காஸியாபாத்: இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் யாருக்கும் ஆபத்து இல்லை. முஸ்லிம்கள், இந்துக்கள் என்ற இரு குழுக்கள் வேண்டாம். இணைந்து வாழ்வதே நாட்டின் வளர்ச்சிக்க உகந்தது என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் உபியில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்டார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இஸ்லாமிய பிரிவான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் கூட்டம் காசியாபாத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் மோகன் பகவத் பேசியதாவது:
இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறுபவர்கள் இந்துக்களே அல்ல . வழிபாட்டை வைத்து மக்களை வேறுபடுத்த முடியாது. அனைத்து இந்தியர்களுக்கும் டிஎன்ஏ ஒன்றுதான் . இந்தியா போன்ற ஒரு ஜனநாயகத்தில், இந்துக்கள் அல்லது முஸ்லிம்களைக் காட்டிலும் இந்தியர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்த முடியும் .
முஸ்லிம்கள் இங்கு வாழக்கூடாது என்று கூறுபவர் ஒரு இந்து அல்ல. பசு புனிதமானது. இதனை கொல்வது தவறு, இதுபோல் ஒரு மனிதனை கொல்வதும் இந்து தர்மத்திற்கு எதிரானது. இவர்கள் மீது சட்டம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 40,000 ஆண்டுகளாக நாம் அனைவரும் ஒரே மூதாதையர்களின் வழி வந்தவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் ஒரே மரபணு தான் இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் ஆபத்தில் இருக்கிறார்கள் என்கிற சதி வலையில் சிக்கிக் கொள்ள வேண்டாம். முஸ்லிம்களுக்கு எந்த விதமான ஆபத்திலும் இல்லை. நாட்டில் ஒற்றுமை இல்லை என்றால் வளர்ச்சி சாத்தியமில்லை. ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால் ஒருவருக்கு ஒருவர் பேசுவது அவசியம் இவ்வாறு அவர் கூறினார்.