உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
மணிமேகலை, திருப்பூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது, 'நான் கருணாநிதியின் மகன்...' என, பெருமைப்பட்டு கொள்கிறார். அதில் தவறு ஒன்றும் இல்லை. கொரோனா காலத்தில் தேசமே திண்டாடும் நேரத்தில், தி.மு.க., அரசு, வழிபாட்டு தலங்கள், நுாலகம் ஆகியவற்றை திறப்பதை காட்டிலும், மது கடையை திறந்து விட்டிருப்பது ஒன்றும் பெரிய ஆச்சரியமான விஷயம் கிடையாது. ஏனென்றால், இது அந்த கட்சிக்குரிய பாரம்பரிய திராவிட பண்பாட்டு செயல்முறை!
சட்டசபை தேர்தலுக்கு முன், தி.மு.க., செய்தி தொடர்பு இணை செயலரான தமிழன் பிரசன்னா, 'எங்கள் கட்சியினர் யாராவது மது உற்பத்தி ஆலை நடத்துகின்றனரா?' என கொந்தளித்தார். அடுத்த சில நாட்களிலேயே, கருணாநிதியின் மகள் கனிமொழி, 'தி.மு.க.,வினரால் நடத்தப்படும் மதுபான உற்பத்தி ஆலைகளும், கடைகளும் விரைவில் மூடப்படும்' என வாக்குறுதி கொடுத்தார். தி.மு.க.,வின் வரலாறு தெரிந்தோருக்கு அக்கட்சியினரின் பேச்சு குறித்து நன்கு தெரியும்; சொல்வதை எல்லாம் செய்ய மாட்டார்கள். இருந்தாலும், தி.மு.க.,வினர் நடத்தும் மது உற்பத்தி ஆலைகள் குறித்த பட்டியலை பார்க்கலாம்...

* கடந்த 1989ல், கருணாநிதியின் படங்களை தயாரித்த ஜெயமுருகன், எஸ்.என்.ஜே., என்ற மது உற்பத்தி ஆலையை துவக்கினார்
* கடந்த 1992 செப்., 11ம் தேதி, தென்னை விவசாயி நல வாரிய துணை தலைவர் கிருஷ்ணசாமி மகன் தரணிபதி, 'இம்பீரியல்' மது உற்பத்தி ஆலையை துவக்கினார்
* 2000 பிப்ரவரியில், தி.மு.க.,வின் ஜெகத்ரட்சகன், 'எலைட்' ஆலையை துவக்கினார்
* 2010 அக்., 11ல், தி.மு.க.,வின் டி.ஆர்.பாலு, 'கோல்டன் வாட்ஸ்' மது உற்பத்தி ஆலையை துவக்கினார்
* அதே ஆண்டு, தி.மு.க.,வுக்கு நெருக்கமான வாசுதேவன், 'கால்ஸ்' ஆலையை துவக்கினார்.
மேற்கண்ட மது ஆலைகள் அனைத்தும், கருணாநிதி ஆட்சியில் இருக்கும் போது தான் திறக்கப்பட்டன. மது உற்பத்தி ஆலை மட்டுமல்ல, மது கடைகளின் 'டெண்டர்' உரிமமும், தி.மு.க.,வினருக்கு வாரி வழங்கப்பட்டது.
இப்போது சொல்லுங்கள்... தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், கொரோனா காலத்திலும் 'டாஸ்மாக்' கடையை திறந்து இருப்பதில், பெரிய ஆச்சரியம் ஏதும் இருக்கிறதா? அவர், கருணாநிதியின் மகன் அல்லவா... தந்தையின் ஆட்சியில் திறக்கப்பட்ட மது ஆலைகளை, மகன் ஸ்டாலின் மூடுவார் என எதிர்பார்க்கலாமா?
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE