'சினிமா படங்களின் காட்சி அமைப்புகள், நாட்டின் இறையாண்மைக்கு எதிரானதாக இருக்கக் கூடாது; அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்க வேண்டும்' என்பதற்காக, ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா - 2021ஐ, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை கொண்டு வருகிறது.
பெரும் அதிர்ச்சி
இதற்கு, சினிமா துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். முதல்வர் ஸ்டாலின், ஒளிப் பதிவு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்,
இது குறித்து, பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அளித்த பேட்டி: ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா, தகவல் ஒலிபரப்பு துறை சம்பந்தப்பட்டது.மசோதா தொடர்பாகதகவல் தெரிவிக்க வேண்டும் என்றால், தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்குத் தான், முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருக்க வேண்டும்.
ஆனால், இந்த விபரம் கூட தெரியாமல், எப்படி ரவிசங்கர் பிரசாத்துக்கு அனுப்பினார் என்று புரியவில்லை; வருத்தமாக உள்ளது.அரசு அதிகாரிகள் கூட இதை கவனிக்காமல், 'வாய் புளித்ததோ; மாங்காய் புளித்ததோ' என்ற ரீதியில் கடிதம் தயார் செய்து கொடுத்துள்ளனர். இது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எந்த விஷயத்திலும், மக்கள் நலன் சார்ந்து உண்மையான அக்கறை இருக்குமானால், இப்படி பட்ட தவறுகளுக்கு வாய்ப்பில்லை. எல்லா விஷயங்களிலும், அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படுவதாலேயே இப்படிப்பட்ட தவறுகள் நடக்கின்றன. வரும் காலத்திலாவது, இதுபோன்ற தவறுகள் நடக்காது, கவனத்துடன் செயல்படுவது தமிழக அரசுக்கு நல்லது. முதல்வர் ஸ்டாலின், இதற்கு காரணமானவர்களிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மலிவான அரசியல்!நாராயணன் திருப்பதி அறிக்கை:
மார்கண்டேய ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்ட விவகாரம் குறித்து, தமிழக அரசியல் கட்சியினர் மிக ஆவேசமாக பேசி வருவது அரசியல் zநாடகத்தை அரங்கேற்றுகிற செயல்.அணையை கட்டி விட்டனரே என்று பதைபதைக்கும் தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளே, அணையை கட்டுவதற்கு, கர்நாடகாவிற்கு பக்கபலமாக இருந்துள்ளன என்பதை மறுக்க முடியுமா?
இந்த அணையை கட்டுவதற்கான திட்டம் 2007ல் துவங்கியது; அணையை கட்டுவதற்கான, கர்நாடகா அரசு உத்தரவு 2008ல் பிறப்பிக்கப்பட்டது.மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்அனுமதி அளித்ததை அடுத்தே, அணை கட்டும் பணி துவங்கியது.அந்த காலகட்டத்தில், தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி இருந்தது; மத்தியில் தி.மு.க., அங்கம் வகித்த, காங்கிரஸ் ஆட்சி இருந்தது என்பதை மறந்து விட்டு பேசுகின்றனரா அல்லது மறைத்து பேசுகின்றனரா என்பது புரியாத புதிர்.
அணையை கட்ட அனைத்து அனுமதியையும் அளித்து, நிதியையும் ஒதுக்கி, மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்திய தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர், தற்போது தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதையாக, மத்திய அரசை குறை கூறுவது மலிவான அரசியல்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE