மத்திய அமைச்சராக பதவியேற்ற, தமிழக பா.ஜ., தலைவர் முருகன், 'பயோடேட்டா'வில், அவர் பிறந்த மாவட்டத்தை குறிப்பிடாமல், கொங்கு நாடு எனக் குறிப்பிட்டிருந்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில், தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என அழைக்க துவங்கியது. முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அறிக்கை அனைத்திலும், ஒன்றிய அரசு என்ற வார்த்தை இடம் பெறுகிறது.இதற்கு, பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. சமூக வலைதளங்களில், இரு கட்சியினருக்கும் இடையே, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில், நேற்று மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. தமிழக பா.ஜ., தலைவர் முருகனும், மத்திய அமைச்சராக பதவியேற்றார். தமிழகத்தில் இருந்து, மத்திய அமைச்சரவையில் இடம் பெற்ற ஒரே நபர்.புதிதாக மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்றவர்கள் பயோடேட்டா, மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்டது. அதில், மத்திய அமைச்சர்கள் பிறந்த மாவட்டம், மாநிலம் பெயர் இடம் பெற்றிருந்தது.
முருகன் பிறந்த மாவட்டமான, நாமக்கல் மாவட்டத்தை குறிப்பிடாமல், 'கொங்கு நாடு, தமிழகம்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது சரியா, தவறா என, சமூக வலைதளங்களில் பட்டிமன்றம் நடந்து வருகிறது. தி.மு.க., தரப்பில், ஒன்றிய அரசு என குறிப்பிடுவதற்கு பதிலடியாக, 'கொங்கு நாடு' என்று போடப்பட்டதா அல்லது தவறுதலாக இடம்பெற்றதா என்பது தெரியவில்லை.
- நமது நிருபர் -