பத்திரிகைகளில் மட்டுமே கதைகள் எழுதி வந்த எழுத்தாளர் ராஜேஷ்குமார், இப்போது ஆன்லைனிலும் தொடர்கதை எழுத துவங்கி இருக்கிறார். 'பிஞ்ச்' (bynge)செயலியில் இவர் எழுதி வரும், 'நள்ளிரவு செய்திகள் வாசிப்பது துர்கா' என்ற இவரது புதிய தொடர் கதையை, 60 நாட்களில், 8.5 லட்சம் வாசகர்கள் படித்துள்ளனர்! ஒரு மாலை நேரத்தில், அவருடன் பேசினோம்....!
'நள்ளிரவு செய்திகள் வாசிப்பது துர்கா' தொடர்கதையில் என்ன விசேஷம்?
வரும் காலத்தில் இந்த பூமியில் வாழப்போவது மனிதர்களா இல்லை வைரஸ்களா ? என்பதுதான் இந்த கதையின் மையக்கரு.இப்போது உலக மக்கள் தொகை 750 கோடி. 2030ல் இது 1000 கோடியாகிவிடும். இது நடக்க கூடாது என்பது ஒரு சைக்கோ விஞ்ஞானியின் திட்டம். வைரஸ் பற்றி ஆராய்ச்சியில் இறங்கும் அவன், மனிதர்களுக்கு எதிராக ஒரு உயிர் கொல்லி வைரசை உருவாக்குகிறான். அவனது நோக்கம், சைலன்டாக மனித இனத்தை அழிக்க வேண்டும் என்பதுதான். இந்த சைக்கோ விஞ்ஞானியின் சதி திட்டத்தை அறிந்து கொண்ட இன்னொரு விஞ்ஞானி, இதை தடுக்க மாற்று மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறான். சைக்கோவின் திட்டப்படி, வைரஸ் பரப்பப்படுகிறது. இதை கட்டுப்படுத்த ஒரு டீம் களத்தில் இறங்குகிறது. அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் கதையின் திக்...திக்...திகில்!
கொரோனா வைரசை மையப்படுத்திய கதையா?
இது நேரடியாக கொரோனா வைரஸ் பற்றிய கதையல்ல, இந்த கதையில் கொரோனா என்ற வார்த்தையே வராது. 'வைரஸ் அண்டர் இன்வெஸ்டிக்கேஷன்' (வியுஐ) என்ற புதிய வைரஸ் பற்றியது. எதிர்காலத்தில் இப்படியும் நடக்கும் என்பது பற்றிய சைன்டிபிக்கான நாவல் இது. இப்போது வாசகர்கள், அறிவியல் பூர்வமான கதைகளைதான் அதிகம் விரும்புகின்றனர். அதனால் இப்போது நடக்கும், நடக்க போகும் விஷயங்களை பற்றிதான், கதைகளாக எழுதுகிறேன்.
இப்போது கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டதா ? இல்லை இயற்கையாக உருவானதா ? என்ற குழப்பம் இருக்கிறது. இந்த பிரச்னையை கதைக்கான கருவாக எடுத்து இருக்கிறேன். நள்ளிரவில் செய்திகள் வாசிக்கும் துர்கா யார் ? நள்ளிரவில் என்ன அதிர்ச்சியான செய்திகளை அவள் வாசிக்கிறாள், அந்த செய்தி யாருக்கானது. அதனால் என்ன விபரீதம் நடக்க போகிறது...இதுதான் கதை.
'பிளாட் நம்பர், 144 அதிரா அபார்ட்மென்ட் 'என்ற இனனொரு தொடரும் ஆன்லைனில் வருகிறதே ?
ஆமாம்... அதிரா என்ற அபார்ட்மென்டில் , 144 நம்பர் பிளாட்டில் தங்குபவர்கள் எல்லோரும் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர். ஆனால் அவர்கள் கொலை செய்யப்பட்டதுக்கான எந்த தடயமும் இருப்பதில்லை. பிரேத பரிசோதனையில், இயற்கை மரணம் போல்தான் ரிப்போர்ட் இருக்கிறது. இந்த கொலைகள் ஏன், எதற்காக நடக்கிறது என்பது மர்மமாக இருக்கிறது. அந்த சஸ்பென்சை உடைத்து கொலைக்கும்பலை கண்டுபிடிப்பதுதான், அதிரா அபார்ட்மென்டின் கதை.
இணையத்தில் இந்த கதைகளுக்கு, வாசகர்கள் மத்தியில் வரவேற்பு எப்படி இருக்கிறது ?
பத்திரிகையில் கதைகள் படிக்கும் வாசகர்களை விட, ஆன்லைனில் கதைகள் படிக்கும் வாசகர்களிடம், சிறப்பான வரவேற்பு இருக்கிறது. வேகமாக படிக்கின்றனர். உடனுக்கு உடன் கருத்துக்களை பதிவிடுகின்றனர்.'நள்ளிரவு செய்திகள் வாசிப்பது துர்கா' கதையை, இரண்டு மாதத்தில், 8.5 லட்சம் வாசகர் படித்து இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில், என் கதைகள் அவர்களுக்கு நல்ல பொழுது போக்காக இருந்திருக்கிறது.
ஜனரஞ்சகமாக எழுப்படும் கதைகள், இலக்கியமாகாது என, நவீன எழுத்தாளர்களால் விமர்சிக்கப்படுகிறதே ?
சிலர், குடும்ப கதைகளை எழுதுகின்றனர். சிலர் சமூக கதைகளை எழுதுகின்றனர். நான் கிரைம் கதைகளையும், சமூக கதைகளையும் எழுதுகிறேன். பல ஆயிரம் வாசகர்கள் விரும்பி படிக்கின்றனர். மக்கள் விரும்பி படிக்கும் படைப்புகளை, எப்படி இலக்கியம் இல்லை என்று சொல்ல முடியும். எது இலக்கியம் என்பதை வாசகர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
உங்கள் கதைகளுக்கான வெற்றி பார்முலா என்ன?
என் கதைகளுக்கான பார்முலா என் உழைப்புதான். ஒரு நாவல் எழுதும் முன், அதற்கான தரவுகளை தேடி சேகரிக்கிறேன். இன்றைக்கு இணைய வசதி இருக்கிறது. அதில் இருந்து நிறைய தகவல்களை எடுக்கலாம். வாசகர்கள் முன்பு மாதிரி இல்லை.அவர்களும் இன்டர்நெட், கூகுள், பேஸ்புக், டுவிட்டர், என, பல தளங்களில் படிக்கின்றனர். அவர்களை நாம் திருப்திபடுத்த வேண்டும் என்றால், அவர்களை விட நாம் அதிகம் படிக்க வேண்டும். அந்த தேடல் எனக்கு இருப்பதால்தான், இத்தனை லட்சம் வாசகர்கள் என் கதைகளை படிக்கின்றனர்.
சினிமாவுக்கு என்ன கதை எழுதி இருக்கிறீர்கள்?
'யுத்த சத்தம்' என்ற என் கதையை, இயக்குனர் எழில் திரைப்படமாக எடுத்து இருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ்க்கு தயாராக இருக்கிறது. அது ஒரு வித்தியாசமான கதை. இன்றைக்கு இளைஞர்கள் போதை பொருட்களுக்கு, அடிமையாகி வருகின்றனர்.இந்த கதையில், ஒரு புது வகையான போதை பொருளுக்கு, ஒரு இளைஞன் அடிமையாகிறான். அது ஒரு இசை. அதை கேட்டவுடன் முழுமையாக போதை ஏறிவிடும். இந்த இசைக்கு பல இளைஞர்கள் அடிமையாக்கப்பட்டு வருகிறார்கள்.
அந்த இசையில் அப்படி என்ன இருக்கிறது, அதை தொடர்ந்து கேட்பவர்கள் என்ன ஆகிறார்கள் என்பதுதான் கிளைமாக்ஸ்!
'நள்ளிரவு செய்திகள் வாசிப்பது துர்கா' கதையை, இரண்டு மாதத்தில், 8.5 லட்சம் வாசகர் படித்து இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில், என் கதைகள் அவர்களுக்கு நல்ல பொழுது போக்காக இருந்திருக்கிறது.
தொடர்ந்து அதகளம்!
இவரது கதையை, படித்த எழுத்தாளர் சாருநிவேதா, ''பரவாயில்லை, ஆள் அதகளப்படுத்துகிறார். ஆச்சரியம் என்னவென்றால் எப்படி ஒருத்தர் ஐம்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து அதகளப்படுத்திக் கொண்டே இருக்க முடிகிறது. மனிதர் வாராவாரம் எப்படித்தான் இப்படி சஸ்பென்ஸ் வைத்து எழுதுகிறாரோ,'' என, வியந்து எழுதி இருக்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE