புதுடில்லி :ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளின் கை ஓங்குவதால், அங்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் அங்குள்ள நம் துாதரக அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினரை திரும்ப அழைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
முடக்கம்
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து, தங்கள் படைகளை முழுமையாக திரும்பப் பெறுவதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்து உள்ளார். இதையடுத்து அங்குள்ள தலிபான் பயங்கரவாதிகளுடனான தொடர்புகளை, சர்வதேச பயங்கரவாதிகள் அதிகரித்து வருகின்றனர். ஆப்கன் பாதுகாப்பு படையினரும், அவர்களுடன் இணைந்து செயல்படத் துவங்கியுள்ளனர். ஆப்கனின் முக்கிய நகரங்கள் தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ளன. இதனால் ஆப்கன் அதிகாரிகள் பலரும், அந்நாட்டு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நகரங்களில் இருந்து வெளியேறத் துவங்கிஉள்ளனர்.
சமீபத்தில் பதாக் ஷான் பகுதியில் பாதுகாப்பு பணிகளை தொடர இயலாமல், 300க்கும் மேற்பட்ட ஆப்கன் ராணுவத்தினர் தஜிகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்தனர். நம் நாட்டின் துாதரகம் காபூலில் செயல்படுவதுடன், ஜலாலாபாத், ஹைரத், காந்தஹார் மற்றும் மசார்- - இ- - ஷெரீப் நகரங்களிலும் துணை துாதரகங்கள் செயல்பட்டு வந்தன.பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதால் ஆப்கனில் துாதரகம், துணை துாதரகம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட முடியாத நிலை உருவாகி வருகிறது.இதனால் ஜலாலாபாத் மற்றும் ஹைரத் நகரங்களில் துணை துாதரக செயல்பாடுகளை மத்திய அரசு முடக்கி உள்ளது.
கேள்விக்குறி
நம் ராணுவ அதிகாரிகள் பலரும், அந்நாட்டின் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசாருக்கு பயிற்சி அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் பாதுகாப்பும் தற்போது கேள்விக்குறி ஆகி உள்ளது.இதனால் காபூல், காந்தஹார் மற்றும் மசார்- நகரங்களில் பணியில் உள்ள துாதரக அதிகாரிகள், ராணுவத்தினர் உள்ளிட்ட இந்தியர்கள் அனைவரையும் திரும்ப அழைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள் துவங்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.
கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
அமெரிக்க படைகளை திரும்பப் பெறும் அறிவிப்பால் ஆப்கனில் பல கிராமங்கள், நகரங்கள், மாவட்டங்கள் தலிபான் பயங்கரவாதிகள் கைவச மாகி வருகின்றன. காபூலில் உள்ள அமெரிக்கா உள்ளிட்ட பல நாட்டு துாதரகங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அந்நாடுகள் ஆலோசித்து வருகின்றன.
இது குறித்து அமெரிக்க துாதரக அதிகாரி ஒருவர் கூறியதாவது: காபூலில் அமெரிக்க துாதரகம் அமைந்துள்ள பகுதியில், ஆப்கன் ஜனாதிபதி இல்லம், பிற நாடுகளின் துாதரகங்கள், உயர் அதிகாரிகள் வசிப்பதால், இந்த நகரை ஆப்கன் படையினர் தீவிரமாக கண்காணிக்கின்றனர். நகரில் நுழைவதற்கான ஒரே வழியான காபூல் விமான நிலையத்தை, அமெரிக்க மற்றும் துருக்கி படையினர் பாதுகாக்கின்றனர். அமெரிக்க படைகள் வெளியேற்றத்தை தொடர்ந்து, விமான நிலைய பாதுகாப்பு குறித்து, அமெரிக்க, ஆப்கன் அரசுகள் மற்றும் ஐ.நா., அதிகாரிகளுடன் துருக்கி அரசு பேசி வருகிறது.
துாதரகங்கள் மூடப்படாது
பாதுகாப்பு காரணங்களுக்காக ஆப்கனில் நம் நாட்டின் துாதரகம் மூடப்படும் என்ற தகவலை அதிகாரிகள் மறுத்துள்ளனர். இதுகுறித்த அவர்களின், 'டுவிட்டர்' பதிவு:ஆப்கனில் இந்திய துாதரகம் மூடப்படுவதாக வெளியான தகவல்கள் உண்மை அல்ல. இங்கு காந்தஹார், மசார் நகரங்களில் துணை துாதரகங்கள் தொடர்ந்து செயல்பாட்டில் இருப்பதுடன், அந்நகரங்களின் பாதுகாப்பு நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.