சென்னை :பெண்ணையாற்றின் கிளை நதியில், சட்ட விரோதமாக கர்நாடக அரசு கட்டியுள்ள தடுப்பணையை இடிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 'சட்டவிரோத அணையை இடிக்கக்கோரி, தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும்; தீர்ப்பாயம் அமைக்க வலியுறுத்துவதாக கூறக்கூடாது' என,நீராய்வு வல்லுனர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
தெற்காசிய நீராய்வு நிறுவன தலைவர் ஜனக ராஜன், நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி:பெண்ணையாற்றின் கிளை ஆறான மார்கண்டேய நதியில் அணை கட்டுவதற்கு, 10 ஆண்டு களாக கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது.
இது தொடர்பான விவாதங்களும் நடந்து வருகின்றன.இது தொடர்பான திட்ட அறிக்கை தயாரித்த போதே, தமிழக அரசு எதிர்த்து இருக்க வேண்டும். அணை கட்டும் பணியை துவங்கிய போது, பெரிய அளவில் பிரச்னைகளை முன்னெடுத்திருக்க வேண்டும். 480 மீட்டர் நீளத்திற்கு, 160 மீட்டர் உயரத்திற்கு கட்டப்பட்டுள்ள இந்த அணை சாதாரணமானது கிடையாது. இந்த அணையால், ஒரு சொட்டு தண்ணீர் கூட கீழே வராது.
நீர்வளம் குறையும்
இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2,500 ஏக்கர் நிலங்கள் மட்டுமே பாதிக்கும் என்று, அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.ஆனால், பெண்ணையாற்றை நம்பி இருக்கும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் மாவட்டங்களில், நீர்வளம் குறையும்.பெண்ணையாற்றை நம்பி லட்சக்கணக்கான கிணறுகள் உள்ளன.இவற்றின் வாயிலாக நடக்கும் விவசாயம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, பல உள்ளாட்சி அமைப்புகளில், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும்.பெண்ணையாறு - பாலாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த, மத்திய நீர்வளத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த அணையால், பெண்ணையாற்றில் நீரோட்டம் குறையும். ஏற்கனவே, நீரோட்டம் குறைந்துள்ள பாலாறுக்கு, இத்திட்டத்தால் பயன் கிடைக்காது.
ஐந்து மாவட்டங்கள்
பெண்ணையாற்றை நம்பியுள்ள, ஐந்து மாவட்டங்கள் மட்டுமின்றி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில், ஆடு, மாடு வளர்ப்பு தொழில் அடியோடு பாதிக்கப்படும். கால்நடை வளர்ப்புக்கு தேவையான தண்ணீர் கிடைக்காது. கர்நாடகா அணை கட்டி விட்டதால், ஜல்சக்தி அமைச்சகத்தில் முறையிடுவதாக கூறியுள்ளனர்.இது, காலதாமதமான செயல். இவ்விஷயத்தில், நாம் கவனமாக இருந்திருக்க வேண்டும்.தமிழகத்திற்கு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மாநிலங்களில் இருந்து, ஆறுகள் வழியாக தண்ணீர் வருகிறது.தமிழகத்திற்கு மேல் உள்ள மாநிலங்கள், நம் அனுமதியை பெறாமல், நீரை சேமிக்கும் கட்டமைப்புகளை ஏற்படுத்தக் கூடாது. பெண்ணையாறு விவகாரத்திலும், மெட்ராஸ் - மைசூர் மாகாணங்கள் இடையே, இதுபோன்ற ஒப்பந்தம் உள்ளது. அதை மீறித் தான் பெண்ணையாற்றின் கிளை ஆறான மார்கண்டேய நதியின் குறுக்கே, அணை கட்டப்பட்டுள்ளது.
கண்காணிக்க வேண்டும்
கர்நாடக அரசு கட்டி இருக்கும் இந்த அணை சட்ட விரோதமானது. எனவே, இந்த அணையை இடிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும்.தமிழகத்திற்கு வரும் ஆறுகளில், நீரை தடுக்கும் பணிகளில், அண்டை மாநிலங்கள் ஈடுபடுகிறதா என்பதை, இனிவரும் காலங்களில் பூதக்கண்ணாடி போட்டு கண்காணிக்க வேண்டும்.
வாழ்வாதார பிரச்னை
குடிநீருக்கான அணை கட்டியதாக, கர்நாடக அரசு கூறுவதை, தமிழக அரசு ஏற்கக் கூடாது.இது, தமிழக விவசாயிகள், பொது மக்களின் வாழ்வாதார பிரச்னை. ஆறு என்றால், அதன் மேல் பகுதியில் தண்ணீர் ஓட வேண்டும்.குறைந்தபட்சம் ஆற்றின் கீழ்பரப்பில், நிலத்தடி நீராவது இருக்க வேண்டும். இது போன்ற சட்டவிரோத அணைகளால், மேற்பரப்பு நீரோட்டம் மட்டுமின்றி, நிலத்தடி நீர்வளமும் பாதிக்கப்படும்.அதன்பின், பாலாறு, பெண்ணையாறு என்று, அவற்றை அழைக்க முடியாது. வறண்ட பகுதி என்றே குறிப்பிட முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
கே.ஆர்.பி., சாத்தனுாருக்கு தண்ணீர் கிடைக்காது!
திருநாவுக்கரசு, ஓய்வு பெற்ற செயற்பொறியாளர், பொதுப்பணித் துறை: தென்மேற்கு பருவமழை காலங்களில், சிவப்பு, மஞ்சள் கலந்த நிறத்தில், மார்கண்டேய நதியில் இருந்து, பெண்ணையாற்றுக்கு காட்டாற்று வெள்ளம் வரும்.இது, எப்போது வரும் என்று கணிக்க முடியாது. இதன் வாயிலாக, பெண்ணையாற்றுக்கு ஒரே நேரத்தில், 3 டி.எம்.சி., அளவிற்கு நீர் கிடைக்கும். அணை கட்டியதால், இந்த நீர் தமிழகத்திற்கு கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. இதனால், கிருஷ்ணகிரி மட்டுமின்றி, பெண்ணையாற்றை நம்பியுள்ள மாவட்டங்களின் நீராதாரம் கடுமையாக பாதிக்கப்படும். பெண்ணையாற்றின் குறுக்கே, தமிழகத்தில் கெலவரப்பள்ளி அணை, கே.ஆர்.பி., மற்றும் சாத்த னுார் அணைகள் கட்டப்பட்டு உள்ளன.
மார்கண்டேய நதிக்கு மேல் பகுதியில் கெலவரப்பள்ளி அணை உள்ளதால், கர்நாடகாவின் புதிய அணையால், அதற்கு எந்த பாதிப்பும் இல்லை. கீழ் பகுதியில் உள்ளதால், கே.ஆர்.பி., அணை, சாத்தனுார் அணைக்கு வரும் காலங்களில் நீர் கிடைப்பது சந்தேகம்.
கர்நாடகாவில் அபரிமிதமாக மழை கொட்டி தீர்த்தால் மட்டுமே, நீர் கிடைக்க வாய்ப்புள்ளது.
அணை கட்டப்பட்டது எப்போ? அமைச்சர் கருத்தால் சலசலப்பு!
கர்நாடக அரசு, குடிநீர் தேவைக்காகவும், நிலத்தடி நீரை செறிவூட்டவும், பெண்ணையாற்றின் குறுக்கே 2019ல் அணையை அனேகமாக கட்டியிருப்பதாக, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். அணை கட்டுவது கூட தெரியாத அளவிற்கு குத்து மதிப்பாக காலத்தை குறிப்பிடும் அளவிற்கு, அப்போது, நீர்வளத் துறையினர் 'பிசி'யாக இருந்துள்ளனர்.கர்நாடகா - தமிழகம் இடையே, பெண்ணையாறு பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பேச்சு நடத்த குழுவை, மத்திய நீர்வள ஆணையம், 2019 இறுதியில் அமைத்துள்ளது. இந்த குழுவின் முதல் கூட்டம், 2020 பிப்., 24ல் டில்லியில் நடந்துள்ளது. இந்த கூட்டத்திற்கு, அப்போது, மத்திய நீர்வள ஆணையராக இருந்த ஆர்.கே.ஜெயின் தலைமை ஏற்றுள்ளார்.தமிழகத்தின் சார்பில் காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன், கர்நாடகா சார்பில் பன்மாநில நதிநீர் பிரச்னை தீர்வு குழு தலைவர் பங்காரஸ்வாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.அப்போது, பெண்ணையாற்றின் கிளை ஆறான, மார்கண்டேய நதியின் குறுக்கே, கர்நாடகா அணை கட்ட முயல்வது குறித்து, தமிழகத்தின் சார்பில் புகார் கூறப்பட்டுள்ளது.
அதற்கு கர்நாடகா தரப்பில், 'மார்கண்டேய நதியில் அணை கட்டும் பணிகள் 75 சதவீதம் முடிந்துள்ளன. குடிநீர் தேவைக்காக அணை கட்டப்படுவதால், ஆற்றின் கீழ் உள்ள மாநிலங்களிடம், அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை' என, கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து, மார்ச் 10ம் தேதி நடக்கும் அடுத்த கூட்டத்தில் கர்நாடகா அரசு விளக்கம் அளிக்க, மத்திய நீர்வள ஆணையர் கூறியுள்ளார். அதன்பின், கொரோனா ஊரடங்கால் கூட்டம் நடத்தப்பட்டதாக தெரியவில்லை. எனவே, கொரோனா ஊரடங்கு காலத்தில் தான், அணை கட்டுமான பணிகளை முழுமையாக, கர்நாடகா முடித்துள்ளது. ஆனால் 2019ல் அணை கட்டி முடிக்கப்பட்டதாக,கர்நாடகாவிற்கு ஆதரவாக அமைச்சர் துரைமுருகன் கூறுவது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE