மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில், 43 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 36 பேர் புதுமுகங்கள். ஏற்கனவே அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த ஏழு பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள், என்ன காரணங்களுக்காக அமைச்சர்களாக தேர்வாகி உள்ளனர் என்பது குறித்த ஒரு பார்வை:
நாராயண் ரானே: மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வரான இவர், கடந்த 2019ல், பா.ஜ.,வில் சேர்ந்தார். மஹாராஷ்டிராவில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நகராட்சி தேர்தலை மனதில் கொண்டு, அமைச்சரவையில் ரானே சேர்க்கப்பட்டுள்ளார்.
சர்பானந்த சோனேவால்: அசாம் மாநிலத்தில் முதல்வராக, 2016 - 21 வரை இருந்தார். இரண்டாவது முறை முதல்வராக இவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாததால், மத்திய அமைச்சராக்கப்பட்டுள்ளார்.
டாக்டர் வீரேந்திர குமார்: மத்திய பிரதேசத்தை சேர்ந்த இவர், ஏழாவது முறையாக எம்.பி.,யாக உள்ளார். பிரதமர் மோடியின் முதல் அரசில், சிறுபான்மை நலத்துறை இணை அமைச்சராக இருந்தார்.
ஜோதிராதித்ய சிந்தியா: மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து, பா.ஜ., ஆட்சி மலர செய்ததில் முக்கிய பங்கு வகித்தார். அதற்கான பரிசாக, மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ராமசந்திர பிரசாத் சிங்: முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவராக உள்ளார்.
அஸ்வினி வைஷ்ணவ்: ஒடிசாவை சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், உட்கட்டமைப்பு பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதில் அனுபவமிக்கவர்.
பசுபதி குமார் பராஸ்: பீஹார் மாநிலம் ஹாஜிப்பூர் எம்.பி.,யான இவர், லோக் ஜன சக்தி கட்சியின் நிறுவனர், ராம்விலாஸ் பஸ்வானின் இளைய சகோதரர். லோக் ஜனசக்தியின் தலைவராக இருந்த பஸ்வானின் மகன் சிராக் பஸ்வானை நீக்கிவிட்டு, கட்சி தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றார்.
கிரண் ரிஜிஜு: அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த இவர், மோடியின் முதல் மற்றும் இரண்டாவது ஆட்சியில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.இப்போது, கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
ராஜ்குமார் சிங்: முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், பீஹாரை சேர்ந்தவர். மின் துறை இணை அமைச்சராக சிறப்பாக செயல்பட்டதால் கேபினட் அந்தஸ்துவழங்கப்பட்டுள்ளது.
![]()
|
ஹர்தீப் சிங் புரி: விமான போக்குவரத்து துறை இணை அமைச்சரான, ஹர்தீப் சிங் புரி, கேபினட் அமைச்சராக்கப்பட்டுள்ளார். 2022ல் நடக்கும் பஞ்சாப் சட்டசபை தேர்தல் வெற்றிக்கு உதவுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
![]() Advertisement
|
மன்சுக் மாண்டவியா: இணை அமைச்சராக இருந்த குஜராத்தின், மன்சுக் மாண்டவியா, இப்போது கேபினட் அமைச்சராக்கப்பட்டுள்ளார்.
பூபேந்தர் யாதவ்: பீஹார், பா.ஜ., முக்கிய தலைவரான, பூபேந்தர் யாதவ், பாபர் மசூதி இடிப்பு, ஆஸி., பாதிரியார் கிரஹாம் ஸ்டேன்ஸ் கொலை வழக்கு விசாரணை குழுக்களில் அரசு தரப்பு ஆலோசகராக பணியாற்றியவர்.
![]()
|
பர்ஷோத்தம் ருபலா: குஜராத்தைச் சேர்ந்த, பர்ஷோத்தம் ருபலா, பஞ்சாயத்து ராஜ், வேளாண் மற்றும் விவசாயிகள் நல்வாழ்வுத் துறை இணையமைச்சராக உள்ளார்.
கிஷன் ரெட்டி: தெலுங்கானா தலைநகர், ஐதராபாதைச் சேர்ந்த, கிஷன் ரெட்டி, உள்துறை இணையமைச்சராக உள்ளார். ஆந்திரா, தெலுங்கானாவில், பா.ஜ.,வின் வளர்ச்சிக்கு உதவி வருகிறார்.
![]()
|
பங்கஜ் சவுத்ரி: உத்தர பிரதேசத்தை சேர்ந்த எம்.பி., பங்கஜ் சவுத்ரி, ஆறு முறை, லோக்சபாவுக்கு தேர்வாகி உள்ளவர். அமைச்சரவையில் இவர் இணைக்கப்பட்டுள்ளது, உ.பி., சட்டசபை தேர்தலில், தலித் மக்களின் ஆதரவை பெற வழிவகுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
![]()
|
அனுப்பிரியா சிங் படேல்: சோனேலால் படேலின் அப்னா தளம் கட்சித் தலைவரான அனுப்பிரியா சிங் படேல், 2016 முதல், 2019 வரை, பிரதமர் மோடி அரசில், மத்திய சுகாதாரத் துறையின் இணை அமைச்சராக பணியாற்றியவர்.
சத்ய பால் சிங் பாகெல்: உத்தர பிரதேசத்தை சேர்ந்த சத்ய பால் சிங் பாகெல், 2017 முதல், 2019 வரை, உ.பி., அமைச்சராக பதவி வகித்துள்ளார். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த இவர், அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளது, உ.பி.,யில் அந்த சமூக மக்களின் ஆதரவை பெற வழிவகுக்கும் என கூறப்படுகிறது.
![]()
|
ராஜீவ் சந்திரசேகர்: கேரளாவை பூர்வீகமாக கொண்டுள்ள ராஜீவ் சந்திரசேகர், கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வானவர். தொழிலதிபரான இவருக்கு, அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளதால், 'கார்ப்பரேட்' பிரிவில் பா.ஜ., கட்சியின் தொடர்புகள் அதிகரிக்க உதவும்.
ஷோபா கரன்ட்லாஜே: கர்நாடகாவை சேர்ந்த ஷோபா கரண்ட்லாஜே, முதல்வர் எடியூரப்பாவின் நம்பிக்கைக்கு உரியவர். உடுப்பி சிக்மகளூர் தொகுதியில் பா.ஜ., கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தியதில், முக்கிய பங்காற்றியவர்.
![]()
|
பானு பிரதாப் சிங் வர்மா: உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் பானு பிரதாப் சிங் வர்மா, எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மக்களின் பிரதிநிதியாக விளங்கும் இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தர்ஷனா விக்ரம் ஜார்டோஷ்: குஜராத்தை சேர்ந்த தர்ஷனா விக்ரம் ஜார்டோஷ், அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளது, வரவிருக்கும் குஜராத் மாநில சட்டசபை தேர்தலில், பா.ஜ., கட்சிக்கு பலனளிக்கும் என, கூறப்படுகிறது.
![]()
|
மீனாட்சி லேகி: உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞராக உள்ளார். பா.ஜ., கட்சித் தலைவர்களில், மிகவும் பிரபலமான நபராக விளங்கும் இவர், முன்பே, மத்திய அமைச்சரவையில் இணைக்கப்பட்டிருக்க வேண்டிய நபர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார்.
அன்னபூர்ண தேவி: பீஹார் மாநிலத்தை சேர்ந்த அன்னபூர்ண தேவி, பீஹார் மாநில அமைச்சராக பதவி வகித்தவர். முதல்முறையாக லோக்சபாவுக்கு தேர்வாகி உள்ள இவர், மத்திய அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளார்.
![]()
|
அபையா நாராயணசாமி: கர்நாடகாவை சேர்ந்த அபையா நாராயணசாமி, முதல்முறையாக லோக்சபாவுக்கு தேர்வானவர். கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரான இவர், கிராம மக்களின் குறைகளை தீர்த்து மக்களின் செல்வாக்கை பெற்றவர்.
கவ்ஷல் கிஷோர்: உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இவர், பா.ஜ.,வின் எஸ்.சி., பிரிவு தலைவராக பதவி வகித்துள்ளார். தலித் ஓட்டுகளை கவரும் மாயாவதியின் முயற்சிக்கு போட்டியாக திகழ்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
![]()
|
அஜய் பட்: உத்தரகண்ட் மாநில பா.ஜ., தலைவர் மற்றும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஆகிய பதவிகளை ஒரே நேரத்தில் வகித்தவர். மாநிலத்தில், பா.ஜ., ஆட்சி அமைந்ததில் முக்கிய பங்கு வகித்தார்.
பி.எல்.வர்மா: உத்தர பிரதேசத்தில் இருந்து முதல் முறையாக ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வானவர். பிரதமரின் சொந்த தொகுதியான வாரணாசியை சேர்ந்த, சமஸ்கிருத அறிஞர். பா.ஜ.,வின் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் துணை தலைவராக பதவி வகித்து வருகிறார்.
![]()
|
அஜய் குமார்: உத்தர பிரதேசத்தின் கேரி லோக்சபா தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக தேர்வானவர். அம்மாநிலத்தில் இருந்து தற்போது அமைச்சர்களாக தேர்வாகி உள்ள ஏழு பேரில் இவரும் ஒருவர்.
![]()
|
தேவுசின் சவுஹான்: அனைத்திந்திய வானொலியில் மின் பொறியாளராக பணியாற்றியவர். குஜராத் சட்டசபையில் இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக பதவி வகித்துள்ளார். அம்மாநிலத்தின் கேடா லோக்சபா தொகுதியில் இருந்து, இரண்டாவது முறையாக எம்.பி.,யாக வெற்றி பெற்றவர்.
பகவந்த் குபா: கர்நாடகாவின் பிடார் லோக்சபா தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார். கர்நாடகாவில், அரசியல் கட்சிகளின் ேதர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் லிங்காயத்து சமூகத்தின், பனாஜிகா என்ற உட்பிரிவை சேர்ந்தவர் இவர்.
![]()
|
கபில் மோரேஷ்வர் பாட்டீல்: தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து 2014ல் பா.ஜ., இணைந்தவர். மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் பா.ஜ.,வின் ஒரே எம்.பி.,யாக உள்ளார். அந்த பகுதியில், இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில், பா.ஜ.,வின் முகமாக திகழ்கிறார். தானே உள்ளாட்சிக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, இவருக்கு அமைச்சர் வாய்ப்பு கிடைத்துள்ளது.
![]()
|
சுபாஸ் சர்கார்: மருத்துவரான இவர், மேற்கு வங்கத்தின் பன்குரா லோக்சபா தொகுதியில் இருந்து கடந்த 2019ல் தேர்வானார்.
![]()
|
பகவத் கிஷன்ராவ் கராட்: மஹாராஷ்டிராவின் அவுரங்காபாத் நகர முன்னாள் மேயர். அம்மாநிலத்தில் இருந்து, ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வானார். இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பின், வஞ்ஜாரா சமூகத்தை சேர்ந்தவர்.
ராஜ்குமார் ரஞ்சன் சிங்: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் அரச குடும்பத்தை சேர்ந்தவர். பா.ஜ., சார்பில் போட்டியிட்டு லோக்சபா எம்.பி.,யாக தேர்வானார். அம்மாநிலத்தை சேர்ந்த பல்வேறு பழங்குடியின மக்கள் இடையே ஒற்றுமை ஏற்படுத்த உழைத்தவர்.
![]()
|
பாரதி பிரவீன் பவார்: தேசியவாத காங்கிரசில் இருந்து பா.ஜ.,வில் இணைந்தவர். மருத்துவரான இவர், மஹாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள, எஸ்.டி., தனித் தொகுதியான, டின்டோரியில் போட்டியிட்டு முதல்முறையாக வென்றார்.
பிஷ்வேஸ்வர் துடு: ஒடிசாவில் இருந்து நியமிக்கப்பட்டுள்ள இரண்டாவது அமைச்சர் இவர். அம்மாநிலத்தில் ஸ்திரமாக காலுான்ற பா.ஜ., திட்டமிட்டு வருவதால், இவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
![]()
|
முஞ்சப்பாரா மகேந்திரபாய்: குஜராத்தின் சவுராஷ்டிரா பகுதியான சுரேந்திரா நகர் தொகுதியில் இருந்து பா.ஜ., - எம்.பி.,யாக தேர்வானார். மருத்துவரான இவர், ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து, அப்பகுதியில் பிரபலமடைந்தார்.
ஜான் பர்லா: பழங்குடியின தலைவரான இவர், மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருபவர். வடக்கு வங்கத்தை, யூனியன் பிரதேசமாக அறிவிக்குமாறு குரல் கொடுத்து வருகிறார்.
நிசித் பிரமானிக்: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், வடக்கு வங்கத்தில் உள்ள 54 தொகுதிகளில், 30 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற காரணமாக இருந்தவர்.
![]()
|
இளமையான அமைச்சரவை
இளம் வயதினர் பலர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளதன் மூலம், நாட்டின் மிகவும் இளம் வயதினர் உடைய அமைச்சரவையாக, மோடியின் அமைச்சரவை அமைந்துள்ளது. அமைச்சரவையில் சராசரி வயது, 56 ஆக உள்ளது.நேற்று பதவியேற்றவர்களில், 36 பேர் புதுமுகங்கள். இதில், 16 பேர் முதல் முறை, எம்.பி.,க்கள்.அமைச்சர்களில், மிகவும் இளையவரான, மேற்கு வங்கத்தின் கூச் பெஹர் தொகுதியின் எம்.பி.,யான நிஷித் பிரமணிக்கின் வயது, 35 மட்டுமே. பதவியேற்றவர்களில், ஐந்து பேர், 65 வயதுக்கு மேற்பட்டோர். அதே நேரத்தில், அமைச்சரவையில், 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் யாரும் இல்லை.
சாந்தனு தாக்குர், 38; அனுப்பிரியா படேல், 40; பாரதி பிரவீன் பவார், 42; ஜான் பிர்லா, 45; தமிழகத்தின் எல். முருகன், 44 என, இளம் வயதினர் அதிகம் இடம் பெற்றுள்ளனர்.
அதே நேரத்தில், பதவி விலகிய, 12 பேரின் சராசரி வயது, 54 ஆக உள்ளது. அதில் மிகவும் குறைந்த வயது, 50 ஆகவும், அதிக வயது, 73 ஆகவும் உள்ளது. அதில், எட்டு பேர், 65 வயதுக்கும், மூன்று பேர், 70 வயதுக்கும் மேற்பட்டோர்.இளம் வயதினர் அதிகம் சேர்க்கப்பட்டதன் மூலம், மத்திய அமைச்சரவையின் சராவரி வயது, 61ல், இருந்து, 58ஆக குறைந்துள்ளது.
அதிகபட்சம், 81 பேர் அமைச்சர்களாக இடம்பெறலாம் என்ற நிலையில், இந்த விரிவாகத்துக்குப் பிறகு, அமைச்சர்களின் எண்ணிக்கை, 77ஆக உள்ளது.
11 பெண் அமைச்சர்கள்
:
மத்திய அமைச்சரவையில் பெண் அமைச்சர்கள் எண்ணிக்கை, 11 ஆக அதிகரித்துள்ளது.
மத்திய அமைச்சரவையில், கேபினட் அமைச்சர்களாக நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, இணை அமைச்சர்களாக, சாத்வி நிரஞ்சன் ஜோதி, ரேணுகா சிங் என, நான்கு பெண் அமைச்சர்கள் உள்ளனர்.இந்நிலையில், நேற்று நடந்த மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில், பா.ஜ.,வை மீனாட்சி லேகி, ஷோபா கரன்ட்லஜே, அனுப்பிரியா சிங் படேல், தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், அன்னப்பூர்ணா தேவி, பிரதிமா பவுமிக், டாக்டர் பாரதி பிரவீன் பவார் மற்றும் அப்னா தளத்தை சேர்ந்த அனுப்பிரியா சிங் படேல் என, ஏழு பெண் அமைச்சர்கள் பதவியேற்றனர்.
இதையடுத்து, மத்திய அமைசசரவையில் பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை, 11 ஆக உயர்ந்தது. நேற்று பதவியேற்ற ஏழு பெண் அமைச்சர்களும், இணை அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களில், அன்னப்பூர்ணா தேவி, பாரதி பிரவீன் பவார், பிரதிமா பவுமிக் ஆகியோர், முதல் முறை எம்.பி.,க்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடியின் முதல் ஆட்சியில், ஒன்பது பெண் அமைச்சர்கள் இருந்தனர். இதில் ஆறு பேர் கேபினட் அமைச்சர்கள்
![]()
|
முருகன் நியமனம் ஏன்?
நாமக்கல் மாவட்டம் கோனானுாரை சேர்ந்தவர் முருகன், 44. இவர், சென்னை அம்பேத்கர் சட்ட கல்லுாரியில் சட்ட படிப்பை முடித்த பின், சென்னை உயர் நீதிமன்றத்தில் 15 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியவர். சென்னை பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் இருந்த முருகன், தமிழக பா.ஜ.,வின், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு தலைவராகவும் இருந்துள்ளார். தேசிய எஸ்.சி., - எஸ்.டி., ஆணைய துணை தலைவராக 2017 முதல், 2020 வரை பதவி வகித்துள்ளார். தமிழக பா.ஜ., தலைவராக 2020 மார்ச்சில், நியமிக்கப்பட்டார். இவருடைய தலைமையின் கீழ் தமிழக சட்டசபை தேர்தலில், பா.ஜ., நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில், எம்.பி.,யாக இல்லாத முருகன், நேற்று, மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றார்.
தமிழகத்தில், பா.ஜ.,வுக்கு ஒரு எம்.பி., கூட இல்லாவிட்டாலும், இம்மாநிலம் சார்பாக, மத்திய அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் தரும் வகையில், முருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.இதையடுத்து, தமிழகத்தில் அருந்தியர் சமூகத்தை சேர்ந்த முதல் மத்திய அமைச்சர் என்ற பெருமை முருகனுக்கு கிடைத்துள்ளது. - நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE