூ.50 ஆயிரம் பெற்றார்.
![]()
|
ஒரு மாதம் கண்காணிப்போம்
இதற்கிடையே தனது குழந்தை குறித்து கேட்ட ஐஸ்வர்யாவிடம், கொரோனாவால் இறந்துவிட்டதாக கூறி தத்தனேரி சுடுகாட்டிற்கு மதர்ஷா அழைத்துச்சென்று வேறு ஒரு குழந்தையை புதைத்த இடத்தில் இறுதிசடங்கு செய்ய வைத்தார். இதற்காக போலி மின்மயான ரசீது, சிகிச்சை பெற்றதற்கான ரசீது போன்றவற்றை சிவக்குமாரும், மதர்ஷாவும் தயாரித்துள்ளனர். இவ்வழக்கில் இருவரையும் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்ணன், அவரது மனைவி, ராஜா ஆகியோரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர். அதேபோல், சக்கிமங்கலம் எல்.கே.டி., நகர் பட்டறை தொழிலாளி சகுபர் சாதிக், ராணி தம்பதிக்கு ஸ்ரீதேவியின் மகளை விற்றுள்ளனர். இதற்கு பாலமாக இருந்தவர் சொக்கநாதபுரம் செல்வி 43. இவர் இந்திய செஞ்சிலுவை சங்க உறுப்பினர்.
கலெக்டர் அலுவலகத்தில் தினக்கூலியாக இருந்தவர். ஆதரவற்றோரை இதயம் இல்லத்தில் அடிக்கடி சேர்த்து வந்ததால் சிவக்குமாருடன் அறிமுகம் ஏற்பட்டது.கலெக்டர் அலுவலகத்திற்கு அவ்வப்போது சொந்த விஷயமாக வந்த ராணியுடன் செல்விக்கு அறிமுகம் ஏற்பட்டது. குழந்தை இல்லை என்பதை அறிந்து சிவக்குமாரை அறிமுகப்படுத்தியுள்ளார். குழந்தை தனத்தை காண்பித்த சிவக்குமார், 'இக்குழந்தையை வளர்க்க முடியாமல் அவர் தாயார் விட்டுச் சென்றுவிட்டார். ஒருமாதம் வரை குழந்தையை வளர்த்து வாருங்கள். நீங்கள் எப்படி பராமரிக்கிறீர்கள் என்பதை கண்காணித்து குழந்தையை உங்களிடமே கொடுத்து விடுகிறோம்'என தெரிவித்துள்ளார்.
'சூப்பர்' என பாராட்டு
ஜூன் 16ல் குழந்தையை ராணியிடம் கொடுத்துள்ளார். அப்போது பணம் ஏதும் பெறவில்லை. தினமும் குழந்தையை அழகுப்படுத்துவது உட்பட அதன் செயல்பாடுகளை வீடியோ எடுத்து வாட்ஸ் ஆப் மூலம் சிவக்குமாருக்கு ராணி அனுப்பியுள்ளார். 'சூப்பர்' என பாராட்டு தெரிவித்த சிவக்குமார், ஒருவாரத்தில் ராணியை சந்தித்து இல்லத்திற்குமுன் 'செட்' போடவேண்டும். குழந்தையின் தாயாருக்கு உதவ வேண்டும். அதற்கு ரூ.50 ஆயிரம் தரவேண்டும்' எனகேட்டுள்ளார். அந்த தொகையை சில நாட்களுக்கு முன்தான் சிவக்குமாரிடம் ராணி கொடுத்த நிலையில்தான், இவ்வழக்கில் சாதிக், ராணியும் கைது செய்யப்பட்டனர்.
83 பேர் இறப்பிலும் சந்தேகம்
இந்த 'தத்து' நடவடிக்கை எல்லாம் இல்ல ஒருங்கிணைப்பாளராக இருந்த புதுார் பரசுராம்பட்டி கலைவாணிக்கு தெரியும். அவர் கொடுத்த தகவலின்படிதான் குழந்தைகள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டனர். குழந்தைகளை விற்றதற்கு உடந்தையாக இருந்ததாக அவரும் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே ஆதரவற்றோர் இல்லத்தில் இதுவரை 83 பேர் இறந்துள்ளனர். இதில் ஏதும் முறைகேடு நடந்ததா என இறுதி சடங்கு செய்ததற்கான பதிவேடுகளை அதிகாரிகள் ஆய்வுசெய்து வருகின்றனர்.இல்லத்திற்கு 'சீல்' வைக்கப்பட்ட நிலையில், சிவக்குமாரின் மனைவி, மதர்ஷாவின் சகோதரி உள்ளிட்டோரிடம் விசாரணை நடந்து வருகிறது.
அனைத்து காப்பகங்களும் ஆய்வு
கலெக்டர் அனீஷ்சேகர் கூறுகையில், ''குழந்தை விற்பனை தொடர்பாக விசாரணை நடக்கிறது. மாவட்டத்தில் உள்ள முதியோர் இல்லங்கள், குழந்தை காப்பகங்கள் உரிமம் பெற்று இயங்குகின்றனவா என ஆய்வு செய்யப்படும். போலி ஆவணங்கள் தயாரிப்பில் அரசு ஊழியர்களுக்கு தொடர்பு இருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற முடிவு
சிவக்குமார் ஆரம்ப காலத்தில் போட்டோகிராபராக இருந்தவர். சமூகநல ஆர்வலராகவும் இருந்தார். தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆதரவற்றோருக்கு உதவி வந்தார். இதற்காக அறக்கட்டளை ஆரம்பித்து, கொரோனா முதல் அலையின் போது போலீசாருடன் சேர்ந்து சேவை செய்ய ஆரம்பித்தபோது அதிகாரிகளால் கவனிக்கப்பட்டார். இதை தனது முதலீடாக கொண்டு வருவாய் ஈட்ட தொடங்கினார். இவரது பின்னணியை அறியாமலும், உரிமம் பெற்று ஆதரவற்றோர் இல்லம் நடத்துகிறாரா என விசாரிக்காமலும் சிவக்குமாரை கண்மூடித்தனமாக நம்பி அவரது சேவையை பலரிடம் சொல்லி வருவாய் ஈட்ட பெண் போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர் உதவியுள்ளார். தற்போது புதுக்கோட்டையில் பணிபுரியும் அவரிடம் சிவக்குமாரின் அறிமுகம் குறித்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குழந்தை விற்பனை, போலி ஆவணம் என அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ள இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி., வசம் ஒப்படைக்க டி.ஜி.பி., சைலேந்திரபாபுவுக்கு பரிந்துரைப்பது குறித்து கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்ஹா ஆலோசித்து வருகிறார்.
அனுமதி பெறாத காப்பகங்கள் மீது நடவடிக்கை
'அனுமதியின்றி செயல்படும் காப்பகங்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
மதுரையில், தனியார் காப்பகத்தில் இருந்த குழந்தைகள், சட்ட விரோதமாக விற்கப்பட்ட விவகாரத்தில், ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதன் தொடர்ச்சியாக, அனைத்து காப்பகங்களையும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அமைச்சர் கீதாஜீவன் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகங்கள், முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் போன்றவற்றில், சமூக நல அலுவலர்கள் மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தி, 15 நாட்களுக்குள் அறிக்கை தர வேண்டும்.
ஆய்வின் போது, காப்பகங்கள் முறையாக அனுமதி பெற்றுள்ளனவா; காப்பகங்களில் எத்தனை பேர் உள்ளனர்; அவர்களுக்கு போதிய வசதி உள்ளதா, பாதுகாப்பு உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. அவர்கள் தரும் அறிக்கை அடிப்டையில், அனுமதியின்றி செயல்படும் காப்பகங்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE