சென்னை: 'குடும்பத் தலைவியருக்கு, மாதம்தோறும், 1,000 ரூபாய் வழங்கப்படும் என, தேர்தலின் போது தி.மு.க., அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால், போராட்டம் நடத்துவோம்' என, அ.தி.மு.க., எச்சரிக்கை விடுத்துள்ளது.
அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகள் கூட்டம், நேற்று சென்னையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் தலைமை வகித்தனர். ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றின் விபரம்:
* காவிரி நதிநீர் பங்கீட்டில், தமிழக உரிமையை காக்க வேண்டும். மேகதாதுவில் காவிரியின் குறுக்கே, புதிய அணை கட்டப்படுவதை, தமிழக அரசு தடுக்க வேண்டும்
* விவசாய இடுபொருட்கள் விலை உயர்வு, சிமென்ட் உள்ளிட்ட, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, மருத்துவ தேவைகளுக்கான கட்டண உயர்வு என எட்டு திசையில் இருந்தும், கடுமையான தாக்குதல் நடத்தப்படுவதால், மக்கள் கடும் துயரத்துக்குள்ளாகி உள்ளனர்.
மத்திய, மாநில அரசுகள் உடனடியாக, ஆக்கப்பூர்வமான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் எளியோர் நலன் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு, விலைவாசி உயர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
* பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றின் விலைகளை குறைக்க, மத்திய அரசு திட்டம் வகுக்க வேண்டும். ஆட்சிக்கு வந்ததும், பெட்ரோல் விலையை லிட்டருக்கு ஐந்து ரூபாய், டீசல் விலையை, லிட்டருக்கு நான்கு ரூபாய் குறைப்பதாக, தி.மு.க., கொடுத்த வாக்குறுதியை, உடனடியாக நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்றாவிட்டால், மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்
* தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற, தி.மு.க., அரசு உடனடியாக, கால அட்டவணை வெளியிட வேண்டும். பெண்கள் நலன் சார்ந்து அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும், விரைவாக செயல்படுத்த வேண்டும். சட்டம் ஒழுங்கை காக்கும் பணியின் போது இறந்த, காவலர் குடும்பத்துக்கு, ௧ கோடி ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை, செயல்படுத்த வேண்டும்
* குடும்பத் தலைவியருக்கு, மாதம்தோறும், 1,000 ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை, தி.மு.க., நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், மக்கள் ஆதரவோடு, தாய்மார்கள் பங்கேற்போடு, போராட்டம் நடத்துவோம்.இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
உட்கட்சி தேர்தல் நடத்த முடிவு
இன்று நடந்த கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தேர்தலின் போது சரியாக பணியாற்றாத முன்னாள் எம்.எல். ஏ.,க்களான நரசிம்மன் மற்றும் இளவழகன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக பன்னீர்செல்வம், பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE