சென்னை:கூட்டுறவு வீட்டுவசதி இணையம், பிரதம சங்கங்கள் இடையிலான நிர்வாக குழப்பத்தால் 1,000 கோடி ரூபாய் கடன் தொகையை வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், ஏழை மக்களுக்கு குறைந்த வட்டியில் வீட்டுக்கடன், மனைகள் கிடைக்க, கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் துவங்கப்பட்டன. தற்போதைய நிலவரப்படி 680 வீட்டுவசதி சங்கங்கள் உள்ளன.இந்த சங்கங்கள் அனைத்தும், கூட்டுறவு வீட்டுவசதி இணையத்தின் கீழ் செயல்படுகின்றன. இதில் இணையம் வாயிலாக குழுக் கடன் முறையில் கிடைக்கும் நிதியை, சங்கங்கள் வாங்கித் தங்கள் உறுப்பினர்களுக்கு வழங்கும்.
இந்த சங்கத்தில், தனி நபர் வீட்டுக்கடனாக இருக்கும் கணக்குப்படியே கடன் தொகை வசூலிக்கப்படும். ஆனால், பிரதம சங்கங்களிடம் இருந்து இணையத்துக்கு கடன் தவணை செலுத்தும்போது, அது குழுக் கடன் கணக்கில் வரவு வைக்கப்படும்.வீட்டுவசதி சங்கத்தில் கடன் பெற்றவர்கள் தவணையை முறையாக செலுத்தினாலும், அது வட்டி மற்றும் அபராத வட்டி கணக்கிலேயே சேரும்; அசல் கணக்கில் சேர்க்கப்படாது.
இது குறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:வீட்டுவசதி சங்கங்களில் பராமரிக்கப்படும் கடன் கணக்குக்கும், இணையத்தின் கணக்குக்கும் வேறுபாடு உள்ளது. இந்த வேறுபாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை சரி செய்வதால், வீட்டுவசதி இணையத்துக்கு எவ்வித இழப்பும் ஏற்படாது.புதிதாக இத்துறைக்கு வந்துள்ள அமைச்சர், செயலர் ஆகியோர் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தினால், நிலுவையாக உள்ள 1,000 கோடி ரூபாய் வசூலாகும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.