புதுடில்லி : மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே - பிரதமர் நரேந்திர மோடி சந்திப்புக்கு பின், பா.ஜ., - சிவசேனா கூட்டணி மீண்டும் உருவாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. உத்தவ் தாக்கரேவை முதல்வராக தொடர சம்மதித்துள்ள பா.ஜ., மேலிடம், தங்கள் கட்சியைச் சேர்ந்த தேவேந்திர பட்னவிசுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அமைச்சரவை விஸ்தரிப்பை,பிரதமர் மோடி தாமதப்படுத்தி வருவதற்கு இதுவே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
மஹாராஷ்டிராவில் சிவசேனா - பா.ஜ., இடையே, 25 ஆண்டுகளாக உறுதியான கூட்டணி இருந்தது.கடந்த, 2019 சட்டசபை தேர்தலுக்கு பின், கருத்து வேறுபாடு எழுந்ததை அடுத்து, காங்கிரஸ்மற்றும் தேசியவாத காங்., உடன் சிவசேனா கூட்டணி அமைத்து, ஆட்சியில் அமர்ந்தது.சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார். தேசியவாத காங்.,கைச் சேர்ந்த அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.
அமலாக்கத்துறை
தேசியவாத காங்.,கைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், ஊழல் புகாரில் சிக்கி பதவியை இழந்தார். இந்த வழக்கை, சி.பி.ஐ., மற்றும் அமலாக்க துறை விசாரித்து வருகிறது. இந்த விவகாரம், சிவசேனாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், மத்திய அமைச்சரவையை விஸ்தரிக்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்தார். இதற்காக, மூத்த அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்களை அழைத்து, பிரதமரும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஆலோசனை நடத்தினர்.எந்த நேரத்திலும் அமைச்சரவை விஸ்தரிப்பு தொடர்பான அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நேரத்தில் மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, பிரதமர்மோடியை சமீபத்தில் சந்தித்து பேசினார்.
விளக்கம்
மஹாராஷ்டிரா அரசியல்கூட்டணியில் ஏற்பட போகும் மாற்றத்தின் துவக்கமாக இந்த சந்திப்பு பார்க்கப்பட்டது.இந்த சந்திப்பின் போது, மஹாராஷ்டிரா கூட்டணியில் நிலவும் நெருக்கடி குறித்து பிரதமரிடம் உத்தவ் விளக்கியதாக கூறப்படுகிறது. பா.ஜ., - சிவசேனா கூட்டணியை மீண்டும் புதுப்பிப்பது குறித்து, இரு தலைவர்களும் விவாதித்ததாக தெரிகிறது.
மீண்டும் கூட்டணி உருவானால், உத்தவ் தாக்கரேவின் நேரடி போட்டியாளராக கருதப்படும், பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிசுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்க போவதாகவும், முதல்வர் பதவியில் உத்தவ் தொடருவதற்கு பிரதமர் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. பா.ஜ.,வுக்கு இரண்டு துணை முதல்வர்கள் பதவி வழங்குவது குறித்தும் விருப்பம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
உத்தவ் தாக்கரேவின் பதிலுக்காக காத்திருப்பதால், மத்திய அமைச்சரவை விஸ்தரிப்பு தொடர்பான அறிவிப்பில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக, அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். பிரதமரின் திட்டம், சிவசேனா தலைமைக்கும் ஏற்புடையதாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, மஹாராஷ்டிராவில் பா.ஜ., - சிவசேனா கூட்டணி மீண்டும் மலர, வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அவசியம்
''பா.ஜ.,வை பொறுத்தவரை பிரதமர் எடுக்கும் முடிவே இறுதியானது. எனக்கு வழங்கிய எதிர்க்கட்சி தலைவர் பதவியை சிறப்பாக செய்து வருகிறேன். நான் டில்லிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன்,'' என, தேவேந்திர பட்னவிஸ் சமீபத்தில் தெரிவித்தார்.
'மஹாராஷ்டிராவில் தேசியவாத காங்., ஊழல் புகாரில் சிக்கி, முதல்வருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே பழைய கூட்டணி மீண்டும் துளிர்க்க, இப்போது அவசியம் உருவாகி உள்ளது' என, பா.ஜ., தலைவர்கள் கருதுகின்றனர்.
பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் ஒரு ஆண்டு 'சஸ்பெண்ட்'
மஹாராஷ்டிரா சட்டசபை கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, பா.ஜ.,வைச் சேர்ந்த 12 எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகரின் இருக்கை அருகே சென்று அமளியில் ஈடுபட்டதாக, சிவசேனா குற்றம்சாட்டியது. இதையடுத்து, 12 பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களை சபை நடவடிக்கைகளில் இருந்து ஓராண்டு, 'சஸ்பெண்ட்' செய்ய, சட்டசபை விவகார துறை அமைச்சர் அனில் பராப் தீர்மானம் கொண்டு வந்தார். குரல் ஓட்டெடுப்பு வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, ''சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், சபை நடவடிக்கைகளில் ஓராண்டுக்கு பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்,'' என, அமைச்சர் அனில் பராப் தெரிவித்தார்.
பா.ஜ., எதிரியில்லை!
சிவசேனாவைச் சேர்ந்த எம்.பி., சஞ்சய் ராவத் கூறியதாவது:பா.ஜ.,வும், சிவசேனாவும், இந்தியா - பாகிஸ்தானை போல எதிரி இல்லை. நடிகர் அமீர் கான், அவரது மனைவி கிரண் ராவை போல நட்பு பாராட்டுகிறவர்கள். அமீர் கானும், அவரது மனைவியும் தங்கள் விவாகரத்தை சமீபத்தில் அறிவித்தாலும், 'பரஸ்பரம் நட்பு தொடரும்' என தெரிவித்தனர். அதை போலத்தான், அரசியல் ரீதியாக எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், என்றுமே நாங்கள் நல்ல நண்பர்கள். அதே நேரம், மஹாராஷ்டிராவில் தற்போது உள்ள கூட்டணி தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE