புதுடில்லி: மேகதாதுவில் அணை கட்டுவதற்கு, தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல், கர்நாடகாவிற்கு அனுமதி வழங்க மாட்டோம் என மத்திய அமைச்சர் கூறியதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
டில்லி சென்ற தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஜல்சக்தித்துறை அமைச்சகத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, மேகதாது அணை, காவிரி நீர், முல்லைப்பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
பின்னர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அமைச்சர் ஷெகாவத்துடனான பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால், கர்நாடகா வழங்கவில்லை. தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்க வேண்டும் என வலியுறுத்தினேன். இது தொடர்பாக கர்நாடக அரசிடம் பேசுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை தடுக்க வேண்டும் எனக்கூறினோம். தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல், அணை கட்டுவதற்கு அனுமதிக்க முடியாது .காவிரியில், எந்த ஒரு திட்டத்தையும் கர்நாடகா செயல்படுத்துவதாக இருந்தாலும், தமிழகத்திடம் ஒப்புதல் பெற வேண்டும். தமிழக அரசிடம் ஒப்புதல் பெறாமல், மத்திய அரசிடம் கர்நாடக அனுமதி பெற்றது தவறு. விரிவான திட்ட அறிக்கைக்கான அனுமதி என்பது, அணை கட்டுவதற்கான அனுமதி என கருதக்கூடாது என அமைச்சர் தெரிவித்தார்.
மார்க்கண்டேய நதி குறுக்கே, தன்னிச்சையாக அணை கட்டப்பட்டது குறித்து புகார் தெரிவித்தோம். அணை பிரச்னைக்கு தீர்வு காண நடுவர் மன்ற ம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தரமாக தலைவர் நியமனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினோம்.
கோதாவரி காவரி நதிநீர் இணைப்புதிட்டத்தின் நிலை என்ன ஆனது என கேள்வி எழுப்பினோம். காவிரி - குண்டாறு, தாமிரபரணி - கருமேனியாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு துரைமுருகன் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE