நாமக்கல் மாவட்டம், கோனானுாரை சேர்ந்தவர் முருகன், 44. இவர், சென்னை அம்பேத்கர் சட்ட கல்லுாரியில் சட்ட படிப்பை முடித்த பின், சென்னை உயர் நீதிமன்றத்தில், 15 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியவர். சென்னை பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் இருந்த முருகன், தமிழக பா.ஜ.,வின், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு தலைவராகவும் இருந்துள்ளார். தேசிய எஸ்.சி., - எஸ்.டி., ஆணைய துணை தலைவராக, 2017 முதல், 2020 வரை, பதவி வகித்துள்ளார்.இந்தப் பதவியில் இருந்தபோதுதான், 2020 மார்ச்சில், தமிழக பா.ஜ., தலைவராக முருகன் நியமிக்கப்பட்டார். அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த முருகனை, கட்சியின் மாநில தலைவராக நியமித்தது, பல தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றுத் தந்தது.

இவர், 15 மாதங்களாக தமிழக தலைவராக செயல்பட்டு வந்தார். இவருடைய தலைமையின் கீழ் தமிழக சட்டசபை தேர்தலில், பா.ஜ., நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில், எம்.பி.,யாக இல்லாத முருகன், நேற்று, மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றார்.
தமிழகத்தில், பா.ஜ.,வுக்கு ஒரு எம்.பி., கூட இல்லாவிட்டாலும், இம்மாநிலம் சார்பாக, மத்திய அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் தரும் வகையில், முருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில், அருந்தியர் சமூகத்தை சேர்ந்த முதல் மத்திய அமைச்சர் என்ற பெருமை முருகனுக்கு கிடைத்துள்ளது.
இது, தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் மீது, பிரதமர் நரேந்திர மோடி அளப்பறிய பற்று வைத்திருப்பதை காட்டுவதாக, பா.ஜ., நிர்வாகிகள் தெரிவித்தனர். இவர், விரைவில், பா.ஜ., ஆளும் ஏதேனும் ஒரு மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட உள்ளார்.
-நமது நிருபர்-