புதுடில்லி : ''இந்திய விமானப் படைக்கு 'ரபேல்' போர் விமானங்கள் வாங்கியதில் நடந்த ஊழல் குறித்து பார்லி. நிலைக் குழு விசாரணைக்கு உத்தரவிடுவதைத் தவிர மத்திய அரசுக்கு வேறு வழியில்லை'' என காங்கிரஸ் எம்.பி. ராகுல் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரான்சிடம் இருந்து 59 ஆயிரம் கோடி ரூபாய்க்கு 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.இதில் ஊழல் நடந்ததாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் குற்றம்சாட்டி வந்தார். இது தொடர்பான வழக்கில் 'ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் எதுவும் நடக்கவில்லை' என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் ரபேல் ஒப்பந்தத்தில் இடைத்தரகர் ஒருவருக்கு 8 கோடி ரூபாய் கைமாறியதாக பிரான்ஸ் ஊடகங்களில் செய்தி வெளியானது.இது தொடர்பான புகாரை விசாரிக்க ஒரு நீதிபதியை பிரான்ஸ் பொது வழக்கு சேவைகள் அமைப்பு நியமித்துள்ளது.ராகுல் கூறியுள்ளதாவது: ரபேல் ஊழல் விசாரணை குறித்த தகவல் வெளியாகி 48 மணி நேரமாகியும் பிரதமர் மோடி மவுனம் சாதிக்கிறார்.
ஆனால் மோடி போல உண்மை மவுனமாக இருக்காது. ஒரு நாள் வெளிவந்தே தீரும். மத்திய அரசுக்கு ரபேல் ஊழல் தொடர்பாக பார்லி. கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடுவதை தவிர வேறு வழியில்லை.இவ்வாறு அவர்கூறியுள்ளார்.
இத்துடன் ரபேல் ஊழல் புகார் அளித்த பிரான்சின் 'மீடியாபார்ட்' இணைய இதழின் பத்திரிகையாளர் பேசிய 'வீடியோ'வையும் ராகுல் வெளியிட்டுள்ளார். அதில் ரபேல் விமான தயாரிப்பு நிறுவனமான டசால்ட் உடன் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் இணைந்து செயல்பட மத்திய அரசு வலியுறுத்தியதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்காய்ஸ் ஹாலண்டே தம்மிடம் கூறியதாக பத்திரிகையாளர் பேசுவது இடம் பெற்றுள்ளது.இந்நிலையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகளை பா.ஜ. செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ரா மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE