'ட்ரோன்'கள் மூலம் தாக்குதல்: மத்திய அரசுக்கு ஒரு எச்சரிக்கை

Updated : ஜூலை 07, 2021 | Added : ஜூலை 06, 2021
Share
Advertisement
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை, 2019 ஆகஸ்ட் 5ம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன், மாநிலத்தை, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.முன்னாள் முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் பலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இதனால், ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்கள் குறைந்ததாக, மத்திய உள்துறை
 'ட்ரோன்'கள் மூலம் தாக்குதல்: மத்திய அரசுக்கு ஒரு எச்சரிக்கை

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை, 2019 ஆகஸ்ட் 5ம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன், மாநிலத்தை, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.முன்னாள் முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் பலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இதனால், ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்கள் குறைந்ததாக, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 24-ல் ஆலோசனை நடத்தினார். அப்போது, அரசியல் நடவடிக்கைகளை அங்கு மீண்டும் துவங்குவது உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. இந்த பேச்சு நடந்த அடுத்த நான்கு நாட்களில், ஜம்மு விமானப்படை தளத்தில், ட்ரோன்கள் வாயிலாக, வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அத்துடன், எல்லை பகுதியில் தொடர்ந்து ட்ரோன்கள் ஊடுருவி வருவது, நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பாதுகாப்பு படையினர் உச்சகட்ட உஷார் நிலையில் உள்ளனர்.

'ஜம்மு - காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்க வேண்டும். அங்கு இயல்பு நிலை திரும்ப வேண்டும்' என்ற அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை, மத்திய அரசு பரிசீலனை செய்ய முயன்ற நிலையில், ஜம்முவில் நடந்த தாக்குதல் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளே, இந்த ட்ரோன் தாக்குதல்களுக்கு காரணமாக இருக்கலாம் என, புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன.

ஜம்மு - காஷ்மீரில் அமைதி திரும்பக் கூடாது; அங்கு அமைதியை ஏற்படுத்த முயற்சிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு தடை ஏற்படுத்தும் வகையில், இந்தச் செயலை அண்டை நாடானா பாகிஸ்தானின் ஆதரவுடன் பயங்கரவாத அமைப்புகள் அரங்கேற்றி இருக்கலாம் என, அரசியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

எல்லைக்கு அப்பால் உள்ள பயங்கரவாத அமைப்பினர், பஞ்சாப் மற்றும் ஜம்மு - காஷ்மீருக்குள், ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களை போடவும், அவற்றை கடத்தி வரவும் தான், இதுவரை ட்ரோன்களை பயன்படுத்தி வந்தனர். தற்போது முதல் முறையாக, நாட்டின் முக்கியமான பாதுகாப்பு நிலைகள் மீது, ட்ரோன்கள் வாயிலாக குண்டு வீசியுள்ளனர்.

சமீபத்திய சம்பவத்தில் உயிரிழப்புகள் இல்லை என்றாலும், பயங்கரவாதிகள் இந்த ஒரு தாக்குதலுடன் நிறுத்தி விடப்போவதில்லை. அவர்களின் அடுத்தடுத்த தாக்குதல்கள் தொடரும்; அவை பெரிய அளவிலான உயிர் சேதம், பொருள் சேதத்தை ஏற்படுத்தும் என்ற செய்தியை சூசகமாக தெரிவித்துள்ளன. அதற்கேற்ற வகையில், அடுத்ததாக இரண்டு ட்ரோன்கள் இந்திய பகுதிக்கு வந்ததையும், அவற்றை இந்திய ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டி அடித்ததையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நவீன போர் முறையில் ட்ரோன்களின் பங்கு, அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

ஈராக்கில், அமெரிக்க படையினர் மற்றும் அவர்கள் அமைத்துள்ள கட்டமைப்புகள் மீது, ட்ரோன்கள் போன்ற ஆளில்லாமல் பறக்கும் கருவிகள் வாயிலாக, தாக்குதல் நடத்துவதை ஈரான் பயங்கரவாதிகள் செய்து வருகின்றனர். அதேபோல, ஏமன் பயங்கரவாதிகளின் ட்ரோன்கள் வாயிலான தாக்குதலை, சவுதி அரேபியா அடிக்கடி சந்தித்து வருகிறது. இதுபோன்ற பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் விபரங்களை சொல்லிக் கொண்டே போகலாம். அழிவு சக்திகளின் நாச வேலைகளுக்கு, தற்போதுள்ள தொழில்நுட்பம் பெரிய அளவில் உதவி புரிகிறது. எனவே, மற்ற நாடுகள் சந்திக்கும் இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து, இந்திய அரசு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

பயங்கரவாதிகளின் தாக்குதல்களுக்கு இதுவரை உள்ள முறைகளின்படி, பதிலடி கொடுப்பதை தவிர்த்து, நவீன முறையிலான தாக்குதல்களை நாமும் பின்பற்ற வேண்டும். கண்காணிப்புகளை மேம்படுத்துவதுடன், புதிய தொழில் நுட்பங்களையும் அறிமுகப்படுத்த வேண்டும். பயங்கரவாதிகள் ஒரு அடி முன் எடுத்து வைத்தால், ராணுவம் உட்பட முப்படையினரும் பல அடி பாயும் வகையிலான தாக்குதல்களை, நவீனமான முறையில் நடத்த வேண்டும். அப்போது தான், பயங்கரவாதிகளின் அட்டகாசம் கட்டுக்குள் வரும். பாகிஸ்தான் இரட்டை வேடத்தை பல ஆண்டுகளாக கண்டு வரும், பயங்கரவாத நடவடிக்கைகளை பல காலமாக சந்தித்து வரும் இந்திய அரசு, ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில், இனி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.

உளவுத் துறையினரின் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும்.அண்டை நாட்டில் உள்ள சக்திகளின் சதி வேலைதான், ட்ரோன்கள் ரீதியான தாக்குதலுக்கு காரணம் என்பதையும், அதற்கு பாக்., ஆதரவு உள்ளதையும், சர்வதேச அமைப்புகள் மற்றும் மேலை நாடுகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். நாட்டின் அமைதியை சீர்குலைக்க நினைக்கும் பயங்கரவாதிகளின் திட்டங்கள் எப்போதும் தவிடு பொடியாக்கப்பட வேண்டும். அதுவே நமக்கு வெற்றி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X