சென்னை :தமிழக சட்டசபையில், முதன்முறையாக, காகிதம் இல்லாத, 'இ - பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட உள்ளது. இப்புதிய திட்டம் தொடர்பாக, அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இத்தகவலை, சபாநாயகர் அப்பாவு நேற்று தெரிவித்தார். சட்டசபை விதிகள் குழு கூட்டம், அதன் தலைவரான சபாநாயகர் அப்பாவு தலைமையில், நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. முதல்வர் ஸ்டாலின், துணை சபாநாயகர் பிச்சாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோரிக்கை
சபை முன்னவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., ஆகியோர் பங்கேற்கவில்லை. கூட்டத்திற்கு பின், சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டி:சட்டசபை தொகுதிகளில் இருந்து வரும் கோரிக்கை மனுக்களை, 'இ - மெயில்' வாயிலாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பலாமா; நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, எம்.எல்.ஏ.,க்களுக்கு பயிற்சி அளிக்கலாமா என்பது குறித்து, இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. நிச்சயமாக, நல்ல முடிவு எடுக்கப்படும்.நவீன காலத்தை நோக்கி, அறிவியல் வளர்ச்சியை நோக்கி, நாம் போகும் போது அனைவரும் சந்தோஷப்படுவர்.கருணாநிதி, 1996ல் முதல்வராக இருந்தபோது, பெங்களூரு நகரம், தகவல் தொழில்நுட்பத்தில் வளர்ச்சி பெற்றதை அறிந்து, இங்கும், 'டைடல் பார்க்' அமைத்தார். அதன் வாயிலாக, லட்சக்கணக்கில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார்.
ஆலோசனை
கணினியில் ஆங்கிலம், ஹிந்தி மென்பொருள் மட்டுமே பயன்படுத்தப்பட்ட நிலையில், இணைய மாநாடு நடத்தி, தமிழை பயன்படுத்தக்கூடிய நிலையை கருணாநிதி முன்னெடுத்தார். கணினி தமிழை அனைவரும் இப்போதும் எளிதாக பயன்படுத்துகிறோம். அன்று, கருணாநிதி வைத்த புள்ளி தான், இதற்கு காரணமாக அமைந்தது.சட்டசபையில் காகிதம் இல்லாத, இ - பட்ஜெட் தாக்கல் செய்ய, முதல்வர் விரும்புகிறார். இதுகுறித்தும் இன்று பேசப்பட்டது. இதற்காக, எம்.எல்.ஏ.,க்களுக்கு பயிற்சி அளிக்க, முதல்வர் ஆலோசனை கூறியுள்ளார். இதை அனைவரும் ஏற்றுள்ளனர். கடைசி எம்.எல்.ஏ.,வும், அதை புரிந்து கொள்ளும்படி பயிற்சி பெறும் வரை, இதை படிப்படியாக செயல்படுத்த முடிவு செய்யப்
பட்டுள்ளது.
சாத்தியக் கூறுகள்
நடப்பாண்டிலேயே, இ - பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதா என்றும் ஆராயப்படுகிறது.இவ்வாறு சபாநாயகர் கூறினார்.இதைத் தொடர்ந்து, சட்டசபையில் எம்.எல்.ஏ., ஈஸ்வரன், 'ஜெய்ஹிந்த்' குறித்து பேசியதற்கு, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அப்பாவு, ''இது சட்டசபையில் நடந்த பிரச்னை. எனவே, பொதுவெளியில் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை,'' என்றார்.
வேளாண் பட்ஜெட் குறித்து துறைகளிடம் கருத்து கேட்பு!
வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து, பல்வேறு துறை அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.'வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்' என, தி.மு.க., தரப்பில், தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், இதுகுறித்த அறிவிப்பு, கவர்னர் உரையிலும் இடம் பெற்றது. இம்மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, வேளாண் துறையினர் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், தலைமை செயலர் இறையன்பு தலைமையில், இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது. அதில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் உள்ளிட்ட அதிகாரிகள், பல்வேறு திட்டங்களை எடுத்து கூறியுள்ளனர். மின்சாரம், கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு, சுற்றுச்சூழல் மற்றும் வனம் உள்ளிட்ட துறைகளின் வாயிலாக, விவசாயிகள் பயன் பெறும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன.
இத்திட்டங்களை ஒருங்கிணைத்து, வேளாண் பட்ஜெட்டில் இடம் பெற செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, இத்துறை அதிகாரிகளையும் அழைத்து, முதற்கட்டமாக கருத்து கேட்கப்பட்டுள்ளது. இத்துறைகளின் வாயிலாக ஏற்கனவே செயல்படுத்தி வரும் திட்டங்கள், புதிதாக செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து, அறிக்கை தரும்படியும் கேட்கப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE