பெரியகுளம்: தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அலட்சியத்தால் உயிருடன் இருந்த குழந்தையை இறந்ததாக கூறியதால் அடக்கம் செய்ய முயன்ற போது குழந்தை கண் விழித்ததால், மீண்டும் மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் இக்குழந்தை இன்று (ஜூலை 5) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தாமரைக்குளம் தாசில்தார்நகர் வேன் டிரைவர் பிளவேந்திரராஜா 35. இவரது மனைவி பாத்திமாமேரி 30. இவர்களுக்கு 8, 5 வயதில் குழந்தைகள் உள்ளனர். கர்ப்பமாக இருந்த பாத்திமா மேரி நேற்று முன்தினம் (ஜூலை 03) இரவு பிரசவத்திற்கு தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அதிகாலை 3:30 மணிக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. சிறிது நேரத்தில் குழந்தை இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, அடக்கம் செய்ய உறவினர்கள் எடுத்து சென்றபோது, குழந்தை கண்விழித்து, கை, கால்களை அசைத்தது.

அதிர்ச்சியடைந்த உறவினர்கள் குழந்தையை தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். 700 கிராம் எடையுள்ள அக்குழந்தைக்கு செயற்கை சுவாச கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தது. இத்தகவலை மருத்துவமனை டீன் பாலாஜி நாதன் தெரிவித்துள்ளார். மேலும், உயிருள்ள குழந்தையை இறந்ததாக கூறி ஒப்படைத்த விவகாரம் தொடர்பாக பிரசவத்தின் போது பணிபுரிந்த டாக்டர், உதவியாளர், செவிலியருக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் வழங்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE