புதுடில்லி : டொமினிக்கா நாட்டில் சட்ட விரோதமாக நுழைந்த குற்றச்சாட்டில் கைதான, வைர வியாபாரி, மெஹுல் சோக்சி, தன்னை கைது செய்ததன் பின்னணியில், இந்தியா உள்ளதாக, நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளார்.

மும்பையைச் சேர்ந்த, மெஹுல் சோக்சி மீது, பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக வழக்குகள் உள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு முன் ஆன்டிகுவா நாட்டிற்கு தப்பிச் சென்ற மெஹுல் சோக்சியை, நாடு கடத்தும் முயற்சியில் சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில், மெஹுல் சோக்சி, ஆன்டிகுவாவில் இருந்து, கரீபியன் நாடுகளில் ஒன்றான, டொமினிக்காவில் நுழைந்தபோது போலீசாரால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், மெஹுல் சோக்சி சார்பில், டொமினிக்காவின் ரோசியா நகர உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:ஆன்டிகுவா குடியுரிமை பெற்ற என்னை, இந்தியாவைச் சேர்ந்த சிலர் வலுக்கட்டாயமாக, டொமினிக்காவிற்கு கடத்தி வந்தனர். மத்திய அரசின் பிரதிநிதிகளான அவர்கள் உத்தரவுப் படி, போலீஸ் அதிகாரியும், குடியேற்றத் துறை அதிகாரியும், என் மீது, சட்டவிரோதமாக டொமினிக்காவில் நுழைந்ததாக குற்றம்சாட்டி கைது செய்தனர். இந்த கடத்தல் நாடகத்தின் பின்னணியில், இந்தியா உள்ளது.

என்னை கடத்திய இந்தியப் பிரதிநிதிகளின் உத்தரவுப்படி, டொமினிக்கா போலீசார் நடந்து கொண்டனர். எனவே, சட்ட விரோத நுழைவு குறித்து என்மீது சுமத்தப்பட்டுள்ள கிரிமினல் குற்றச்சாட்டை நீக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.