'மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் ஆலோசனையை கேட்காமல், கர்நாடகாவுக்கு எந்த அனுமதியும் தரமாட்டோம்' என, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கூறிய நிலையில், அவரது பேச்சை மீறி, 'அணை கட்டியே தீருவோம்' என, கர்நாடக முதல்வர் எடியூரப்பா பகிரங்கமாக அறிவித்து, 'கெத்து' காட்டியுள்ளார்.
காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தமிழகத்துக்கும், கர்நாடகாவுக்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் காவிரியின் குறுக்கே, கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
பயணம்
இதற்கிடையே மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, மத்திய அரசிடம் முறையிட போவதாக கூறி, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டில்லி வந்திருந்தார். நேற்று காலையில் பொதுப்பணி துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்ரமணியன் ஆகியோருடன், டில்லி ஷ்ரம்சக்தி பவனுக்கு அமைச்சர் துரைமுருகன் கிளம்பினார்.
மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தில் காலை 11:50 மணிக்கு, அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை, சந்தித்து பேசியபின், மீண்டும் தமிழ்நாடு இல்லம் திரும்பிய அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது;உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரியில், தமிழகத்துக்கு மாதந்தோறும் தர வேண்டிய தண்ணீரில், 8 டி.எம்.சி., வரையில் கிடைக்கவில்லை என்பதை சுட்டிக் காட்டினேன். இது குறித்து கர்நாடக அரசுடன் பேசுவதாக அமைச்சர் கூறினார்.காவிரியில் எந்தவொரு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றாலும், கடைமடை மாநிலமான தமிழகத்திடம் பேச வேண்டுமென நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் தெரிவித்துள்ளன. ஆனால் தமிழகத்திடம் தகவல் எதுவும் தெரிவிக்காமல் நேரடியாக மத்திய அரசிடம் வந்து, மேகதாது அணை கட்டுவதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகா அனுமதி வாங்கியுள்ளது. இது சரியான அணுகுமுறை அல்ல என அமைச்சரிடம் கூறினேன்.
விரிவான திட்ட அறிக்கைகள்
அதற்கு மத்திய அமைச்சர், 'விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி வாங்கி விட்டதாலேயே கர்நாடகா, அணையை கட்டிவிட முடியாது. யார் வேண்டுமானலும் வந்து அனுமதி வாங்கி செல்லலாம்.'அப்படி பார்த்தால் எத்தனையோ விவகாரங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் கிடப்பில் கிடக்கின்றன. தேசிய நதிநீர் மேம்பாட்டு திட்ட அலுவலகத்தில் கிடக்கும் அறிக்கையின்படி, காவிரியோடு கோதாவரியை இணைத்து விட்டார்களா என்ன?
'எந்த சட்ட பிரச்னை வந்தாலும் தமிழக அரசிடம் கேட்காமல் எந்த அனுமதியும், கர்நாடகாவுக்கு தரமாட்டோம். இருதரப்பையும் கலந்து பேசித் தான் எந்த முடிவையும் எடுப்போம். 'மேகதாது அணையை இப்போதே கட்டி விடுவர் என்ற நம்பிக்கையை விட்டு விடுங்கள். அதுபற்றி, இப்போது பிரச்னையே இல்லை' என கூறிவிட்டார்.
தமிழக அரசிடம் அனுமதி பெறாமலேயே மார்க்கண்டேய நதியில் கட்டப்படும் அணை பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில் நடுவர் மன்றத்தை அமைக்கும்படி, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதை சுட்டிக் காட்டினேன்.இதை ஏற்றுக் கொண்ட அமைச்சர், நடுவர் மன்றத்தை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மேலும் காவிரி நதிநீர் ஆணையத்துக்கு முழுநேர நிரந்தர தலைவர் நியமனம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.
இதையும் ஏற்றுக் கொண்ட அமைச்சர், காவிரி நதிநீர் ஆணையத்துக்கு விரைவில் நிரந்தர தலைவர் நியமிக்கப்படுவார் என்றும் உறுதியளித்தார். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை கூறியபோது, இதற்காகத்தான் அணை பாதுகாப்புச் மசோதாவை நிறைவேற்றியதாக அமைச்சர் கூறினார். காவிரி- - கோதாவரி இணைப்பு திட்டத்தின் ஒரு பகுதியான காவிரி- குண்டாறு திட்டத்தை நிறைவேற்றுவது மற்றும் தாமிரபரணி, கருமேனியாறு திட்டத்தை நிறைவேற்றுவது குறித்தும் வலியுறுத்தினேன். இத்திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினேன். இவ்வாறு அவர் கூறினார்.
பிடிவாதம்
இந்நிலையில் கர்நாடக முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான எடியூரப்பா பெங்களூரில் நேற்று கூறியதாவது:மேகதாது அணை கட்டும் திட்டத்தை எந்த காரணத்தாலும் கைவிட மாட்டோம். சட்டப்படியே அணை கட்டி முடிப்போம்.அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது. இரு மாநிலங்களுக்கும் உதவும் என்பதால், நல்லுறவுடன் கட்டுவதற்காக தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்தேன்.ஆனால் அவர் என்னவோ சரியாக பதிலளிக்கவில்லை. ஆனாலும் மேகதாது திட்டத்தை கண்டிப்பாக செயல்படுத்துவோம். இந்த விஷயத்தில் கர்நாடக மக்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.இவரது பேச்சு, மத்திய அமைச்சரின் துரை முருகனுடனான சந்திப்பு குறித்தும், அவர்கள் பேசியது குறித்தும் அறிந்தாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. 'தெரிந்தே பேசினார் என்றால், அது அதிர்ச்சியான விஷயம்' என, தமிழக மக்கள் கொந்தளிக்கின்றனர்.- நமது நிருபர் குழு -
ஆடு தாண்டும் காவிரி
கர்நாடகா மாநிலம், ராம்நகர் மாவட்டம், கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில், காவிரி நதியின் குறுக்கே, அணை கட்ட கர்நாடகா திட்டமிட்டுள்ளது. கன்னடத்தில், 'மேகே' என்றால், 'ஆடு' என்று பொருள். 'தாட்டு' என்றால், 'தாண்டும்' அல்லது 'தாவும்' என்று பொருள்படும். தமிழில் மேகதாது என்று கூறப்படும் இந்த இடத்தை, 'ஆடு தாண்டும் காவிரி' என்றும் அழைக்கின்றனர்.தமிழகத்துடன் காவிரி நதி நீர் பிரச்னையில், முதல்வர் எடியூரப்பா எல்லை மீறி செயல்படும் நடவடிக்கை தான் இங்கே 'எல்லை தாண்டும் ஆடு' என குறிப்பிடப்படுகிறது.எப்படியானாலும், காவிரி நீர் பிரச்னை, மேகதாது அணை விவகாரம், மார்க்கண்டேய அணை போன்ற பல விவகாரங்கள் தமிழகத்திற்கு தலைவலியாகத் தான் இருக்கின்றன.
'திட்ட அறிக்கை பற்றி கவலை வேண்டாம்'
டில்லியில் அமைச்சர் துரைமுருகனிடம் நேற்று, 'அரசு மற்றும் அரசியல் ரீதியாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா மிகவும் தீவிரமாக மேகதாது அணை விவகாரத்தை முன்னெடுக்கிறாரே' என செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்து, அவர் கூறியதாவது:உங்களை கேட்காமல் மேகதாது அணை விவகாரத்தில் எதையும் செய்ய மாட்டோம் என, மத்திய அமைச்சரே தெளிவாக கூறி விட்டார். எனவே, கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கை குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு விவகாரம் குறித்தும், மத்திய அமைச்சர் ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தார். ஆச்சரியமாக இருந்தது. அவ்வளவு துாரம் மிகத் தெளிவான புரிதல்களுடன், முழு விபரங்களை கையில் வைத்து இருந்தார். அதைவிட எங்களிடம் ஆங்கிலத்தில் நன்றாக பேசினார். அதுவே பெரிய அளவில் எனக்கு நெருக்கடி இல்லாமல் இருந்தது.இவ்வாறு அவர் கூறினார்.
முதல்வரை கண்டித்து போராட்டம்
'கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும்' என, தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியதை கண்டித்து, மைசூரு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், கன்னட சலுவளி தொண்டர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். ஸ்டாலினுக்கு எதிராக கோஷம் எழுப்பி, அவரது உருவப்பொம்மையை எரித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE