மெதுவடையை ருசித்துக்கொண்டே, ''மைக் மோகன் மாதிரி உதட்டை மட்டும் அசைக்கறதுனா 'ஓகே'; அது சரிக்கா... பெண் அமைச்சரோட கணவருக்கு, 'மைக்'ல பேசறதுனா அவ்ளோ பிடிக்குமாம்'' என்று, 'புதிர்' போட்டாள் மித்ரா.
சித்ராவின் 'விழி'கள் விரிந்தன;''தாராபுரம் ஸ்கூல்ல, அமைச்சர் தலைமைல, மாணவர்களுக்கு கட்சி சார்பில், புத்தகங்கள் கொடுத்திருக்காங்க... அமைச்சர் பேசுனதுக்கப்புறம், 'மைக்' பிடிச்ச, அவரோட கணவர், தி.மு.க., ஆட்சியை புகழ்ந்து தள்ளியிருக்காரு. அமைச்சரு பேசுனதுக்கு அப்புறமா, யாரும் பேசுறது மரபு கிடையாது. கட்சிக்காரங்களே ஆதங்கப்பட்டிருக்காங்க'' என்றாள் மித்ரா.
''மரபு மாத்தலாம்னு நெனச்சாரோ என்னவோ... அவிநாசி யூனியன் கூட்டத்துல, ஊராட்சிகள்ல, பெண் தலைவர்களுக்கு பதிலா, கணவன்மார்கள் தான் ஆதிக்கம் செலுத்தறாங்கன்னு குத்தம் சொன்னாங்க... ஊராட்சிகள்ல மட்டுமில்ல... அமைச்சர் மட்டத்தில கூட, இப்படித்தான் இருக்குது, யதார்த்தத்துல, இதையெல்லாம் மாத்த இன்னும் கொஞ்ச காலம் ஆகும்போல...''தன்னைத்தானே 'சமாதானம்' செய்துகொண்டாள் சித்ரா.
'சினம்' கொள்ளலாமா?'
'மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு புதுசா வந்திருக்கிற பெரிய டாக்டரிடம், குறைகள், கோரிக்கைகளை மனுவா எழுதி, அவரை போய் சந்திக்கிற செவிலியர், ஊழியருங்ககிட்ட, 'உங்க குறைகளை, என்கிட்ட சொன்னா, நான் என்ன செய்றது; எனக்கு உதவியாளர் இல்ல; கம்ப்யூட்டர் ஆபரேட்டர் இல்ல' என்று 'சினம்' கொள்கிறாராம்'' என்று அடுத்த சங்கதிக்கு மாறினாள் மித்ரா.
''அவரு சொல்றதுலயும் நியாயம் இருக்கு... ஆனா, கோபப்பட்டு என்ன ஆகப்போகுது... அங்கு, பதவி வகிச்சவங்களோட பெயரைத் தாங்கியிருக்க அறிவிப்பு பலகைல கூட, அவரோட பெயரை இன்னும் எழுதலையாம்'' என்று, சங்கதியை நிறைவு செய்தாள், மித்ரா.
''மித்து... சாமுண்டிபுரத்துல, அனுமதியில்லாம கொரோனாவுக்கு சிகிச்சையளிச்சதா ஒரு மருத்துவமனைக்கு, சுகாதாரத்துறை அதிகாரிங்க 'சீல்' வச்சாங்கல்ல... அத, முதல்ல நடத்திக்கிட்டு இருந்தது, மாநகராட்சில வேலை பார்த்து ஓய்வு பெற்ற டாக்டரும், அவரோட மனைவியும் தானாம்; மருத்துவமனை, கைமாறியிருக்கு. அந்த ஆவணங்கள்ல குழப்பம் இருக்கறதா சொல்லி விசாரணை நடக்குதாம்'' என்று புதிய தகவலை சொன்னாள், சித்ரா.
சுறுசுறுப்புக்கு காரணம்
''இப்ப எல்லாம், மாநகராட்சில இருக்கற ஒவ்வொரு அதிகாரிகளும், சுறுசுறுப்பா வேலை செய்ய துவங்கீட்டாங்க அக்கா. இல்லேண்ணா சிக்கல், அவங்களுக்கு தான்; ஏன்னா, ஐ.ஏ.எஸ்., கமிஷனர், அதிகாலைல 'ஸ்பாட்'டுக்கு வந்துடறாரே... பொதுமக்கள் புகார் கொடுத்த, பெரிய ஆளுங்க, சின்ன ஆளுங்கன்னெல்லாம் பாக்கறதில்ல... நேரடியா இவரே விசாரிச்சுடறதுனால, அதிகாரிங்க உஷாரா இருக்காங்க'' என்று, மாநகராட்சி கமிஷனரை புகழ்ந்தாள் மித்ரா.
''மித்து, நானும் கேள்விப்பட்டேன்; உதாரணத்துக்கு, செல்லாண்டியம்மன் துறைல ஆக்கிரமிப்பு இருக்கறதா, கமிஷனரிடம் புகார் கொடுத்திருந்தாங்க... இதை அகற்ற இரண்டு நாள் கெடு கொடுத்தாங்க... கெடு முடிஞ்சும் அகற்றல. அதிகாரிங்க அந்த இடத்துக்கு போய் நின்னதும், 'பட் பட்'னு ஆக்கிரமிப்பை ஆக்கிரமிப்பாளர்களே அகற்றீட்டாங்க... ஆனா, அரசியல்வாதீங்க, மாநகராட்சி கமிஷனரை சுதந்திரமா செயல்பட விடணும்; இப்படியே அதிரடிகள் தொடர்ந்தா, நல்லாத்தான் இருக்கும்'' என்று, தனது கருத்தை, முன்வைத்தாள், சித்ரா.
'சிபாரிசு' பிடிக்காது'
'சிட்டி போலீஸ்ல நிறைய பேரு, தங்களுக்கு விருப்பமான போலீஸ் ஸ்டேஷன் கேட்டு, ஆளுங்கட்சி வி.ஐ.பி.,களோட சிபாரிஸ்ல, காய் நகர்த்தீட்டு இருக்காங்க. ஆனா, புதுசா வந்திருக்க பெரிய ஆபீசருக்கு சிபாரிசே பிடிக்காதாம்; 'டிரான்ஸ்பர் லிஸ்ட்' வந்தா தான் தெரியும்...''மித்ரா சொன்னவுடன் சித்ரா தொடர்ந்தாள்.
'கஞ்சா, குட்கா பறிமுதல் பண்ற விஷயத்துல கூட, சின்ன சின்னதா பிடிச்சு, 'கணக்கு' காட்ட மட்டும் 'கேஸ்' போடாம, பெரியளவுல பிடிச்சு, சிக்கறவங்க மேல, பெரிய 'கேஸா' போடணும்னு, ரூரல் போலீசை கவனிக்கிற பெரிய அதிகாரி சொல்லீட்டாராம். உடுமலை சப்-டிவிஷன்ல இருக்கற ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்ல வேலை செய்ற ஒற்றர்படை போலீஸ்காரங்க மேல இருக்கற, பழைய புகார் தொடர்பான விசாரணையையும் துாசு தட்டி, காதும், காதும் வச்ச மாதிரி, தனி அதிகாரி ஒருத்தரை வச்சு, விசாரிச்சுட்டு இருக்காராம்'' என்றாள் சித்ரா.
'மலைமுழுங்கி'கள்பேச்சு, பல்லடத்துக்கு திசைமாறியது.''பல்லடம் பக்கம், மகாவிஷ்ணு நகர்ல, ரேஷன் கடை கட்டஇடம் பார்க்றதுக்காக வருவாய்த்துறை அதிகாரிங்க போயிருக்காங்க. நிலத்தை அளந்து பார்த்தப்போ, மூவாயிரம் சதுர அடி அளவையும் தாண்டி, அரசு நிலத்தையும், அதோட அங்க இருக்கற ஓடையையும் சேர்த்து 'சைட்' போட்டு வித்திருக்காங்கங்கற விஷயம் தெரிய வந்திருக்கு. அங்க, பல பேரு வீடும் கட்டிட்டாங்களாம். இடம் வாங்குனவாங்க அப்பாவிங்கதான்... இப் என்ன பண்றதுனு தெரியாம, அதிகாரிங்க குழம்பிப்போய் இருக்காங்க. 'மலைமுழுங்கி'கள் இருக்கத்தான் செய்றாங்க,'' என்றாள் சித்ரா.
''இதெல்லாம் சரிதான்கா... இத்தனை நாளு, அதிகாரிங்க என்ன பண்ணீட்டு இருந்தாங்களாம்'' என்று கேள்வி எழுப்பிய மித்ரா, ''பல்லடம் பக்கம் 'கரடி' பேர் கொண்ட ஊர்ல இருக்கற கால்நடை டாக்டரு, கமிஷன் வாங்காம, கால்நடைகளுக்கு மருத்துவம் பாக்குறது இல்லையாம். விவசாயிங்க ரொம்ப வருத்தப்படறாங்க,'' என்று ஆதங்கப்பட்டாள்.இடிச்சத்தம் கேட்டது; 'அர்ஜூனா... அர்ஜூனா'என்றாள் சித்ரா.
'கூட்டணி தர்மம்'
''பெட்ரோல் விலை லிட்டர் நுாறு ரூபாயை தாண்டிருச்சு... எல்லா விலைவாசியும் கூடிடும்... நம்ம சம்பாத்தியம்தான் கூட மாட்டேங்குது'' என்று மித்ரா ஆதங்கப்பட்டாள்.
''பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிச்சு, சமூக இடைவெளியோட நின்னு 'தோழர்'கள் ஆர்ப்பாட்டம் செஞ்சாங்களாம்மே... தேர்தலுக்கு முன்னாடி, இதே கருத்தை முன்வச்சு, மத்திய, மாநில அரசுகளை கண்டிச்சு, ஆர்ப்பாட்டம் பண்ணின தோழருங்க, இப்போ, மத்திய அரசை மட்டும் கண்டிச்சு ஆர்ப்பாட்டம் பண்றாங்க, நீ கவனிச்சியா, மித்து' என வினவினாள் சித்ரா.
''இதுல என்னக்கா ஆச்சர்யம்; 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' ங்கற டயலாக் தான் ஞாபகத்துக்கு வருது. நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி தேர்தல் வருதுல்ல... சூரிய கட்சியோட ஒத்துப்போனாதானே 'சீட்' கிடைக்கும்; இதுதானே, கூட்டணி தர்மம்'' என்றாள், மித்ரா, நகைப்புடன்.
பகல் கொள்ளை
அவிநாசி பக்கம் பயணிக்க துவங்கியது, பேச்சு.''அவிநாசி புது பஸ் ஸ்டாண்ட் பின்னாடி, பேரூராட்சிக்கு சொந்த மான தற்காலிக மார்க்கெட் கடைங்கள ஏலம் எடுத்தவங்க, கணிசமான தொகைக்கு, கடைகளை சிலருக்கு குத்தகைக்கு விட்டிருக்காங்க. அவங்கதான், அந்த கடைகள வியாபாரிகளுக்கு வாடகைக்கு விடறாங்களாம். தினசரி வாடகை மட்டுமில்லாம, கடைல எரியற டியூப் லைட்டுக்கு, 15 ரூபா, மின்விசிறிக்கு, 20 ரூபாய்னு சுங்கம் மாதிரி வசூலிக்கிறாங்களாம்,'' என்றாள், 'பகல் கொள்ளை'யை தோலுரித்தவாறே, மித்ரா.
''கடைகளை மறு குத்தகை, உள் வாடகைக்கு விடறதே தப்பு. அதுல, இப்படியெல்லாம் வேறயா'' என்று நொந்துகொண்டாள் சித்ரா.'கருவலுார்ல, ஒரு சிறுமியை கூட்டிட்டு போய், பாலியல் தொந்தரவு கொடுத்த ஒரு 'டெய்லர்' மேல நடவடிக்கை எடுக்க சொல்லி, சிறுமியோட பெற்றோர், மகளிர் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்தாங்களாம். 'போக்சோ' பிரிவுல வழக்கு பதிய, அந்த ஸ்டேஷன் ஆபீசரம்மா ரொம்பவே தயங்கினாங்களாம். பெரியஆபீசர் காது வரைக்கும் விவகாரம் போனதால, 'போக்சோ' சட்டத்துல, அந்த நபரை கைது பண்ணியிருக்காங்க'' என்றாள், மித்ரா, மூச்சு வாங்க.
குழந்தை திருமணம்
''சரி... 'சரஸ்வதி' அக்கா வீட்டுக்கு ஒருநாள் போகணும் மித்து...அந்தக்காலத்துல வயசுக்கு வந்தவுடனோ கல்யாணம் பண்ணிக்கொடுத்துடுவாங்க... இந்தக் காலத்துலயும் இதுவெல்லாம் நடக்குதுங்கறது வியப்பா தான் இருக்கு... கிராமத்துலன்னு இல்லாம, இப்ப சிட்டிக்குள்ளயும் நடக்குதுங்கற நினைச்சா தான் மனசுக்கு கஷ்டமா இருக்கு...'' என்றாள், சித்ரா.
புரியாமல் விழித்தாள் மித்ரா.
''ஒரு மாநகராட்சி பள்ளில, ஒன்பதாம் வகுப்பு படிக்கிற ஒரு மாணவிக்கு, 'தொட்டிய' பேர் கொண்ட ஊர்ல இருக்கற கோவில்ல கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க. இது, குழந்தை திருமணமா இருந்தாலும், இரு வீட்டார் சம்மதம்ங்கறதால, யாரும் புகார் கொடுக்கலையாம். இந்த மாதிரி, ரெண்டு மாசத்துல, மூணு, நாலு குழந்தை திருமணம் நடந்திருக்குனு, ஊர்ல இருக்க, என் தோழி சொன்னா,'' என்று, சஸ்பென்சை உடைத்தாள், சித்ரா.
தட்டில், மெதுவடை காலியாகியிருந்தது.''அரசியல்வாதீங்க, மாநகராட்சி கமிஷனரை சுதந்திரமா செயல்பட விடணும்; இப்படியே அதிரடிகள் தொடர்ந்தா, நல்லாத்தான் இருக்கும்''''அமைச்சரு பேசுனதுக்கு அப்புறமா, யாரும் பேசுறது மரபு கிடையாது. ஆனா, அவரோ கணவர் பேசியிருக்காரு... கட்சிக்காரங்களே ஆதங்கப்பட்டிருக்காங்க''
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE