தென்பெண்ணை ஆறு அணை விவகாரம்: விரைந்து செயல்படுமா அரசு? ..

Updated : ஜூலை 03, 2021 | Added : ஜூலை 02, 2021 | கருத்துகள் (45)
Advertisement
காவிரி பிரச்னையில் துவங்கி, அடுத்தடுத்து தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வரும் கர்நாடகா, கிருஷ்ணகிரி - கடலுார் வரையிலானஆறு மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் தென்பெண்ணையில், புதிய அணை கட்டிய விவகாரத்தில், தமிழக அரசு விரைந்து செயல்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.ஊரடங்கு காலத்தில், சத்தமின்றி அணை கட்டுவதற்கு அனுமதி கொடுத்தது யார்; அதனால்,தமிழகத்திற்கு
தமிழகம், கர்நாடகா, தென்பெண்ணை ஆறு, அணை,

காவிரி பிரச்னையில் துவங்கி, அடுத்தடுத்து தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வரும் கர்நாடகா, கிருஷ்ணகிரி - கடலுார் வரையிலானஆறு மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் தென்பெண்ணையில், புதிய அணை கட்டிய விவகாரத்தில், தமிழக அரசு விரைந்து செயல்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஊரடங்கு காலத்தில், சத்தமின்றி அணை கட்டுவதற்கு அனுமதி கொடுத்தது யார்; அதனால்,தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை தடுக்க என்ன நடவடிக்கை என்ற கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம்,மத்திய - மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் உருவாகும் பெண்ணையாறு, தமிழகத்தின் வழியே சென்று, வங்கக் கடலில் கலக்கிறது. தமிழகத்தில் பாயும் பெண்ணையாற்றுக்கு, தென்பெண்ணையாறு என்ற பெயர் வழக்கத்தில் உள்ளது.தென்பெண்ணையாறு, கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகிறது.கர்நாடகத்தில் 112; தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் 180; திருவண்ணாமலை, வேலுாரில் 34; விழுப்புரம், கடலுார் மாவட்டங்களில் 106 கி.மீ., துாரம் பாய்ந்து, வங்கக் கடலில் கலக்கிறது.


மார்க்கண்டேய நதிதென்பெண்ணை ஆற்றின் முக்கிய கிளை நதியான மார்க்கண்டேய நதி, கர்நாடகா எல்லை பகுதியான, முத்தியால் மடுகு மலைப்பகுதியில் வெளியேறும், சிறு சிறு ஓடைகளில் உருவாகி, கே.ஜி.எப்., பங்காருபேட்டை வழியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நுழைகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஒன்றியம், தீர்த்தம் பாலனப்பள்ளி, சிக்கரிப்பள்ளி வழியாக மாரசந்திரம் தடுப்பணைக்கு வருகிறது.

இங்கிருந்து செல்லும் நீர், கிருஷ்ணகிரி மாவட்டம், எண்ணெகொல்புதுார் என்னும் பகுதியில், தென்பெண்ணை ஆற்றுடன் கலக்கிறது.மேலும், இதன் இடது புற கால்வாய் வாயிலாக வரும் நீரே, கிருஷ்ணகிரி படேதலாவ் ஏரிக்கு நீர் ஆதாரம். இதுவே பர்கூர் ஊராட்சி ஒன்றிய பகுதி பாசனத்துக்கு கை கொடுக்கும். இதன் வாயிலாக, ஆயிரக்கணக்கான ஏக்கரில்விவசாயம் செய்யப்பட்டது.

தமிழகத்தில் பாய்ந்தோடும் தென்பெண்ணையாற்றில், கிருஷ்ணகிரி, தர்மபுரிக்கு முக்கிய பங்கு வகித்து வந்தது, மார்க்கண்டேய நதி தான்.கிட்டத்தட்ட 10 ஆண்டு களுக்கும் மேலாக நதியின் நீர்வரத்து, கர்நாடகத்தில் புதிதாக கட்டப்படும் தடுப்பணைகள் வாயிலாக கொஞ்சம் கொஞ்சமாக குறைந்த நிலையில், தற்போது இந்த நதியின் அடையாளம் முற்றிலும் அழியும் நிலைக்கு தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.


பிரமாண்ட அணைகிருஷ்ணகிரி மாவட்டம், குந்தாரப்பள்ளி சாலை, நாச்சிக்குப்பத்தில் இருந்து 8 கி.மீ., துாரத்தில், கர்நாடகா வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதி யார்கோள். இங்கு கட்டப்பட்டுள்ள யார்கோள் அணையின் நீளம் 1,410 அடி, உயரம் 164 அடி.மேலும் எதிர்காலத்தில், தமிழக அரசு சட்ட நடவடிக்கைகள் எடுக்கலாம் என்ற எண்ணத்தில், மதகுகள் இன்றி 164 அடி உயரத்திற்கு நீர் தேக்கும் வகையில், பெரிய தடுப்பணையாக கட்டப்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 50 கோடி கன அடி.

அதாவது அரை டி.எம்.சி., இந்த அணையின் மொத்த கொள்ளளவும் எட்டப்பட்டால் மட்டுமே, அதன் பின்னர் வரும்தண்ணீர் உபரியாக வெளியேறி, தென்பெண்ணை ஆற்றில் வெளியேறும்.தற்போது கட்டப்பட்டுள்ள யார்கோள் அணையால், வரும் காலங்களில் கர்நாடகா வனப்பகுதியில் கன மழை பெய்தால், ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழக எல்லைக்கு வராது என்பதே நிதர்சனம்.


latest tamil news

யார்கோளால் பாதிப்புகோலார் மாவட்டத்தில் உள்ள பெத்தமங்கலம், ராம்சாகர் உள்ளிட்ட இடங்களில், கர்நாடகா அரசு ஏற்கனவே தடுப்பணைகளை கட்டியதால், மார்க்கண்டேய நதிக்கு வரும் நீர்வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில், புதிதாக கட்டப்பட்டுள்ள யார்கோள் அணை நிரம்புவதற்கே சாத்தியமில்லாத சூழலில், தமிழகத்திற்கு மார்கண்டேய நதி நீர் வர வாய்ப்பில்லை.யார்கோள் அணையை கட்ட 2006ல் முடிவு செய்த கர்நாடக அரசு, 2007ல் அனுமதி வழங்கியது. 2009ல் அனைத்து துறை அனுமதியுடன் அணை கட்டும் பணி துவங்க இருந்த நிலையில், தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ஆனால், தமிழக அரசின் மனுவை 2019 நவ., 14ல் தள்ளுபடி செய்து, உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.அதே சமயம், தென்பெண்ணையாற்றில், தமிழகத்தின் நலன் கருதி, அரசு வைத்த கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உச்ச நீதிமன்றம் மறுக்கவில்லை. மத்திய அரசை அணுகி, நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கும்படி கூறியது. தமிழக அரசும் முறையிட்டது; தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.

அதன் கூட்டத்தில் விவாதிக்கலாம் என முடிவெடுத்ததால், அணை கட்டும் பணியை தற்காலிகமாக நிறுத்தியது, கர்நாடக அரசு. அதன்பின், கொரோனா பரவல் அதிகரித்தது. அணை விவகாரத்தில் தமிழக அரசு அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை. ஊரடங்கு சமயத்தை பயன்படுத்தி, சத்தமில்லாமல் அணையின் 90 சதவீத பணிகளை, கர்நாடக அரசு முடித்து விட்டது. அணையை சுற்றிலும் தடுப்பு அமைப்பது, பூங்கா அமைக்கும் பணியை மட்டுமே பாக்கி வைத்துள்ளது.

கடந்த 1892ம் ஆண்டு சென்னை - மைசூர் மாகாண ஒப்பந்தத்தின் ஏழாவது அட்டவணையில், ஆறுகள் பாயும் மாநிலங்களுக்கு இடையே அனுமதி பெறாமல், புதிய அணை கட்டக் கூடாது என்பது விதி. இந்த விதிகள், தென்பெண்ணை ஆற்று விவகாரத்தில் பின்பற்றப்படவில்லை என்பதே சமூக ஆர்வலர்களின் ஆதங்கம்.மேலும், தென்பெண்ணை ஆற்று உபரி நீரை, பாலாற்றுடன் இணைப்பதன் வாயிலாக, வேலுார், திருப்பத்துார் மாவட்ட பகுதிகளும் பயன் பெறும் என நம்பி இருந்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெண்ணையாற்றின் பெரும்பகுதி தமிழகத்தில் இருந்தாலும், நீர்ப்பிடிப்பு பகுதி முழுமையாக கர்நாடகாவில் உள்ளது.

கர்நாடகா நினைத்தால் கூட, இனி தமிழகத்திற்கு தண்ணீர் தருவதற்கு வழியில்லை. இதனால், தமிழகத்தில் உள்ள பகுதி, நீர்வரத்து இன்றி, வறட்சி பகுதியாக மாறி வருகிறது. கொரோனா ஊரடங்கு, தேர்தல் காலத்தை பயன்படுத்தி, சத்தமின்றி இந்த காரியத்தை கர்நாடக அரசு செய்திருக்கிறது. இரு மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பிரச்னையில், சம்பந்தப்பட்ட மாநில அனுமதியும், மத்திய அரசின் ஒப்புதலும் இன்றி, எந்த கட்டுமானமும் கூடாது என்ற விதியை மீறி, அணை கட்ட அனுமதி கொடுத்தது யார்?

இதனால், தமிழகத்தை சேர்ந்த ஆறு மாவட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தடுக்க என்ன வழி?இக்கேள்விகளுக்கு பதில் சொல்வதுடன், இந்த விவகாரத்தில் இனியாவது தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும், தமிழக விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.


latest tamil news


Advertisementயார்கோள் தடுப்பணை: அதிகாரிகள் முரண்பாடு* கர்நாடக நகர நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம், யார்கோள் திட்டத்தை 2006ல் முன் மொழிந்தது

* 2007 ஆக., 22ல், கர்நாடக அரசு ஒப்புதல் அளித்தது

* நீர் வழங்கல் வாரியம், நிலம் எடுப்பதற்கான வரைவறிக்கை தாக்கல் செய்ய தடுமாறியது

* வனத்துறை, வருவாய் துறை, மாவட்ட நிர்வாகத்தில் முரண்பாடுகள் அதிகரித்தன

* 2006 ஏப்., 3 முதல், 2007 அக்., 22 வரை, அதிகாரிகள் இடையே பேச்சு நடைபெற்றது

* கடந்த, 1892ம் ஆண்டின்படி, மைசூர் அரசால் வன நிலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகள், வருவாய் பதிவுகளில் குறிப்பிடப்படவில்லை

* கோலார் பிரிவு வன அலுவலர், ௨௦௦௭ ஏப்., 19ல், 'வன நிலத்தில் அணை கட்டினால், மத்திய அரசின் அனுமதி வேண்டும். மீறி கட்டினால், அது உச்ச நீதிமன்ற அவமதிப்பு' என்றார்

* 2009 மே, 14ல், வனப்பகுதி இல்லாத இடத்தில் மட்டுமே அணை கட்ட உள்ளதாக, நீர் வழங்கல் வாரிய துணை கமிஷனர் தெரிவித்தார்

* மத்திய அரசை மீறாமல், மாநில கட்டுப்பாட்டுக்குள், வனத்துறை, நீர் வழங்கல், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் இணைந்து தீர்வு காண, கர்நாடக அரசு வலியுறுத்தியது

* பிரச்னைகள் முடிந்து, அணை கட்ட முயன்ற போது, தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.


கண்டுகொள்ளாத அரசியல்வாதிகள், அதிகாரிகள்!பாலாறு பாதுகாப்பு சங்க தலைவர் வெங்கடேசன் கூறியதாவது:கடந்த, 2006ல் இருந்து யார்கோள் அணை கட்ட, கர்நாடக அரசு தீவிரம் காட்டிய நிலையில், அதனால் முற்றிலும் பாதிப்புக்குள்ளாகும் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ இதை கண்டுகொள்ளவில்லை. மேலும், 2008ல் மத்திய நீர்வள ஆதாரத்துறை ஆய்வுப்படி, பெண்ணையாற்றின், 6.5 டி.எம்.சி., உபரி நீர், கடலில் கலப்பதாக கூறியது. உபரி நீரை தென்பெண்ணை - பாலாறு இணைப்புக்காக, 3.5 டி.எம்.சி.,யும் தென்பெண்ணை - செய்யாறு இணைப்புக்காக, நந்தன் கால்வாய் திட்டம் 3 டி.எம்.சி.,யும் ஒதுக்கியது.

ஆனால், தற்போது கர்நாடகா கட்டியுள்ள யார்கோள் அணை திட்டத்தால், 8 டி.எம்.சி., நீர் வரை அவர்களே சேமிக்கலாம். அப்படி இருக்கையில் பாலாறு, செய்யாறு திட்டங்களுக்கு நீர் எப்படி கிடைக்கும்? நமக்கு கிடைக்கப்பட வேண்டிய உரிமைகள் பறிக்கப்படும்போது போராட வேண்டும். யார்கோள் அணை கட்டியுள்ளதால், கிருஷ்ணகிரி, தர்மபுரிக்கு கிடைத்து வந்த நல்ல நீர் இனி கிடைக்காமல், தென்பெண்ணையாற்றின் கழிவுநீர் மட்டுமே கிடைக்கும். இது வேதனைக்குரியதாகும். மேலும் முல்லை பெரியாறு, வைகை, காவிரி நீருக்காக போராடும் அளவிற்கு, தென்பெண்ணை, பாலாறு நீருக்காக போராடாதது, வேதனையளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news

பெண்ணையாறு அணை அரசு விளக்கம் கேட்பு!தமிழகத்திற்கும் அண்டை மாநிலங்களுக்கும் இடையே உள்ள நதிநீர் பிரச்னைகளை, சட்ட ரீதியாக அணுகுவதற்கு, காவிரி தொழில்நுட்ப பிரிவை தமிழக அரசு அமைத்துள்ளது. தற்போது, பெண்ணையாறு அணை விவகாரம் குறித்து, இப்பிரிவிடம் தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளது. அணை கட்டுமானத்தை தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்; இனி அணையால் ஏற்படப்போகும் பாதிப்புகள்; அதை தடுக்க எடுக்க வேண்டிய பணிகள் குறித்து, விரிவான அறிக்கை தரும்படி, பிரிவின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, பெண்ணையாறு அணை தொடர்பான அறிக்கை தயாரிப்பு பணிகளை, காவிரி தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இப்பணிகளில் கோட்டை விட்ட நீர்வளத்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவர். சட்ட ரீதியான பணிகளை துவங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிடுவார் என, கூறப்படுகிறது.


latest tamil news

latest tamil news

கட்டுமான பொருட்கள் தமிழக புள்ளிகள் 'சப்ளை'கர்நாடக மாநிலத்திற்கு மிக அருகில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 121 கல் குவாரிகள் உள்ளன. பெங்களூரு தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் அவர்களது, 'பினாமி'கள் பெயர்களில், கல் குவாரிகளை ஒப்பந்த அடிப்படையில் ஏலம் எடுத்து, தமிழகத்தின் கனிமவளங்களை வெட்டி எடுக்கின்றனர்.அவை, கர்நாடக மாநிலத்திற்கு, எம் - சாண்ட், ஜல்லி என பல்வேறு வகைகளாக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன. கர்நாடக அரசு கட்டியுள்ள யார்கோள் அணையின் கட்டுமான பணிக்கு, எம் - சாண்ட், சிமென்ட், கம்பி ஆகியவை, தமிழகத்தில் அதிகார செல்வாக்கு மிக்கவர்கள் நடத்தும் ஆலையில் இருந்து தான் சென்றுள்ளன.

அணை கட்டுமான பணிக்கு, தமிழகத்தில் இருந்து தான் கட்டட தொழிலாளர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அணை கட்ட, 25 வகையான சிறு கான்ட்ராக்டுகளை எடுத்து செய்தவர்களும், தமிழகத்தைச் சேர்ந்த பெரிய புள்ளிகளும் தான்.குறிப்பாக, சேலத்தை தலைமையாக கொண்ட நிறுவனம் தான், அணை கட்டுமான பணிக்கு, எம் - சாண்ட் 'சப்ளை' செய்துள்ளது.அதே போல், ஓசூர், தளி, கிருஷ்ணகிரி பகுதி, தி.மு.க., - இந்திய கம்யூ., - அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள், கருங்கற்கள், ஜல்லிகள், சிமென்ட், இரும்பு கம்பிகள் சப்ளை செய்துள்ளனர்.


latest tamil news
சாத்தனுார் அணைக்கு நீர் வருவதில் சிக்கல்!திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே சாத்தனுாரில், சென்னகேசவ மலைக்கு இடையே, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, 1958ம் ஆண்டு சாத்தனுார் அணை கட்டப்பட்டது. 119 அடி உயரத்துடன், 7,321 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு உடையது இந்த அணை. இதன் வாயிலாக, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், இடது புறக்கால்வாய் வாயிலாக 24 ஆயிரம் ஏக்கர், வலதுபுற கால்வாய் வழியாக 21 ஆயிரம் ஏக்கர் மற்றும் திருக்கோவிலுார் பழைய ஆயக்கூட்டு மூலம் 5,000 ஏக்கர் என, மொத்தம் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மேலும், பொதுப்பணித் துறையின், 84 ஏரிகளில் நீர் தேக்கப்பட்டு, நிலத்தடி நீர் மட்டம் உயர்த்தப்பட்டு, அப்பகுதியை சார்ந்த விவசாயிகள் மற்றும் பொது மக்கள் குடிநீர் தட்டுப்பாடு போக்க, பயன்படுத்தப்பட்டு வருகிறது.தென்பெண்ணை ஆறு பாசன பகுதிகள் கூட்டமைப்பு தலைவர் மற்றும் முன்னாள் சாத்தனுார் நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் ஜெயராமன் கூறியதாவது:

கர்நாடக அரசு அணை கட்டுவதை சுட்டிக்காட்டி, இரண்டு ஆண்டுகளுக்கு முன் அரசுக்கு கடிதம் அனுப்பினோம்; கண்டுகொள்ளவே இல்லை. இதனால், சாத்தனுார் அணை, மூன்று ஆண்டுகளாக முழு கொள்ளளவை எட்டவில்லை, பாசனத்திற்கும், இரண்டு ஆண்டுகளாக, 30 நாட்களுக்கும் குறைவாகவே நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், பிப்., மாதம், 25ம் தேதி முதல், 90 நாட்களுக்கு நீர் திறக்கப்பட்டது. கர்நாடக அரசு அணை கட்டப்பட்டுள்ளது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி. தற்போதைய அரசுக்கு கடிதம் அனுப்ப உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news
எம்.எல்.ஏ.,க்கள் சொல்வது என்ன?கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க, முந்தைய அ.தி.மு.க., அரசு தவறி விட்டது. நீதிமன்றத்திற்கு செல்வதற்கு முன், அணை பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டன. அதை கண்டித்து, கிருஷ்ணகிரியில், தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கர்நாடக அரசு அணை கட்டியுள்ள நிலையில், அடுத்தகட்ட முடிவை முதல்வர் ஸ்டாலின் எடுப்பார். முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வோம். கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான், நம் பகுதியில், 'கிரசர்' வைத்துள்ளனர். அதனால், அவர்களிடம் இருந்து எம் - சாண்ட், கற்கள் போன்றவற்றை, அணை கட்ட வாங்கியிருக்கலாம்.
-ஒய்.பிரகாஷ், ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ.,

கர்நாடக அரசு அணை கட்டியுள்ளது. இதனால், தென்பெண்ணை ஆற்றுக்கு வர வேண்டிய நீர் வராமல் தடுக்கப்படும். இதனால், கிருஷ்ணகிரி, தர்மபுரி உட்பட, ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர், விவசாய நீர் தேவை பாதிக்கப்படும். சென்னை - மைசூரு மாகாண ஒப்பந்தம், 1892ன்படி, முதல்மடை பகுதியில் அணை கட்ட வேண்டும் என்றால், கடைமடையான தமிழகத்தின் அனுமதி பெற வேண்டும். ஆனால், அதை கர்நாடக அரசு செய்யவில்லை. தமிழக அரசு உடனடியாக, மத்திய அரசை அணுகி, நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்.

- டி.ராமச்சந்திரன்,தளி, இந்திய கம்யூ., - எம்.எல்.ஏ.,

கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், ஆறு முழுதும் நீர் நிரம்பி சென்றது. எங்கள் விவசாய வாழ்வும் செழிப்புடன் இருந்தது. பின், நீர் வரத்து தொடர்ந்து குறைந்து, விவசாய நிலங்களை விற்றும், கூலி வேலைகளுக்கு சென்றும் பிழைப்பு நடத்தி வருகிறோம். தண்ணீர் கிடைக்க, அரசுகள் வழி செய்ய வேண்டும்.

-முருகேசன், 49, மாரசந்திரம்

எங்கள் பகுதியில் தண்ணீர் ஓடியதற்கு ஆதாரமாக, தடுப்பணை மட்டுமே உள்ளது. ஆற்றில் நீர் இருந்த ஆதாரமே இல்லை. குந்தப்பள்ளி, பீமாண்டப்பள்ளி உள்ளிட்ட ஆற்று பாசன பகுதிகளில், ஆழ்துளை கிணற்றில் கூட தண்ணீர் இல்லை. வாழ்வாதாரம் பாதித்த நிலையில், கர்நாடகா புது அணை கட்டியது வருத்தம் அளிக்கிறது.

- கே.பி.பெரியசாமி, 55, குப்பச்சி பாறை

கர்நாடகா அணை கட்டி, மார்கண்டேய நதி நீரை தடுத்தாலும், தென்பெண்ணையாற்றின் நீரை எண்ணெகொல்புதுார் வழியாக கொண்டு வந்து, மாரசந்திரம் தடுப்பணையில் விட்டால், நெடுமறுதி, ஜீனுார், திப்பனப்பள்ளி பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். எஞ்சியுள்ள விவசாயிகளாவது பிழைத்துக் கொள்ள வழிபிறக்கும்.

- வடிவேல், 36, மாரசந்திரம்

கடந்த, 16 ஆண்டுகளுக்கு முன், எங்கள் பகுதி தடுப்பணை நிரம்பியது. அதன்பின் வறட்சி தான். 2019ல் சிறிதளவு தண்ணீர் வந்தது. தண்ணீர் பஞ்சம் குறித்து, அரசியல்வாதிகள் கவலைப்படுவதில்லை. எங்கள் தொகுதியில், 10 ஆண்டுகளாக, தி.மு.க., -- எம்.எல்.ஏ.,க்கள் ஒன்றுமே செய்யவில்லை. ஆட்சிக்கு வந்த பிறகாவது, ஏதாவது செய்ய வேண்டும்.

- வெங்கடேஷ், 55, மாரசந்திரம்

இந்தப் பகுதி முழுதும் விவசாயிகள். அனைவருக்கும் வேறு தொழில் தெரியாது. அடிப்படையான தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்வது எப்படி?நிலத்தடி நீர் மட்டம், 1,00-0 அடிக்கு கீழ் போய் விட்டது. கர்நாடகத்தில் புது அணை கட்டிவிட்டனர். இப்படியே போனால், நாங்கள் வேறு ஊர்களுக்கு தான் பிழைப்பு தேடி போக வேண்டும்.

- ராமசாமி, 51, குப்பச்சிபாறை-


தடுப்பணைகளால் தவிக்கும் தமிழகம்!பாலாற்றின் குறுக்கே கர்நாடகா மாநிலத்திலும், ஆந்திராவில் குப்பம் முதல் வேலுார் வரையும் 29 தடுப்பணைகள் அமைத்து, தமிழகத்திற்கு வரும் நீரின் அளவை தடை செய்த நிலையில், தென்பெண்ணை ஆற்றின் கிளை நதிகளையும் மறித்து, கர்நாடக அரசு அணை கட்டுவதால், தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு மிக குறைந்த அளவுக்கு சென்று விடும். இதனால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலுார், விழுப்புரம், கடலுார் மாவட்டங்கள் முழுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.


கர்நாடகத்தின் கட்டுக்கதை!மத்திய அரசின் வழிகாட்டுதலும் முறையாக பின்பற்றப்படாமல், சரியான ஆவணங்களை வைக்காமலும், சட்டத்தில் இருந்து தப்பிக்கும் வகையில், கோலார், பங்கார்பேட், மாலுார் மற்றும் 45 கிராம பகுதி மக்களுக்கு குடிநீருக்கான திட்டம் என, யார்கோள் திட்டத்துக்கு கர்நாடகா விளக்கம் சொல்கிறது.யார்கோள் அணை வனப்பகுதியில் கட்டப்பட்டுள்ளது; மத்திய அரசு அனுமதிஅளித்துள்ளதா என்பதற்கு, சரியான விளக்கம் கர்நாடகா தரப்பில் தெரிவிக்கவில்லை. பெண்ணையாறு பாயும் தமிழகத்தின் அனுமதியை கர்நாடகா கோராதது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்திஉள்ளது.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Giri V V - குடந்தை,இந்தியா
03-ஜூலை-202123:04:54 IST Report Abuse
Giri V V கட்சி பேதம் இல்லாமல் ஒப்பந்தம் எடுத்து அணையை கட்டி முடித்துக் கொடுத்து இருக்கிறோமா?புரியவில்லையே...
Rate this:
Cancel
Ramamurthy N - Chennai,இந்தியா
03-ஜூலை-202120:52:49 IST Report Abuse
Ramamurthy N மொழிவாரியாக மாநிலங்களை பிரிக்காமல் நதிவாரியாக பிரித்திருந்தால் இவ்வளவு கஷ்டம் வந்திருக்காது. தமிழ்நாடு எப்பவுமே தண்ணீருக்காக போராடும் நிலையும் வந்திருக்காது. சுற்றியுள்ள மாநிலங்களிடம் தண்ணீருக்கு பிச்சை எடுக்கும் நிலையில்லாமல் இருந்திருக்கும் என்று நினைக்க தோன்றுகிறது
Rate this:
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
03-ஜூலை-202117:20:06 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே இங்கே கருத்து எழுதிய எல்லாம் எனக்கு தெரியும் விடியல் படைத்தவர்கள் இப்போது மழை பெய்து கொண்டிருக்கும் மாவட்டங்களின் ஏரிகள் தூர் வாரி மழை நீர் கடலுக்கு செல்லாமல் தடுபார்களா? கஷ்டம்தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X