ஜெய்ஹிந்த்.இது வெறும் வார்த்தை அல்ல. ஒவ்வொரு இந்தியனுக்கும், சொல்லும் போதே வீரத்தையும், தீரத்தையும் கொப்பளிக்க செய்யும் மந்திரச் சொல்.
'உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும், என் தேசத்தின் விடுதலையை நோக்கியே இருக்கும்' என்று முழங்கியவரும், அன்றைய நாஞ்சில் மண்ணில் பிறந்தவரும், நாடு விடுதலை பெற ஆதரவு திரட்ட ஜெர்மனி சென்றவருமான செண்பகராமன் உதிர்த்த உன்னத சொல். அன்னிய மண்ணில் இருந்தபடி, இந்திய விடுதலைக்காக போராட்டங்களை வகுத்தவரும், இதற்காக இந்திய தேசிய தொண்டர் படையை உருவாக்கியவருமான செண்பகராமன் தான், முதன் முதலாக, தன் தொண்டர் படையிடம் எழுச்சியை உண்டாக்க, 'ஜெய் ஹிந்த்' என்ற கோஷத்தை முழங்கியவர்.
'இந்தியா வெல்லட்டும்' என்பது தான் இதன் அர்த்தம். ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை மந்திரம் போல வீரர்களிடம் வேலை செய்வதை பார்த்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பின்னர் அந்த வார்த்தைக்கு வலு கொடுத்தார். மேடைகளில் ஒவ்வொரு முறை பேசும் போதும், பேசி முடிக்கும் போதும் கையை உயர்த்தி, முஷ்டியை மடக்கி, 'ஜெய்ஹிந்த்' என அவர் சொல்வதை கேட்டால் கோழையும் வீரனாவான். அவர் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவ படையின் தாரக மந்திரமாகவே, ஜெய்ஹிந்த் வார்த்தையை அமைத்துக் கொண்டார்.
பீரங்கிகளையும், துப்பாக்கிகளையும் கொண்ட பிரிட்டீஷ் பெரும்படையை சாதாரண போர்க்கருவிகளை வைத்திருந்த நேதாஜியின் சிறிய படை, பல மைல் துாரம் விரட்டி சென்றதற்கு காரணம், இந்த ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை தந்த பலமும், உற்சாகமும் தான். பசி, பஞ்சம், பட்டினி, மழை, குளிர் வாட்டியபோதும், இயற்கை வாட்டிய போதும் கூட துவண்டு விடாத, நேதாஜியின் இந்திய தேசிய ராணுவ வீரர்கள், துவண்டுவிடாது புலி போல் நிமிர்ந்து, புயல் போல முன்னேறி சென்றனர். அவர்களுக்கு உணவாகவும், உணர்வாகவும் இருந்ததெல்லாம் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை தான் என்று வரலாற்று அறிஞர்கள் குறிப்பில் எழுதி வைத்துள்ளனர்.
இப்படி, இன்னுயிர் எனும் தன்னுயிர் தந்த வீரர்களின் ரத்தத்தாலும், தியாகத்தாலும் சுதந்திரம் பெற்ற இந்தியாவின் முதல் பிரதமராக, தேசிய கொடியை ஏற்றி வைத்த நேரு பேசியது எல்லாம் பலருக்கு நினைவில்லை.
மெய் சிலிர்க்கும்
ஆனால் பேசி முடித்த பிறகு கையை உயர்த்தி, ஒன்றுக்கு மூன்று முறை,'ஜெய்ஹிந்த்' என்று முழங்கியதையும், அதை கேட்டு கூடியிருந்த பல ஆயிரக்கணக்கான மக்கள், பதிலுக்கு விண்ணதிர, 'ஜெய்ஹிந்த்' என்று பதில் முழக்கமிட்டதையும், இப்போது காணொலியில் பார்த்தாலும் மெய் சிலிர்க்கும்.
தந்தையிடம் இருந்து முன்னாள் பிரதமர் இந்திரா கற்றுக் கொண்டதில் முக்கியமானது இந்த ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை முழக்கத்தை தான். அவர் பேசி முடிக்கும் போது அடிவயிற்றில் இருந்து, அனல் கக்கும் விதத்தில், ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை முழங்கும் போது, பெண் சிங்கம் ஒன்று கர்ஜிப்பதை போலிருக்கும்.வேண்டுமானால் இப்போது காங்கிரசார், சமூக வலைதளங்களில் உலாவ விட்டுள்ள அந்த 'வீடியோ கிளிப்'பை பாருங்கள்.
பிரிட்டிஷ் அரசி எலிசபெத் - பிலிப் திருமணத்திற்கு, மஹாத்மா காந்தி தன் கையால், ஜெய்ஹிந்த் என்ற வெற்றி முழக்க சொல்லால் பின்னிய சால்வையை தான் அன்பளிப்பாக அனுப்பி வைத்தார். சுதந்திரத்திற்கு பிறகு, நாட்டில் உள்ள அஞ்சல் நிலையங்கள் அனைத்திலும் குத்தப்பட்ட முத்திரையில், 'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தையே இடம் பெற்றிருந்தது.
இன்றைக்கும் சுதந்திர தினத்தன்று கொடி வணக்கம் செலுத்தி விட்டு, ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை, நம்மை அறியாமலே நம் உதடுகள் உச்சரிக்கும். அந்த நேரம் நமக்குள் பீறிட்டு கிளம்பும் தேசப்பற்றையும், சந்தோஷத்தையும், உணர்வையும், பெருமிதத்தையும் வார்த்தைகளில் வடிக்க இயலாது.
பெருமிதம்
இப்படி சுதந்திரத்திற்கு முன்பும் சரி, பின்பும் சரி, அப்பழுக்கற்ற ஜாதி, மத, இனச்சார்பற்ற ஒட்டுமொத்த இந்தியாவின் வார்த்தையாக, இந்தியர்களின் எழுச்சி சொல்லாக முழக்கமிடப்படும், ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை நீக்கியதற்கு ஒருவர் சந்தோஷப்படுகிறார், பெருமிதம் கொள்கிறார் என்றால் அவரை என்னவென்று சொல்வது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவரும், திருச்செங்கோடு சட்டசபை உறுப்பினருமான ஈஸ்வரன் என்ற அந்த, 'மேதை' தான், ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இல்லாத கவர்னர் உரையை மெச்சியது.
'கடந்த ஆண்டு கவர்னர் உரையின் முடிவில், 'நன்றி, வணக்கம், ஜெய்ஹிந்த்' என இருந்தது. ஆனால், தற்போது கவர்னர் உரையின் முடிவில், 'நன்றி, வணக்கம்' என்று மட்டுமே இருந்தது; 'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தை இல்லை. அதை பார்த்ததும், தமிழகம் தலைநிமிரத் துவங்கி விட்டது என்பதை உணர்ந்தேன்' என, விபரம் புரியாமல் அவர் பேசியதை, சிலர் கைதட்டியும் பாராட்டியது தான் கொடுமை.
அவர் அப்படி பேசும் போது, சபையில் இருந்த தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் வாய்மூடி இருந்தனர் என்பது வேதனையிலும் வேதனை. 'மக்கள் பிரதிநிதிகள் வாய் மூடியிருந்தால் என்ன... மக்கள் நாங்கள் குரல் கொடுக்கிறோம்...' என்று பொதுமக்கள் ஏராளமானோர் ஈஸ்வரன் பேச்சை கடுமையாக கண்டனம் செய்தனர்; செய்து கொண்டிருக்கின்றனர்.
இந்த கண்டனக்கணைகள் எல்லா திசைகளிலும் இருந்து பாய்ந்து வந்ததை அடுத்து, 'நான் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தைக்கு எதிரானவன் இல்லை; ஜெய்ஹிந்த் என்ற ஹிந்தி வார்த்தைக்கு தான் எதிரானவன்' என்று சப்பைக்கட்டு கட்டிக்கொண்டு இருக்கிறார் ஈஸ்வரன்.
இன்று வரை, ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை, இந்தியர்களாகிய நாம், நம் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் ஒரு முழக்கமாக கருதியபடி இருக்கிறோம். ஆனால், இவருக்கு மட்டும் தான் இந்த வார்த்தை ஹிந்தி வார்த்தையாக பட்டிருக்கிறது.
முற்றுப்புள்ளி
'ஜெய்ஹிந்த் முழக்கத்தை உருவாக்கிய செந்தமிழன் செண்பகராமனுக்கு சிலை வைத்ததில் உள்ளபடியே பெருமைப்படுகிறேன்' என்று, சென்னையில் செண்பகராமனுக்கு சிலை வைத்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சியின் நீட்சியாக, அரசை நடத்திக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், இது போன்ற சர்ச்சை பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
நாட்டு விடுதலைக்காக குண்டடிபட்டு, ரத்தம் சிந்திய எண்ணற்ற தியாகிகளின் உயிர்க்குரல் ஜெய்ஹிந்த். வீடு, நிலம் போன்ற சொத்துக்களை மட்டுமின்றி, தங்களையே தியாகம் செய்த பல தலைவர்களின் சபதக்குரல் ஜெய்ஹிந்த்.செப்பேடுகளில் மட்டுமல்ல, இந்தியர்களாகிய எங்கள் அனைவரின் செங்குருதியிலும் செதுக்கப்பட்டிருக்கும் சொல் ஜெய்ஹிந்த். அந்த ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை உரக்க சொல்வோம் இன்றும், என்றும், என்றென்றும்!
எல்.முருகராஜ்
பத்திரிகையாளர்
தொடர்புக்கு:
இ - மெயில்: murugaraj@dinamalar.in
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE