மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டு, 43 பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றனர். அதில், தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ., தலைவர் முருகனும் ஒருவர். பதவி ஏற்புக்கு முன், புதிய அமைச்சர்களின் சுய விபர குறிப்பு வெளியானது. அதில், 'எல்.முருகன், தமிழகத்தின் கொங்கு நாட்டை சேர்ந்தவர்' எனக் கூறப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
'ஒன்றிய அரசு'
இது குறித்து தி.மு.க., செய்தி தொடர்பு இணை செயலர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கூறியதாவது: தமிழகத்தை, 'தமிழ்நாடு' என்றாலும், மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என்று சொன்னாலும், பிரிவினைவாத உள்நோக்கம் இருக்கிறது என, 'தேச ஒற்றுமை, இறையாண்மை' குறித்து, பா.ஜ.,வினர் எங்களுக்கு தொடர்ச்சியாக வகுப்பெடுத்தனர். அவர்கள் மட்டுமே தேச ஒற்றுமையை காக்க வந்த பிதாமகர்கள் போல, எங்களின் தேசப்பற்று குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால், முருகன் தொடர்பான சுயவிபர குறிப்பில், அவரது பூர்வ இடமான நாமக்கல் என்பதை, 'கொங்கு நாடு' என்று குறிப்பிட்டுஉள்ளனர். இந்த விபரங்களை, மத்திய அரசு வெளியிட்டது என்று சொன்னாலும், அதை கொடுத்தவர் முருகனாகத்தான் இருக்க வேண்டும். 'கொங்கு நாடு' இந்தியாவில் இல்லாத ஒரு நாடு. தமிழகத்தில், அப்படியொரு சொல்லே வழக்கத்தில் இல்லை.
இல்லாத ஒரு நாட்டை, முருகன் உருவாக்க பார்க்கிறாரா; மத்திய அரசும் ஏற்று கொள்கிறதா? முருகன், சட்டம் தெரியாத சாதாரண நபர் அல்ல. நேற்று வரை கூட, அவர் சாதாரண மனிதராக இருந்துஇருக்கலாம். இன்று அரசியல் சட்டப்படி மத்திய அமைச்சர். அவரது சுயவிபர குறிப்பில், 'கொங்கு நாடு' எனக் குறிப்பிட்டிருப்பது, பிரிவினைவாதத்தின் உச்சம். இது தவறுதலாக குறிப்பிடப்பட்டு விட்டது என்றால், அது எப்படி இடம் பெற்றது; யார் அதை மத்திய அரசுக்கு கொடுத்தது; எங்கே தவறு நடந்தது என்பது குறித்து, பொறுப்புமிக்க பதவியில் இருக்கும் முருகன் விளக்க வேண்டும். அப்படி எதுவும் செய்யாத நிலையில், 'கொங்கு நாடு' என, குறிப்பிட்டது, திட்டமிட்டே செய்த காரியமாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும்.

'தமிழ்நாடு'
தமிழகத்தை, 'தமிழ்நாடு' என குறிப்பிட, அதிகார கோப்புகள் பல இருக்கும்போது, அதை குறிப்பிட்டால் பிரிவினைவாதம் என்று பா.ஜ., சொல்கிறது. இந்தியா என்பது ஒரு நாடு. அந்த நாட்டுக்குள் இன்னொரு நாடாக, 'தமிழ்நாடு' எப்படி இருக்க முடியும் எனக் கேட்கின்றனர். அதையே தான் நாங்களும் கேட்கிறோம். இந்தியாவுக்குள் இருக்கும் தமிழ்நாட்டை, 'தமிழ்நாடு' என்று சொன்னால் அது தவறு. அதே, இல்லாத ஒன்றை, 'கொங்கு நாடு' என்று குறிப்பிடுவது சரியா? இவ்வாறு அவர் கூறினார்.-
'கொங்கு நாடு என்பதில் தவறில்லை'
-நாமக்கல் பகுதி கொங்கு நாட்டுக்குள் வருவதால், அதை, 'கொங்கு நாடு' எனக் குறிப்பிட்டிருக்கலாம். மற்றபடி, கொங்கு என்ற சொல் அழகான தமிழ் சொல். அந்த வகையிலும், கொங்கு நாடு என, சுயவிபர குறிப்பில் இடம் பெற வைத்திருக்கலாம். 'ஒன்றியம்' என்ற சொல்லுக்கு பிரிவினைவாத உள்நோக்கம் இருக்கிறது என்றால், 'அந்த சொல்லுக்குள் உள்நோக்கம் இல்லை' என, தி.மு.க., சொல்கிறது. அதுபோலவே, கொங்கு நாடு என்ற சொல்லாடலுக்கு பின்னணியில், உள்நோக்கம் எதுவும் கிடையாது. கொங்கு என்றால் சுவையானது என்றும் பொருள். தமிழ் தெரிந்தவர்களுக்கு இது தெரியும்.
-நாராயணன் திருப்பதி பா.ஜ., செய்தி தொடர்பாளர்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE