சென்னை : பழவேற்காடு முகத்துவாரம் பகுதியில் ஆய்விற்கு வந்த மீன்வளத்துறை அமைச்சர் படகில் இருந்து இறங்கும் போது உப்பு நீரில் கால் வைக்க தயங்கிய நிலையில் மாவட்ட கவுன்சிலர் ஒருவரின் கணவர் அவரை துாக்கி வந்து கரையில் சேர்த்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முகத்துவாரம் பகுதியில் ஏற்பட்ட மணல் திட்டுக்களால் மீனவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இதுகுறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக நேற்று முன்தினம் மாலை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுடன் படகில் சென்று முகத்துவார பகுதியை ஆய்வு செய்தார். ஆய்வு முடிந்த பின் படகில் பழவேற்காடு மீன் இறங்குதளம் பகுதிக்கு வந்தனர்.

படகு நிறுத்தப்பட்ட இடத்தில் உவர்ப்பு நீரும் சேறும் சகதியுமாக இருந்தது. இறங்கினால் தன் வெள்ளை நிற ஷூ அழுக்காகி விடும் நிலையில் அமைச்சர் படகில் இருந்து இறங்க தயங்கினார். தன்னை துாக்கி செல்லும்படி அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதை தொடர்ந்து அப்பகுதி தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் ஒருவரின் கணவர் மீன்வளத்துறை அமைச்சரை அலேக்காக துாக்கி வந்து கரையில் சேர்த்தார்.

அமைச்சர் விளக்கம்
இதுகுறித்து பதில் அளித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ''என்னை துாக்கி செல்லுங்கள் என யாரிடமும் கூறவில்லை. அன்பு மிகுதியால் மீனவர்களே என்னை துாக்கிச் சென்றனர். அங்கு என்ன நடந்தது என்பதை மீனவர்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம். என்னை மீனவர்கள் முத்தமிட்டனர்; கட்டிப்பிடித்தனர்'' என்றார்.

ஜெயகுமார் கண்டனம்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை படகிலிருந்து துாக்கி செல்லும் வீடியோவை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தன் 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அத்துடன் 'பாவம் தி.மு.க. அமைச்சருக்கு தண்ணீரில் கண்டம். கடல் தாயின் அலைக்கரங்கள் காலில் தழுவுவதை கூட தாங்க முடியாத ஒருவரா மீன்வளத்துறைக்குஅமைச்சர்; வெட்கக்கேடு' எனபதிவிட்டுள்ளார்.
சென்னை வெள்ளத்தின் போது தண்ணீரில் நீந்தி சென்று தான் உதவிய படங்களையும் அனிதா ராதாகிருஷ்ணனை தொண்டர்கள் துாக்கி வரும் படத்தையும் வெளியிட்டு 'முன்னாள் மீன்வளம் இந்நாள் மீன்வளம்' என குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் அனிதா ராதாகிருஷ்ணனை விமர்சித்து வெளியான பதிவு:
மீனவர்களின் வாழ்வாதாரம் கடல். அதில் கால்பட்டால் என் ஷூ நனைஞ்சிடும்னு துாக்கிட்டு போக சொன்னவர் அனிதா ராதாகிருஷ்ணன். கடல் தண்ணீரில் கால் படக்கூடாதாம்... ஆனால் மீன் வளத்துறை அமைச்சராம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE