மக்கள் தொகையில் இத்தாலி -6 கோடி, பிரான்ஸ் 6.7 கோடி, ஜெர்மனி -8.3 கோடி, பிரிட்டன் 6.7 கோடி, இந்தியா- 130 கோடி. உலகிலேயே மிகக்குறைவாக தடுப்பூசி போட்டுள்ள நாடு இந்தியா தான். ஆனால், உலகிலேயே தடுப்பூசியில் சாதனை படைத்தது இந்தியா என, பொய் விளம்பரம் செய்கிறது மத்திய பா.ஜ., அரசு!
- கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி
'மத்திய அரசு பொய் சொல்வதாகவே இருக்கட்டும்... நீங்கள் உண்மையை சொல்லுங்கள். ராகுல், எந்த தேதியில், எந்த இடத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டார்...' என, கேட்க துாண்டும் வகையில், கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி அறிக்கை.
தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலைமையை நினைத்தால் மிகவும் வருத்தமாக உள்ளது. கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டதால், ஆசிரியர்களாக இருந்த பலர் பேக்கரியிலும், பெயின்டராகவும் வேலை பார்க்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
- தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ்
'உண்மை தான். அவர்களையும் அரசு ஆசிரியர்களாக மாற்றினால், அரசின் சம்பள 'பில்' எகிறி விடும்...' எனக் கூறத் தோன்றும் வகையில், தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பேட்டி.
தமிழகத்தில் நிலவும் தடுப்பூசி பற்றாக்குறையை போக்க, மத்திய - மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களும் நோயின் தீவிரத்தை உணர்ந்து, முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
- தே.மு.தி.க., தலைவர் நடிகர் விஜயகாந்த்

'எப்படி சார் இருக்கீங்க... உடம்பு எப்படி இருக்கு... ரொம்ப நாளா அறிக்கையே காணலையே...' என, சொல்ல தோன்றும் வகையில், தே.மு.தி.க., தலைவர் நடிகர் விஜயகாந்த் அறிக்கை.
தி.மு.க.,வின் பொய் அரசியலுக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளது, சென்னை உயர் நீதிமன்றம். இனியாவது மாணவர்களை, 'நீட்' தேர்வுக்காக படிக்க விடுங்கள். பொய் வாக்குறுதிகளை கொடுத்து, மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்க வேண்டாம்.
- தமிழக பா.ஜ., பொருளாளர் சேகர்
'நீதிமன்றம், அரசியல் கட்சிகளின் பொய் வாக்குறுதிகள் என எதை பற்றியும் கவலைப்படாமல், மாணவர்களே தக்க முடிவெடுத்து படிக்க வேண்டியது தான்...' என, சொல்ல தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., பொருளாளர் சேகர் அறிக்கை.
தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதில், மத்திய பா.ஜ., அரசு பாரபட்சமாகவே நடந்து கொள்கிறது. தேவையான தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என, பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதிய பிறகும் நிலைமை மாறவில்லை.
- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன்
'முதல்வர் கடிதம் எழுதினாலும், எழுதாவிட்டாலும், மத்திய அரசு நேர்மையாக தான் நடந்து கொள்கிறது...' என, சொல்ல தோன்றும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் அறிக்கை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE