9ம் தேதி மாவட்ட செயலர்களுடன் ஓ.பி.எஸ்., -இ.பி.எஸ்.,ஆலோசனை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

9ம் தேதி மாவட்ட செயலர்களுடன் ஓ.பி.எஸ்., -இ.பி.எஸ்.,ஆலோசனை

Updated : ஜூலை 07, 2021 | Added : ஜூலை 05, 2021 | கருத்துகள் (5)
Share
ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, மாவட்ட செயலர்களுடன், வரும் 9ம் தேதி, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் ஆலோசனை நடத்துகின்றனர்.அ.தி.மு.க., ஆட்சியில் 2019ம் ஆண்டு, 27 மாவட்டங்களுக்கு மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. காஞ்சிபுரம், விழுப்புரம், வேலுார், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, புதிதாக, செங்கல்பட்டு,
  மாவட்ட செயலர்கள்,  9ம் தேதி  ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்.,

ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, மாவட்ட செயலர்களுடன், வரும் 9ம் தேதி, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் ஆலோசனை நடத்துகின்றனர்.அ.தி.மு.க., ஆட்சியில் 2019ம் ஆண்டு, 27 மாவட்டங்களுக்கு மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது.

காஞ்சிபுரம், விழுப்புரம், வேலுார், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, புதிதாக, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்துார், தென்காசி என, ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதனால், அங்கு தேர்தல் நடத்தப்படவில்லை.வரும் செப்., மாதத்திற்குள் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கும், ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, உள்ளாட்சி தேர்தலை நடத்த, ஆளுங்கட்சி தயாராகி உள்ளது. சமீபத்தில், தி.மு.க., மாவட்ட செயலர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அ.தி.மு.க.,வும் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள, ஒன்பது மாவட்ட செயலர்களுடன், வரும் 9ம் தேதி, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., ஆலோசனை நடத்துகின்றனர்.

சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தோல்வி அடைந்த தொகுதிகளுக்கான மாவட்ட செயலர்களிடம், வரும் 12ம் தேதி முதல் தொடர்ந்து ஐந்து நாட்கள், அ.தி.மு.க., அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட உள்ளது.தேர்தலில் செலவு செய்யாமல், கட்சி வழங்கிய பணத்தை சுருட்டிய புகார்; தி.மு.க.,வுக்கு ஆதரவாக உள்ளடி வேலை பார்த்த புகார் தொடர்பாக விசாரிக்கப்பட உள்ளது.




சசிகலா ஆதரவு நிர்வாகிகள் நீக்கம்!



சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்ட அ.தி.மு.க.,வினர் நேற்று நீக்கப்பட்டனர்.இது குறித்து ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., கூட்டறிக்கை:கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட, சேலம் புறநகர் மாவட்ட விவசாய பிரிவு செயலர் செல்லத்துரை, கெங்கானாபுரம் ஒன்றியம், தங்காயூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.பாலாஜி.சேலம் புறநகர் மாவட்ட மீனவர் பிரிவு முன்னாள் செயலர் சுரேஷ், நரசிங்கபுரம் நகர மாவட்ட பிரதிநிதி மீனா தியாகராஜன், கள்ளக்குறிச்சி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலர் ஆனந்த், அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி இணை செயலர் வேங்கையன். துாத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெ., பேரவை இணை செயலர் ரூபன் வேலவன், விளாத்திக்குளம் பேரூராட்சி ஜெ., பேரவை செயலர் பொன்ராஜ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். - நமது நிருபர் -

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X