கரூரில், ஜவுளி, நகைக் கடைகளை திறந்ததால் 52 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் இரண்டாம் கட்ட கொரோனா பரவல் குறைந்து வருவதால், படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இருந்தபோதும் தொற்று, இறப்பு அதிகளவில் இருந்த கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு, சிறிய அளவில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.அதில், ஜூன் 25ல் அரசு அறிவித்த தளர்வுகள்பட்டியலில், பெரிய வணிக வளாகங்கள், ஜவுளிக் கடைகள், நகைக்கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
நடவடிக்கை
ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட, கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள், கொசுவலை உற்பத்தி நிறுவனங்கள், கொரோனா வழிகாட்டுதல் விதிமுறைகளை பின்பற்றப்படாமல் செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில், ஜூன் 27ல் மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை, கரூர் வர்த்தக சங்கத்தைச் சேர்ந்த சிலர் சந்தித்துள்ளனர்.

கடைகளை திறக்க சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்ததாகவும், அதற்கு, அமைச்சர் வாய்மொழியாக அனுமதி அளித்ததாக வும் தகவல் பரவியது.தொடர்ந்து, கரூர் ஜவஹர் பஜார், கோவை சாலை, பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில், அரசின் விதிமுறைகளை மீறி ஜவுளி கடைகள், நகைக் கடைகள் திறக்கப்பட்டன.இங்கு, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல், பொது மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடினர்.
இது குறித்து, கரூர் நகராட்சி மற்றும் கலெக்டர் அலுவலகத்திற்கு புகார்கள் சென்றுள்ளன. நேற்று முன்தினம், கோட்டாட்சியர் பாலசுப்ரமணியன், தாசில்தார் செந்தில் உள்ளிட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது, 'அமைச்சர் கூறியபடியே கடைகள் திறக்கப் பட்டு உள்ளன' என, சில கடைகளின் உரிமையாளர்கள் கூறியுள்ளனர். அதையடுத்து, மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்பு கொள்ளுமாறு, ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகத்திடம் பேசியபோது, 'எந்த தகவலும் எங்களுக்கு கூறப்படவில்லை. அரசு உத்தரவை மீறி செயல்பட்டதால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, பதிலளிக்கப்பட்டுள்ளது. பின்னர், விதிமுறை மீறி திறந்த கடைகளை மூடச்சொல்லி உத்தரவிடப்பட்டது.
தெரியவில்லை
மேலும், 10 நிறுவனங்களுக்கு, தலா 5,000 வீதம் 50 ஆயிரம், நான்கு நிறுவனங்களுக்கு, தலா 500 வீதம் 2,000 என, மொத்தம் 52 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
கரூர் மாவட்ட வர்த்தக மற்றும் தொழில் கழக தலைவர் ராஜுவிடம் கேட்டபோது, ''வர்த்தக நிறுவனங்கள் திறப்பு தொடர்பாக, எங்கள் சங்க நிர்வாகிகள், யாரையும் சந்திக்கவில்லை. யாரிடம் அனுமதி பெற்று, கடைகளை திறந்தனர் என்று தெரியவில்லை.''விதிகளை மீறி கடையை திறந்து, அபராதம் விதிக்கப்பட்ட பின் தான், எங்களுக்கு தகவல் தெரியும்,'' என்றார்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE