திருவனந்தபுரம் : கேரளாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், அடுத்த தலைவலியாக, 14 பேருக்கு, 'ஸிகா' வைரஸ் தொற்றுப் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. நம் அண்டை மாநிலம் என்பதால், தொற்றுப் பரவல் தமிழகத்திற்குள் எளிதில் நுழையக் கூடிய வாயப்புள்ளதால், தமிழக அரசு சுதாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மிக தீவிரமாக இருந்தது.பல்வேறு மாநிலங்களிலும் தொற்று பரவல் குறைந்த நிலையில், கேரளாவில் மட்டும் கட்டுக்குள் வராமல் ஆட்டம் காட்டியது. மாநில அரசு கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய பின், தொற்று பரவல் தற்போது மெல்ல கட்டுக்குள் வரத்துவங்கி உள்ளது. கேரளாவின் உடனடி நடவடிக்கைக்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்தது.
பரிசோதனை
கொரோனா இரண்டாவது அலையில் இருந்து மெல்ல விடுபட்டு இயல்பு வாழ்க்கைக்கு கேரள மக்கள் திரும்பிக் கொண்டிருக்கும் நேரத்தில், அடுத்த இடியாக, 'ஸிகா' வைரஸ் பரவல் குறித்த செய்தி வெளியாகி உள்ளது.திருவனந்தபுரத்தைச் சேர்ந்த, 24 வயது கர்ப்பிணி, கடந்த மாதம், 7ம் தேதி குழந்தை பெற்றெடுத்தார். 28ம் தேதி முதல், அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு அறிகுறிகள் தென்பட்டன.
இதையடுத்து அவருக்கு கொரோனா உள்ளிட்ட வேறு சில தொற்றுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில், 'அவருக்கு தொற்று இல்லை' என, முடிவுகள் தெரிவித்தன.இதையடுத்து அவருக்கு, 'ஸிகா' வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், நேற்று முன் தினம் தொற்று உறுதியானது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக, மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது. இந்நிலையில் கேரளாவில் மேலும், 19 பேருக்கு ஸிகா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மஹாராஷ்டிராவின் புனேவில் உள்ள தேசிய வைராலஜி அமைப்பின் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பப்பட்டன. அதில், 13 பேருக்கு தொற்று இருப்பது நேற்று உறுதியானது.
இது குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், ''ஸிகா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, மாநில அரசு செயல் திட்டத்தை வகுத்துள்ளது. கர்ப்பிணியருக்கு காய்ச்சல் ஏற்பட்டால், உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம்,'' என்றார்.தொற்று பரவலை கண்காணிப்பதற்காக ஆறு பேர் அடங்கிய கண்காணிப்பு குழுவை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கேரளா அனுப்பிவைத்துள்ளது.
பகல் வேளை
கேரளா நம் அண்டை மாநிலம் என்பதால் தமிழகத்திற்குள்ளும் ஸிகா வைரஸ் எளிதில் நுழைய வாய்ப்புள்ளதாக அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.எனவே தமிழக அரசு இப்போதே சுதாரித்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.ஸிகா வைரஸ் என்றால் என்ன; அது மனிதர்களை எப்படி தாக்குகிறது என்பது குறித்து, உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:'ஏடிஸ் ஏகிப்தி' என்ற வகை கொசுக்கள் கடிப்பதால் ஸிகா வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது. இந்த ஏடிஸ் வகை கொசுக்கள், பகல் வேளைகளில் தான் கடிக்கும்.குறிப்பாக அதிகாலை, மதியம் மற்றும் மாலை வேளைகளில் அதிகம் காணப்படும். டெங்கு, சிக்குன்குன்யா ஆகியவை பரவுவதற்கு இந்த வகை கொசுக்களே காரணம்.
எச்சரிக்கை
பெரும்பாலானவர்களுக்கு ஸிகா வைரஸ் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது. கர்ப்பிணியருக்கு ஆபத்தை விளைவிக்க கூடும். குறிப்பாக தாய்க்கும், வயிற்றில் உள்ள குழந்தைக்கும் மூளை செயலிழக்க செய்தல் உள்ளிட்ட நரம்பியல் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தும்.கர்ப்பிணியரிடமிருந்து வயிற்றில் உள்ள குழந்தைக்கு இந்த வைரஸ் எளிதில் பரவக்கூடும் என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும் உடலுறவு, ரத்தம் செலுத்துதல், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை போன்றவற்றால் இந்த வைரஸ் எளிதில் பரவும். ரத்தம், சிறுநீர் அல்லது விந்து பரிசோதனை வாயிலாக, ஸிகா வைரஸ் பாதிப்பை கண்டறிய முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எல்லையில் கண்காணிப்பு
கேரளாவில் ஸிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழக எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கொசு ஒழிப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. கேரளா மாநிலத்தை ஓட்டியுள்ள கன்னியாகுமரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில், 'ஏடிஸ்' கொசு புழு அழிப்பு பணிகளை தீவிரப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இணை இயக்குனர் கிருஷ்ணராஜ் கூறியதாவது:தமிழக -- கேரளா எல்லை மாவட்டங்களில் ஏற்கனவே கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தற்போது ஸிகா வைரஸ் பாதிப்பு இருப்பதால், கண்காணிப்பை தீவிரப்படுத்த, முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளனர். அதன் அடிப்படையில், கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் கொசு மருந்து அடிக்கப்படுகிறது. கர்ப்பிணியர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், பிறக்கும் குழந்தை, உடல் ஊனமாக பிறக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
உ.பி.,யில் 'கப்பா!'
உத்தர பிரதேசத்தில் உருமாறிய கொரோனா வைரஸ் மரபணு சோதனையில், 107 பேருக்கு, 'டெல்டா பிளஸ்' வகை தொற்று நேற்று கண்டறியப்பட்டது. மேலும் இருவருக்கு, 'கப்பா' வகை தொற்று உறுதி செய்யப்பட்டது. 'கப்பா வகை தொற்று, டெல்டா பிளஸ் வகையை விட அதிதீவிர பாதிப்புகளை ஏற்படுத்த கூடியது' என, ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
எங்கே துவங்கியது?
கிழக்கு ஆப்ரிக்க நாடான உகாண்டாவில், 1947ல், 'ஸிகா' வைரஸ், குரங்குகளிடம் முதன்முதலில் கண்டறியப்பட்டது. பின், 1952ல், உகாண்டா மற்றும் தான்சானியாவில் மனிதர்களிடம் கண்டறியப்பட்டது. ஐரோப்பிய நாடான பிரான்சில் உள்ள பிரெஞ்ச் பாலினேசியாவில், கடந்த, 2013ல் மிகப் பெரிய அளவில் ஸிகா வைரஸ் பரவியது. 2015ல், தென் அமெரிக்க நாடான பிரேசிலில் மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இது, உலக அளவில் தலைப்பு செய்தியானது.
அதன் பின், அமெரிக்கா, ஆப்ரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது. உலக சுகாதார நிறுவன ஆய்வின்படி, 86 நாடுகளில் ஸிகா வைரஸ் இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.
அறிகுறிகளும், சிகிச்சையும்!
ஸிகா வைரஸ் அறிகுறிகள் குறித்து, அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:பெரும்பாலானவர்களுக்கு அறிகுறிகள் எதுவும் தென்படாது. சிலருக்கு மட்டும் லேசான காய்ச்சல், உடலில் தடிப்புகள், தலைவலி, மூட்டு வலி, கண்கள் சிவப்பாவது, தசை வலி போன்ற அறிகுறிகள் தென்படும். இந்த அறிகுறிகள் நீண்ட நாட்கள் தொடர்ந்தால் மருத்துவமனை சிகிச்சை தேவைப்படும்.இதன் சிகிச்சைக்கு என, குறிப்பாக மருந்துகள் இல்லை. தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசியும் இல்லை. முறையான தொற்று தடுப்பு நடைமுறைகளை பின்பற்றுவதன் வாயிலாகவே தற்காத்துக் கொள்ள முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தற்காத்து கொள்வது எப்படி?
* ஸிகா வைரஸ் தொற்று உறுதியான அல்லது அறிகுறிகள் உள்ள பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணியர், தொற்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்
* யூகாலிப்டஸ் இலையில் இருந்த எடுக்கப்பட்ட எண்ணெய்யை, 3 வயதுக்கு உட்பட குழந்தைகளின் உடலில் பயன்படுத்த கூடாது
* இரண்டு மாதத்துக்கு குறைவான குழந்தைகளை, கொசு வலையின் பாதுகாப்புடன் பராமரிக்க வேண்டும்
* குளிர்சாதன வசதியுடைய அறை அல்லது காற்றோட்டம் உள்ள அறை பாதுகாப்பானது
* எப்போதும் உடலை முழுதாக மறைக்கும்படியான ஆடைகள் அணிவது பாதுகாப்பானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE