தமிழகத்தில், 1.52 கோடிக்கு மேல், பொது மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், ஒன்பது கோடிக்கு மேல் தடுப்பூசி போட வேண்டி உள்ளது. தடுப்பூசி மீதான நம்பிக்கை காரணமாக, தினமும் இரண்டு லட்சம் பேர் முன் வருகின்றனர். ஆனால், மத்திய தொகுப்பில் இருந்து கிடைக்கும் தடுப்பூசிகள், தமிழகத்திற்கு போதுமானதாக இல்லை.இதற்கிடையே, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட, மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால், தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக, முன்கள பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் என, முன்னுரிமை அடிப்படையில், தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மாதத்தில் குறைந்தது ஐந்து நாட்களாவது, தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. அப்படி இருந்தும், முதல்வர் ஸ்டாலின் மகனான உதயநிதியின், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் மட்டும், சிறப்பு சலுகையில் தடுப்பூசி போடப்படுகிறது. குறிப்பாக, அத்தொகுதி இடம் பெற்றிருக்கும், தேனாம்பேட்டை மண்டலத்தில் தடுப்பூசி இல்லையென்றாலும், எம்.எல்.ஏ., உதயநிதி நடத்தும் சிறப்பு முகாமில் மட்டும், தினசரி குறைந்தது, 50 பேருக்காவது தடுப்பூசி போடப்படுகிறது.

தினசரி, அந்தந்த பகுதிகளில் முகாம் அமைத்து, தடுப்பூசி போடப்படுவதாலும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதாலும், அத்தொகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். அங்கு, 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதால், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், சமீபத்தில் பாராட்டு தெரிவித்தார். ஆனால், இச்சலுகை மற்ற, தி.மு.க., - எம்.எல்.ஏ.,களுக்கு கிடைப்பதில்லை. மற்ற பகுதிகளில், பொது மக்கள் நீண்ட வரிசையிலும், தடுப்பூசி கிடைக்காமலும் தவித்து வருகின்றனர்.
குறிப்பாக, முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற்ற, கொளத்துார் தொகுதியிலும், இந்நிலை தான் தொடர்கிறது. ஆனால், உதயநிதி தொகுதியில் மட்டும், மாநகராட்சி அனைத்து சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதன் காரணமாகவே, சென்னையில் அதிகம் தடுப்பூசி போட்ட தொகுதிகளில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி முன்னிலை வகிக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE