சென்னை : கன்னியாகுமரியில், சிறப்பு எஸ்.ஐ., வில்சனை சுட்டுக் கொல்ல பயன்படுத்திய இத்தாலி நாட்டு துப்பாக்கி, பயங்கரவாதி காஜா மொய்தீனுக்கு எப்படி கிடைத்தது என்பது பற்றி விசாரிக்க, என்.ஐ.ஏ., முடிவு செய்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில், 2020, ஜனவரியில், சிறப்பு எஸ்.ஐ., வில்சன், 58, மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு, கொடூரமாக கொல்லப்பட்டார். இது தொடர்பாக, கியூ பிரிவு போலீசார் விசாரித்து, அதே பகுதியைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தவுபீக், 28, அப்துல் ஷமீம், 28 உள்பட, 7 பேரை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.
பின், வில்சன் கொலை வழக்கு, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள், தவுபிக் உள்ளிட்டோருக்கு தலைவனாக செயல்பட்ட, கடலுாரைச் சேர்ந்த, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதி காஜா மொய்தீன் என்பவரை, டில்லியில் கைது செய்து, திஹார் சிறையில் அடைத்தனர்.

தற்போது, சென்னை பூந்தமல்லி தனி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தான், வில்சனை கொலை செய்ய பயன்படுத்திய, இத்தாலி நாட்டில் தயாரிக்கப்பட்ட, 7.65, பிஸ்டல் எனப்படும் துப்பாக்கியை வாங்கி உள்ளார். இவருக்கு மும்பையில் சிக்கிய, இஜாஸ் பாட்ஷா என்பவன் உதவி உள்ளார்.
இந்த துப்பாக்கியை, தவுபிக் மற்றும் அப்துல் ஷமீம் கைது செய்யப்பட்டபோதே, கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள, கால்வாய் ஒன்றில் கிடந்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த துப்பாக்கி பயங்கரவாதிகளுக்கு எப்படி கிடைத்தது; இதன் பின்னணியில் உள்ள, முக்கிய புள்ளிகள் குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகளால் துப்பு துலக்க முடியவில்லை. இதனால், காஜா மொய்தீனை காவலில் எடுத்து விசாரிக்க, முடிவு செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE