தையல் மிஷின்கள் சத்தமாக ஒடிக்கொண்டிருக்கிறது.
ஒரு அறையில் மாஸ்க் தைக்கிறார்கள் இன்னோரு அறையில் அதை உறையிலிடுகிறார்கள் அடுத்த அறையில் அதை மொத்தமாக பேக்கிங் செய்கிறார்கள் ஒவ்வெரு அறையிலும் ஐந்து பேர் என மொத்தம் பதினைந்து பேர் பேச நேரமில்லாமல் பம்பரமாய் சுழன்று வேலை பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்
வேலை செய்யும் சிலரது முகத்தில் இருந்து வியர்வைத் துளிகள் எட்டிப்பார்க்கின்றன ஆனால் அந்த வேர்வையில் அளவில்லாத ஆனந்தமும் நிம்மதியும் பெருமிதமும் கலந்து இருக்கிறது
கடந்த மாதம் வரை டில்லியின் சிவப்பு விளக்கு பகுதியில் உடலை விற்றுப் பிழைத்து வந்த இந்த பெண்கள் இப்போது உழைத்துப் பிழைத்து வருவதால் பெருமிதம் இருக்கத்தானே செய்யும்.
டில்லியின் சிவப்பு விளக்கு பகுதியான ஜி.பி.,ரோட்டில் சுமார் நாலாயிரம் பெண்கள் அந்த மாதிரியான தொழிலில் ஈடுபட்டிருந்தனர் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள்தான்.
சமூக ‛இடைவெளி' இவர்களில் பலரை இதுவரை அனுபவித்திராத பசி பட்டினியை அனுபவிக்க வைத்துவிட்டது.இந்த தொழிலைத் தவிர வேறு எந்த தொழிலும் தெரியாத தமது எதிர்காலம் என்னவாகுமோ என பயந்தனர்.
இந்த நேரத்தில்தான் ‛கத்கதா' என்ற பெண்களுக்கான தொண்டு நிறுவனம் இவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியது.
நாங்களே உங்களுக்கு டெய்லரிங் கற்றுக் கொடுக்கிறோம் நீங்கள் தைப்பதை நாங்களே விற்றுவிடுகிறோம் உங்களுக்கு நியாயமான நேர்மையான வருமானம் கிடைக்கும் வாருங்கள் என்று அழைத்தனர்
ஆரம்பத்தில் பதினைந்து பெண்கள் மட்டுமே முன்வந்தனர் அவர்களுக்கு கிடைத்த புது அனுபவம் புது வாழ்க்கை புது சந்தோஷத்தை பழைய தோழிகளிடம் பகிர்ந்து கொண்டதை அடுத்து நிறைய பேர் டெய்லரிங் கற்க முன்வந்தனர்.
வறுமையாலும்,வஞ்சிக்கப்பட்ட உறவுகளாலும்தான் பெரும்பாலானவர்கள் இந்த தொழிலுக்கு வந்துள்ளனர். இவர்களது உடம்பை பார்த்த யாரும் இவர்களுக்குள் இருக்கும் மனசை பார்க்கவில்லை.நாங்கள் மனம்விட்டு பேசினோம் குழந்தையைப் போல அழுது தீர்த்தனர் குடும்பமாய் வாழவிரும்பினர் .பலருக்கும் குழந்கைள் இருக்கிறது தங்கள் பழைய தொழிலின் நிழல் கூட அவர்கள் மீது படரக்கூடாது என்ற அவர்களின் துடிப்பை உணர்ந்தோம் வழிகாட்டினோம் பிடித்துக் கொண்டனர் இனி இவர்களை யாராலும் மாற்றமுடியாது என்கிறார் தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆர்ஜிதா.
எங்களிடம் பயிற்சி பெறும் பெண்கள் பயிற்சி முடிந்ததும் அவர்கள் சொந்த ஊருக்கு சென்று அங்கு இருந்தும் நாங்கள் கேட்கும் பொருளை தைத்துக் கொடுத்தால் போதும் என்றோம் இரண்டாயிரம் பேர் இதில் பயனடைந்துள்ளனர்.
வெறும் மாஸ்க் மட்டுமின்றி உடைகள் துணிப்பைகள் என்று பல்வேறு வித பொருட்களும் தயாரிக்கப்படுவதால் எந்தக் காலத்திலும் இவர்கள் தயாரிப்பிற்கு தேவையிருக்கும்.மக்களை நேரடியாக சந்தித்து விற்கவும் இவர்களுக்கு பயிற்சி கொடுத்துள்ளோம் அப்போதுதான் இந்த உலகம் எவ்வளவு அன்பு மயமானது என்பதை உணரமுடியும் என்றும் குறிப்பிட்டனர்.
கொரோனா முடிவதற்குள் மீதம் உள்ள பெண்களை மீட்டு புது வாழ்க்கை கொடுத்துவிடுவோம் என்கின்றனர் நம்பிக்கையுடன்.
ஒரு நாலு வயது குழந்தை,தாயின் மடியில் உட்கார்ந்து விளையாடிக் கொண்டு இருந்தது இந்த குழந்தையை வெளியே விளையாடவிட்டுவிட்டு கதவை சாத்தி தாழ்ப்பாள் போட்டுக் கொண்ட அநத இருண்ட வாழ்க்கையை இனி ஒரு போதும் வேண்டாம், இதோ என் செல்லம் ‛நீ என்னம்மா செய்கிறாய்' என்று கேட்கிறது இவ்வளவு நாள் இந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் இருந்தேன்,இப்போது ‛அம்மா தைக்கிறேண்டா கண்ணு'என்று பெருமிதமாக சொல்கிறேன்-அந்த இளம்தாயின் பேச்சில் பெருமிதம் பொங்கியது
இப்போது தையல் மிஷின்களின் சத்தம் மிக இனிமையாக இருந்தது.
-எல்.முருகராஜ்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE