விளாசியதால் கடுப்பு; பெரிய ஆபீசர் விடுப்பு!| Dinamalar

'விளாசி'யதால் கடுப்பு; பெரிய ஆபீசர் விடுப்பு!

Updated : ஜூலை 06, 2021 | Added : ஜூலை 06, 2021
Share
வெளியூரில் இருந்து வரும் தோழியை வரவேற்க, காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில், சித்ராவும், மித்ராவும் காத்திருந்தனர்.அப்போது, லக்கேஜ்களுடன் வந்திருந்த தோழியை வரவேற்ற சித்ரா, ''என்னடி, அம்மா, அப்பா நல்லாயிருக்காங்களா,'' என, நலம் விசாரித்தபடி, அருகில் உள்ள ஓட்டலுக்குள் நுழைந்தாள். இருவரும் பின்தொடர்ந்தனர்.மசால் ரோஸ்ட், ரவா ரோஸ்ட் ஆர்டர் கொடுத்த மித்ரா, ''போலீஸ்காரங்க ரொம்ப
 'விளாசி'யதால் கடுப்பு; பெரிய ஆபீசர் விடுப்பு!

வெளியூரில் இருந்து வரும் தோழியை வரவேற்க, காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில், சித்ராவும், மித்ராவும் காத்திருந்தனர்.

அப்போது, லக்கேஜ்களுடன் வந்திருந்த தோழியை வரவேற்ற சித்ரா, ''என்னடி, அம்மா, அப்பா நல்லாயிருக்காங்களா,'' என, நலம் விசாரித்தபடி, அருகில் உள்ள ஓட்டலுக்குள் நுழைந்தாள். இருவரும் பின்தொடர்ந்தனர்.

மசால் ரோஸ்ட், ரவா ரோஸ்ட் ஆர்டர் கொடுத்த மித்ரா, ''போலீஸ்காரங்க ரொம்ப ஹேப்பியா இருக்காங்களாமே,'' என, கேட்டாள்.

''ஆமா, மித்து! போலீஸ்காரங்களுக்கும் வார விடுமுறை சிஸ்டம் அமல்படுத்தியிருக்காங்க. இனி, மாசத்துக்கு நாலு நாள் லீவு கெடைக்கும்கிறதுனால, சந்தோஷத்துல இருக்காங்க,''

''இருந்தாலும், ஊர் விட்டு ஊர் மாத்திடுவேன்னு, 'வார்னிங்' செஞ்சதாவும் சொல்றாங்களே,''

''அதுவும், உண்மைதான்! எவ்வித சமரசத்துக்கும் இடம் கொடுக்காம, மக்கள் பிரச்னையை தீர்த்து வைக்கணும். பணத்தகராறு, சொத்து பிரச்னைகள்ல தலையிட கூடாதுன்னு சொல்லியிருக்காராம். மீறி கட்டப்பஞ்சாயத்து செஞ்சா, 'டிரான்ஸ்பர்' உறுதின்னு வாய்மொழியா, கமிஷனர் எச்சரிக்கை விடுத்திருக்காராம்,''

''ஓ... அதனாலதான், இன்ஸ்.,களும், உதவி கமிஷனர்களும் ஆடிப்போயிருக்காங்களா,''

''மித்து, அது வேற கதை. நம்மூர்ல இருக்கற இன்ஸ்.,கள் பலரும், இலைக்கட்சி ஆட்சியில நியமிக்கப்பட்டவங்க. 'மாதிரி சாலை'யில் வலம் வர்ற இன்ஸ்., ஒருத்தரு, லட்சத்துல கரன்சி எண்ணி வச்சாதான், லேசா சிரிப்பாராம்,''

''இதுல, மசாஜ் சென்டர் நடத்துறவங்க, மாசம் தவறாம, 50 ஆயிரம் ரூபாய் மாமூல் கொடுத்திட்டு இருந்திருக்காங்க. யார் யார் மாமூல் வாங்கியிருக்காங்கன்னு, விசாரணை நடந்திருக்கு. பழைய உதவி கமிஷனர்கள் மற்றும் இன்ஸ்.,கள் பெயர் அடிபடுதாம். அதனால, இன்ஸ்., டிரான்ஸ்பர் நடக்கப் போகுதுன்னு சொல்றாங்க,''

''அதெல்லாம் இருக்கட்டும், 'டாஸ்மாக்' சங்க விவகாரத்துல, போலீஸ்காரங்க போயி, பிரச்னையை முடிச்சு வச்சாங்களாமே,''

''அதுவா, 'டாஸ்மாக்' பார் வசூல் பணத்தை, ஒருத்தரு முறைகேடு செஞ்சிட்டாருன்னு பேசினோம்ல. இது சம்பந்தமா, சங்க கூட்டத்துல பேசியிருக்காங்க. முன்னாள் நிர்வாகி ஒருத்தரு, 40 லட்சம் ரூபாய்க்கு கணக்கு சொன்னதை கேட்டு, மத்தவங்க அதிர்ச்சியாகிட்டாங்களாம்,''

''என்னப்பா, சொல்றே! ஒரு இட்லி ஒரு லட்சம் ரூபாய்ன்னு கணக்கேதும் சொன்னாரா,''

''மாஜிக்கு, 10 லட்சம், அவரது உதவியாளருக்கு, 5 லட்சம், துடியலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு, 5 லட்சம், மதுவிலக்கு போலீசாருக்கு, 5 லட்சம், அவருக்கு அத்தனை லட்சம், இவருக்கு இத்தனை லட்சம்னு, 40 லட்சம் ரூபாய் சரியா போச்சுன்னு சொல்லியிருக்காரு,''

''அதைக்கேட்டு, காச், மூச்ன்னு ஒருத்தருக்கொருத்தர் சத்தம் போட்டுக் கொள்ள, கைகலப்பு வர்ற மாதிரி நிலைமை மோசமாகிடுச்சாம்,''

''ஓ... அப்படியா,'' என்ற மித்ரா, ''மாஜி வி.ஐ.பி., தொகுதியில, பணம் வச்சு சேவல் சண்டை நடத்துறாங்களாம். ஒரு தோட்டத்துல வெட்டுச்சீட்டு நடக்குதாம். போலீஸ்காரங்க கண்டுக்கறதே இல்லையாம்,'' என்றாள்.

பேசிக் கொண்டிருந்தபோது, ஆர்டர் கொடுத்த உணவு அயிட்டங்கள் டேபிளுக்கு வந்தன.ரவா ரோஸ்ட்டை சாப்பிட ஆரம்பித்த சித்ரா, ''கிராம ஊராட்சியில சைட் 'அப்ரூவல்' வாங்குறதுக்கு, லட்சக்கணக்குல லஞ்சம் கேட்குறாங்களாமே,'' என, 'ரூட்' மாறினாள்.

''ஆமாக்கா, நீங்க சொல்றது உண்மைதான்! வடவள்ளி பக்கத்துல இருக்கற ஊராட்சியில, சைட் அப்ரூவலுக்கு ஒரு லட்சமும், தொழிற்சாலை 'சைட்' அப்ரூவலுக்கு, 5 லட்சமும் வசூலிக்கிறாங்களாம்,''

''அரிசி மூட்டை வாங்குறதா சொன்னாங்களே. அது, எந்த ஊராட்சியில,''

''அதுவா... ஊரக வளர்ச்சி முகமையில இருந்து பேசுறோம்னு, அன்னுார் ஒன்றியத்துல இருக்குற ஒவ்வொரு ஊராட்சிக்கும் கொஞ்ச நாளைக்கு முன்னாடி, போன் வந்திருக்கு. 'மேடம் சொல்லியிருக்காங்க. ஒவ்வொரு ஊராட்சியில இருந்தும், 25 கிலோ அரிசி சிப்பம், 25 மூட்டை அனுப்பனும்'ன்னு உத்தரவு போட்டிருக்காங்க,''

''மொத்தம், 15 ஊராட்சியில கொடுத்திட்டாங்களாம். சில ஊராட்சியில, 20 சிப்பம், சிலதுகள்ல, 15 சிப்பம், சிலவற்றில் 10 சிப்பம் கொடுத்திருக்காங்களாம். நிதி வசதி இல்லாத, 10 ஊராட்சியை சேர்ந்தவங்க, எங்களால முடியாதுன்னு சொல்லியிருக்காங்களாம்,''

''இவ்ளோ மூட்டை அரிசி வாங்கி, அந்த மேடம் என்ன செய்யப் போறாங்களோ,'' என்ற சித்ரா, ''உங்கள் தொகுதியில் முதல்வர் பிரிவுக்கு நியமிச்சிருக்கிற அலுவலர்கள், தலையை பிச்சுக்கிறாங்களாமே,'' என, 'சப்ஜெக்ட்' மாறினாள்.

''ஆமாக்கா, அந்த ஸ்கீம்ல வந்திருக்கிற விண்ணப்பதாரருக்கு, போன் போட்டு விசாரிக்கிறாங்க. 'அப்படியா, எந்த மனுவும் கொடுத்த மாதிரி ஞாபகம் இல்லையேன்னு சிலரும், ஆமா, எலக்சனுக்கு முன்னாடி கொடுத்தேன்; என்ன எழுதுனேன்னு எனக்கு நினைவு இல்லையேன்னு சிலரும் சொல்றாங்களாம். ஏகப்பட்ட பேரு இலவச பட்டா கேட்டு, மனு கொடுத்திருக்காங்களாம். அதனால, காலியிடம் எங்கே இருக்குன்னு துழாவிக்கிட்டு இருக்காங்களாம்,

''பில்டர் காபியை உறிஞ்சிய மித்ரா, ''ஜி.எச்.,ல டெத் சர்ட்டிபிகேட் கொடுக்குறதுக்கு இழுத்தடிக்கிறாங்களாமே,'' என, 'ரூட்' மாறினாள்.

''ஆமா, மித்து! கொரோனாவுல இறந்தவங்க குடும்பத்தினர், மனவேதனையோடு, ஜி.எச்.,க்கு நடையா நடக்குறாங்க. கம்ப்யூட்டர் வேலை செய்யலை; இன்னும் 'அப்டேட்' ஆகலை; 15 நாள் கழிச்சு வாங்கன்னு சொல்லி, திருப்பி அனுப்புறாங்க.செக்சன்ல ஊழியர்கள் பலரும் 'லீவு'ல போயிட்டாங்களாம். மாற்று ஊழியர்கள் நியமிக்காம, ஜனங்களை அலைக்கழிக்கிறாங்க. இதனால, கவர்மென்ட்டுக்குதான் கெட்ட பெயர்''

''மேயர் கனவுல மிதக்குற தி.மு.க., மாஜியை பத்தி, கட்சி தலைமை விசாரிச்சிருக்காமே; கட்சி பதவியில இருந்து, துாக்கப் போறதா சொல்றாங்களே, உண்மையா,''

''அதுவா, நம்மூர்ல இருக்குற கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருத்தரை பத்தியும், ஒவ்வொரு விதமா, தலைமைக்கு தப்பு தப்பா தகவல் சொல்லிக்கிட்டு இருந்திருக்காரு.கரன்சி வாங்கிட்டுதான், சிலருக்கு பதவி வாங்கிக் கொடுத்திருக்காரு. இதெல்லாம் தலைமைக்கு தெரிஞ்சிடுச்சு. களையெடுக்கற சமயத்துல, கட்சி பதவியை பறிச்சிடுவாங்களாம். உள்ளாட்சி தேர்தல்ல போட்டியிடுறதுக்கும், வாய்ப்பு கொடுக்க மாட்டாங்கன்னு உடன்பிறப்புகள் பேசுறாங்க,'' என்றாள்.

ஓட்டல் கேஷியர் 'கார்த்தி'யிடம் பில்லுக்கு பணம் செலுத்தி விட்டு, மூவரும் வெளியே வந்தனர். 'பார்க்கிங்' ஏரியாவில், கார்ப்பரேஷன் ஜீப் நின்று கொண்டிருந்தது.அதைப்பார்த்த மித்ரா, ''என்னக்கா, கார்ப்பரேஷன் பெரிய ஆபீசர் ஒருத்தர், 'கோவிச்சுட்டு' போயிட்டாராமே; கொஞ்ச நாளா, ஆபீஸ் பக்கமே வர்றதில்லைன்னு, சொல்றாங்க,'' என, கிளறினாள்.

''அதுவா, ஆரம்பத்துல, 'கோவிட்'டுன்னு சொன்னாங்க. ரொம்ப நாளா, ஆபீஸ் பக்கம் வராததுனால, ஸ்டாப்புகளுக்கு சந்தேகம். விசாரிச்சா, ஒரு பைல் சம்பந்தமா, அந்த ஆபீசரை, கமிஷனர், ஏகப்பட்ட கேள்வி கேட்டு, துளைச்சிட்டாராம். கோவிச்சுட்டு போனவங்க; திரும்பி வரலை. 'டிரான்ஸ்பர்' ஆர்டரை, எதிர்பார்த்துட்டு இருக்காங்களாம்,

''தோழியை, கால் டாக்ஸியில் அனுப்பிட்டு, ஸ்கூட்டரை 'ஸ்டார்ட்' செய்த மித்ரா, ''தடுப்பூசி ஸ்டாக் இல்லைன்னு சொல்றாங்க; ஆனா, ரகசியமா ஊசி போடுறாங்களாமே,'' என, நோண்டினாள்.

''ஆமா, மித்து! நானும் கேள்விப்பட்டேன். நீ சொல்றது உண்மைதான்! அன்னுார் ஏரியாவுல, பொகலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, மாலை நேரத்துல, சொகுசு கார்களில் பலரும் வர்றாங்க; 'க்யூ' இல்லாம உள்ளே போறாங்க; கொஞ்ச நேரத்துல, ஊசி போட்டுட்டு, திரும்பிப் போறாங்க. ஏழை எளிய ஜனங்க, அதிகாலையில இருந்து மணிக்கணக்குல வரிசையில காத்திருந்து, ஊசி போட முடியாம, ஏமாந்து, திரும்பிப் போறாங்க,''

''அப்படியா,'' என, வாயை பிளந்த மித்ரா, ''கொஞ்ச நாளா, எஜூகேசன் டிபார்ட்மென்ட் பத்தி, எதுவுமே சொல்லலையே,'' என, வம்புக்கு இழுத்தாள்.

''மித்து, பாரதியார் யுனிவர்சிட்டியில, உயர் பொறுப்புல இருந்த ஒருத்தரு, 'ரீசன்ட்'டா, 'ரிடையர்மென்ட்' ஆனாரு.அவருக்கு, ஓய்வுக்கு பிறகும் கவுரவ பொறுப்பு வழங்குறதுக்கு பல்கலை முடிவு செஞ்சிருந்ததாம். இது தெரியாம, தாமரை கட்சியில இணைஞ்சிருக்காரு,''

''கல்விப்பணியில இருந்தா, தொடர்ச்சியா, கரன்சி வாங்கலாங்கிறதுனால, இப்ப, கட்சியில இருந்து விலகிட்டதா, சொல்லிக்கிட்டு இருக்காராம்,''

''கட்சியை விட, கரன்சி முக்கியம்னு முடிவு செஞ்சிட்டார் போலிருக்கு,'' என்றபடி, வீட்டை நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X