மும்பை:'விமான நிலையங்களுக்கு பெயர் சூட்டுவது குறித்த கொள்கையை உருவாக்குவது தான் புதிய விமானப் போக்குவரத்து துறை அமைச்சரின் முதல் பணியாக இருக்க வேண்டும்' என, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இந்திய விமான நிலையங்களுக்கு பெயர் சூட்டுவதில் மத்திய அரசின் கொள்கையை வெளியிடக் கோரி, வழக்கறிஞர் பிரெட்ரிக் என்பவர், மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கண்டனம்
இந்த மனு நேற்று, மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி திபங்கர் தத்தா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங்கிற்கு அமர்வு பிறப்பித்த உத்தரவு:விமான நிலையங்களுக்கு தனி நபர்களின் பெயரை சூட்டாமல் அந்தந்த நகரங்களின் பெயரை சூட்ட வேண்டும் என்ற வரைவுக் கொள்கை 2016ல் உருவாக்கப்பட்டது.
அதன் தற்போதைய நிலை என்னவென்று தெரியவில்லை. புதிய கொள்கை ஏதாவது இருந்தால், அதை தெரியப்படுத்த வேண்டும். தற்போது மத்திய அரசில் புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ளனர். விமான போக்குவரத்து துறைக்கு புதிய அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது முதல் பணி, விமான நிலைய பெயர் சூட்டுதல் கொள்கையை வெளியிடுவதாக இருக்க வேண்டும். இவ்வாறு அமர்வு உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் நவி மும்பை விமான நிலையத்திற்கு, மறைந்த எம்.பி., - டி.பி.படேல் பெயர் சூட்டக் கோரி மீனவர்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். கொரோனா விதிகளை மீறி நடந்த இந்த போராட்டத்திற்கு, மும்பை உயர் நீதிமன்றம் ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தது.
கண்டிப்பு
இதை சுட்டிக் காட்டி, 'இது போன்ற சம்பவங்களை அனுமதிக்க முடியாது' என, நேற்றைய வழக்கில், மும்பை உயர் நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்தது. எனவே விமான போக்குவரத்துத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜோதிராதித்ய சிந்தியா, விமான நிலைய பெயர் சூட்டுதல் குறித்த கொள்கை முடிவை விரைவில் அறிவிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE