அ.தி.மு.க., தொண்டர்களுடன் தினமும் போனில் பேசி வரும் சசிகலா, 'நான் எம்.ஜி.ஆருக்கே ஆலோசனை கூறியுள்ளேன். எம்.ஜி.ஆர்., என்னிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார் ' என்ற, புது தகவலை கூறியுள்ளார்.

தகவல் உண்டு
எம்.ஜி.ஆர்., - -ஜெயலலிதா -- சசிகலா முக்கோண செயல்பாடுகள் குறித்து, எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவரும், 'தாய்' பத்திரிகை ஆசிரியருமான வலம்புரி ஜான், தான் எழுதிய அரசியல் கட்டுரை ஒன்றில், 'சசிகலா, எம்.ஜி.ஆருக்காக, ஜெயலலிதாவை உளவு பார்த்தார்' என, குறிப்பிட்டிருக்கிறார்.அந்த தகவல் தற்போது வெளியாகி, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. அரசியல் கட்டுரையில், வலம்புரி ஜான் கூறியுள்ளதாவது:
எம்.ஜி.ஆர்., ஒன்றும் சந்தேக பேர்வழி அல்ல. ஆனால், சராசரி ஆண்களை விட, கொஞ்சம் கூடுதலாக சந்தேகப்படுவார். இந்த நிலையில், அவர் ஜெயலலிதாவை கண்காணிக்க ஆரம்பித்தார். ஜெ., வசித்த போயஸ் தோட்டத்துக்கு போகும், வரும் நபர்கள் கண்காணிக்கப் பட்டனர். ஜெ., மீது கொஞ்சம் அதிகம் பாசம் காட்டுகிறோம் என்று பக்கத்தில் போனவர்கள், அடி, உதைகளுக்கு ஆளாகினர். இறுதியாக ஒரு கட்டத்தில், ஜெயலலிதாவின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு, மிகச் சரியான ஒரு ஆள் தனக்கு வேண்டும் என்ற, முடிவுக்கு வந்தார். அப்போது தான், சசிகலா பற்றிய தகவல், எம்.ஜி.ஆருக்கு கிடைத்தது. ஒரு பெண்ணை பயன்படுத்தி, மற்றொரு பெண்ணை உளவு பார்த்தார்.
போயஸ் தோட்டத்தில், நான் பார்த்த சசிகலாவை, தியாகராய நகர் அலுவலகத்திலும், சில வேளை எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்திலும் பார்த்திருக்கிறேன்.வி.என்.ஜானகி, ஜெயலலிதா என்ற, இரு வலிமை வாய்ந்த பெண்களுக்கு மத்தியில், ஒரு பத்திரிகை ஆசிரியராக, 12 ஆண்டுகள் காலம் தள்ளிய, என் சாதனையே, உலக மகா சாதனை என, நான் நினைத்து கொண்டிருந்தேன்.ஆனால், எம்.ஜி.ஆருக்கு தெரியாமல் ஜெயலலிதாவையும், ஜெயலலிதாவுக்கு தெரியாமல் எம்.ஜி.ஆரையும் கண்காணித்த, சசிகலா வணக்கத்திற்குரியவர். அன்றைக்கு இருந்த சசிகலா, உண்மையில் எம்.ஜி.ஆர்., ஆளா' ஜெயலலிதா ஆளா?இவ்வாறு, அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் கூறியதாவது:கடந்த, 1980ல், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்திரலேகாவால், சசிகலா, ஜெயலலிதாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டார். அதன்பின், அவர் ஜெயலலிதாவோடு நெருக்கமாகி, போயஸ் தோட்டத்திலேயே இருந்து விட்டார். எம்.ஜி.ஆர்., அப்போது ஜெயலலிதா மீது பாசமாக இருந்தார். அதையடுத்து, அவரை அரசியலிலும் களம் இறக்க விரும்பினார்.அந்த வகையில், ஜெயலலிதாவை பாதுகாப்பாக வைத்திருக்கவும் எம்.ஜி.ஆர்., விரும்பினார். அதற்காக, சசிகலாவுக்கு சில உத்தரவுகள் பிறப்பித்தார் என்றும், தகவல் உண்டு.
கொஞ்சம் அதிகம்
ஒரு கட்டத்தில், ஜெயலலிதாவை யார் யார் வந்து, பார்த்து செல்கின்றனர் என்பதை, எம்.ஜி.ஆர்., அறிந்து கொள்ள விரும்பினார். அதற்காக, சசிகலாவை பயன்படுத்தியதாகவும், அரசியல் வட்டாரங்களில் பேச கேட்டிருக்கிறேன். சசிகலா, இரு தரப்பிலும் நெருக்கமாக இருந்ததால், இரு தரப்பாருக்கும் அவர் செய்திகளை பரிமாறி கொண்டு இருந்திருக்கலாம். எப்படி இருந்தாலும், அவரை ஒரு, 'மீடியேட்டர்' ஆக இரு தரப்பினரும் பயன்படுத்தினர் என்பதைத் தான், வலம்புரி ஜான் குறிப்பிட்டிருக்கிறார்.
இவ்வாறு, அவர் கூறினார்.எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக பழகிய ஹெச்.வி.ஹண்டே கூறியதாவது:கடந்த, 1980ம் ஆண்டுகளில், எம்.ஜி. ஆரோடு மிக நெருக்கமாக இருந்தவன் நான். அ.தி.மு.க.,வின் துணைப் பொதுச் செயலராகவும் இருந்தேன். அந்த காலகட்டத்தில் தான், ஜெயலலிதா அரசியலுக்கு வந்தார்.ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் இல்லத்தில் இருந்து, நடராஜனும், சசிகலாவும், ஜெயலலிதாவுக்கு உதவிகள் செய்து வந்தனர். நடராஜன், அரசியல் ரீதியாக ஆலோசனைகளும் கூறி வந்தார். இருவரும், ஜெயலலிதா வீட்டில் இருந்து, அவருக்குத் தான் உதவி செய்தனரே தவிர, எம்.ஜி.ஆரோடு நெருக்கமாக இல்லை.
அப்படி இருந்தால், 'புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., மறுபிறவி எடுத்த வரலாறு' என்ற, என் புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பேன். எம்.ஜி.ஆர்., இறந்து விட்டார் என்பதற்காக, 'அவர் என்னுடன் ஆலோசித்திருக்கிறார்' என்று, சசிகலா கூறுவது கொஞ்சம் அதிகமாகவே தெரிகிறது. அதேபோல, சசிகலாவை மீடியேட்டராக பயன்படுத்தும் அளவுக்கு, எம்.ஜி.ஆருக்கு சசிகலாவை தெரியாது. வலம்புரிஜானை பொறுத்தவரை, சுவாரஸ்யத்துக்காக சிலவற்றை புனைந்து எழுதுவார் அப்படித்தான், இந்த விஷயமும் இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கூறினார்.
மாநில சுற்றுப்பயணம்: சசிகலா அடுத்த திட்டம்
'தமிழகத்தில், ஊரடங்கு தளர்த்தப்பட்டதும், ஜெயலலிதா நினைவிடம் சென்று விட்டு, மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் வர உள்ளேன்' என, சசிகலா தெரிவித்துள்ளார்.முன்னாள் எம்.எல்.ஏ., உமாதேவனிடம், சசிகலா பேசியதாவது:எனக்கு கடிதம் எழுதும் தொண்டர்கள், 'அ.தி.மு.க., பொதுச்செயலர்' என்று தான் கடிதம் எழுதுகின்றனர். எனவே, பேச ஆரம்பித்தேன். அனைவரிடமும் நல்லபடியாக பேசிக் கொண்டிருக்கிறேன்.
ஊரடங்கு தளர்த்தப்பட்டதும், நான் வந்து விடுவேன். நிச்சயம் அனைவரையும் பார்ப்பேன். அனைத்து இடத்துக்கும் சுற்றுப்பயணம் வர உள்ளேன். வந்ததும் எல்லாரையும் பார்க்கிறேன்; நல்லபடியாக செய்வோம். தொண்டர்கள் அனைவரும் நம்முடன் இருக்கின்றனர்.தொண்டர்கள் அனைவரும் பதறுகின்றனர். மிகவும் கஷ்டமாக உள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும், ஒவ்வொரு விதமான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் சரியாகி விடும் என்கின்றனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டதும், ஜெ., நினைவிடம் சென்றுவிட்டு, மாவட்டங்களுக்கு வருகிறேன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
- நமது நிருபர் --