சென்னை : 'மேகதாது அணை பிரச்னை குறித்து விவாதிக்க, அனைத்து சட்டசபை கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம், நாளை மறுதினமான 12ம் தேதி நடக்கும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட, கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதை தடுக்க, சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது.முதல்வராக பொறுப்பேற்ற பின், டில்லி சென்ற ஸ்டாலின், பிரதமரை சந்தித்து பேசினார். அப்போது, மேகதாது அணை பிரச்னையில் தமிழகத்தின் நிலைப்பாட்டை விளக்கிக் கூறி, 'தமிழக விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும்' என்று வலியுறுத்தினார்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சமீபத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து, 'இந்தப் பிரச்னையில், மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தினார்.
'மேகதாது அணை கட்ட, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது' என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார்.அதற்கு பதில் அளித்து ஸ்டாலின் அனுப்பிய கடிதத்தில், 'மேகதாது அணை கட்டுவதால், தமிழக விவசாயிகளின் நலன் பாதிக்கப்படும். அணை கட்டுவது, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அமையும். இந்த அணை அமைய, தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது' என, உறுதிப்பட தெரிவித்திருந்தார்.
அதன் பின்னும், 'சட்டத்திற்கு உட்பட்டு மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை, கர்நாடக அரசு செயல்படுத்தும்' என, எடியூரப்பா பிடிவாதம் காட்டுகிறார்.
இந்த சூழ்நிலையில், விவசாயிகளின் நலனை காப்பதில், தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினரின் ஒருமித்த எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில், மேகதாது அணை பிரச்னை குறித்து சட்டசபை கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டசபை கட்சிகள் உடனான ஆலோசனை கூட்டம், நாளை மறுதினம் காலை, 10:30 மணிக்கு, சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடக்க உள்ளது. கூட்டத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் தலைமை வகிக்க உள்ளார்.இக்கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டசபை கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள, முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.