சென்னை: 'அ.தி.மு.க., தலைமையை தொண்டர்கள் தான் நியமிக்க முடியும்' என, சசிகலா தெரிவித்துள்ளார். அ.தி.மு.க., நிர்வாகிகளுடன், சசிகலா மொபைல் போனில் பேசி வருகிறார். இது தொடர்பான ஆடியோக்களை, அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். ஐந்து பேரிடம் பேசிய ஆடியோக்கள் நேற்று வெளியாகின. அதில், சசிகலா பேசியிருப்பதாவது:
தொண்டர்கள் எண்ணப்படி எல்லாம் நடக்கும். தொண்டர்களால் தான் கட்சி என, எம்.ஜி.ஆர்., கூறி சென்றார்; ஜெ.,வும் அதையே பின்பற்றினார். தொண்டர்கள் நம்மோடு இருக்கின்றனர். கட்சியை நல்லபடியாக கொண்டு செல்லும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
தி.மு.க.,வில் இருந்து எம்.ஜி.ஆரை, ஒரு நிமிடத்தில் வெளியேற்றினர். கட்சிக்காக அவர் அதிகம் உழைத்திருந்தார். எனவே, தனக்கு நடந்தது போல, எதிர்காலத்தில் நடக்கக்கூடாது என்பதால், அவர் கட்சி துவக்கிய போது, சட்ட திட்ட விதிகளில், தொண்டர்கள் தான் தலைமையை நியமிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
சட்ட விதிகளில், இணை ஒருங்கிணைப்பாளர் கிடையாது. இவர்களாக போட்டுக் கொண்டனர். அப்படி போட முடியாது. தொண்டர்கள் துணையோடு, கட்சியை நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும்.
பெண்கள் பங்களிப்பு தேவை. ஜெ., வழியில் செல்வேன். எனவே, கவலைப்பட வேண்டாம். எல்லாரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் என்பதுதான் என் முடிவு.
மிக விரைவில் வருவேன். ஜெ.,வை பார்த்துவிட்டு வருவேன். ஊரடங்கு முடிந்ததும், எல்லா ஊருக்கும் வருகிறேன். பெண்கள் அதிகம் அரசியலுக்கு வர வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE