வீம்புக்கு விலை போகும் வாழ்க்கை!| Dinamalar

வீம்புக்கு விலை போகும் வாழ்க்கை!

Updated : ஜூலை 12, 2021 | Added : ஜூலை 10, 2021 | கருத்துகள் (11) | |
சமுதாயத்தில் பெரும்பான்மையான மக்களிடையே, நியாயமான சிந்தனை இல்லை. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகும் சகோதரத்துவம், நட்பு, சகிப்புத்தன்மை இல்லை; சுய நலமே முன்னுரிமை பெறுகிறது. நீதிமன்றங்களில் நிரம்பி வழியும் வழக்குகளே இதற்கு சான்று.அரசின் சில நேர்மையற்ற, திறமையற்ற அதிகாரிகளால், அவர்களின் அலட்சியப் போக்கால், பாதிக்கப்பட்ட எண்ணற்றோரின் துயர் துடைக்கும்
உரத்தசிந்தனை

சமுதாயத்தில் பெரும்பான்மையான மக்களிடையே, நியாயமான சிந்தனை இல்லை. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகும் சகோதரத்துவம், நட்பு, சகிப்புத்தன்மை இல்லை; சுய நலமே முன்னுரிமை பெறுகிறது. நீதிமன்றங்களில் நிரம்பி வழியும் வழக்குகளே இதற்கு சான்று.

அரசின் சில நேர்மையற்ற, திறமையற்ற அதிகாரிகளால், அவர்களின் அலட்சியப் போக்கால், பாதிக்கப்பட்ட எண்ணற்றோரின் துயர் துடைக்கும் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்பவை நீதிமன்றங்கள் தான்.நீதிமன்றங்கள் பலரின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்திருக்கின்றன. ஆனால், மனிதாபிமானமற்ற சில அதிகாரிகளால், ஒதுக்கி தள்ளப்படும் பல நல்ல விஷயங்கள், நீதிமன்றங்களின் மீது தேவையின்றி திணிக்கப்படுகின்றன. அதனால் அவை, வழக்கு களால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன.

நீதிமன்றம் என்றாலே, வாய்தாக்களின் வாசஸ்தலமாகவும், தாமதத்திற்கென்றே பெயர் பெற்ற இடமாகவும் திகழ ஆரம்பித்து விட்டன. இது குறித்து பல நீதியரசர்கள் சுட்டிக்காட்டியும், கண்டித்தும் கூட, தாமதத்திற்கு காரணமானவர்கள் திருந்திய பாடில்லை; மக்களும் உணர்ந்த பாடில்லை.'மனோன்மணீயம்'உரிமையியல் நீதிமன்றங்களில் அதிக அளவில் தேங்கி கிடக்கும் வழக்குகளில், பெரும்பான்மையானவை, ஒரு நடுநிலையான நல்ல மனிதன், நான்கு வார்த்தையில் பேசி முடிக்கும் அற்பமான வழக்குகளே.

சம்பந்தப்பட்டவர்களின் அகங்காரமும், ஆணவமுமே அதை மிகப்பெரிய அளவில் ஊதிப் பெரிதாக்கி, நீதிமன்றங்களில் வழக்குகளாக மாறியுள்ளன.இது ஒன்றும் அவர்களுக்கு தெரியாதது அல்ல. தெரிந்தும் தெரியாத வகையில் அவர்களின் கண்ணை மறைத்திருப்பது, அவர்களின் வன்மம்; அதன் காரணமாக தலைக்கேறியுள்ள விரோதம்.ஆற்று வெள்ளத்தில் அடித்துப் போய்க் கொண்டிருந்த கம்பளி மூட்டையின் மீது ஆசைப்பட்டு, ஆற்றில் குதித்தான் ஒருவன். வெள்ளத்தில் சிக்கி போராடி கொண்டிருந்த நண்பனிடம், கரையிலிருந்தவன் சொன்னான், 'கம்பளி போனால் போகிறது...நீயாவது மூட்டையை விட்டு கரைக்கு வா' என்றான். ஆற்றில் குதித்தவன், 'நான் அதை விட்டு வெகு நேரமாகிறது; அது தான் என்னை விட மாட்டேன் என்கிறது. நான் நினைத்தது போல, அது கம்பளி மூட்டை அல்ல கரடி' என்றான்.

இதே நிலை தான் இன்று நீதிமன்ற வளாகத்தில், தங்கள் சுயமரியாதையை அடகு வைத்து, வக்கீல்களுக்கு பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் அப்பாவிகளின் நிலை.தவறான முடிவு எடுத்து விட்டோம் என்பதை உணர்ந்தாலும், திரும்பி வர இயலாத நிலை. இதை, 'மனோன்மணீயம்' காப்பியம் பாடல் ஒன்றின் மூலம் விளக்குகிறது. பாடலின் பொருள். நாய் ஒன்று, வறண்ட இடத்தில் கிடந்த, கொஞ்சமும் ஈரப்பசை இல்லாத, வெறும் எலும்பை கடித்து சுவைத்தது. அப்போது எலும்பின் கூரான பகுதி, நாயின் ஈறில் குத்தியதில், ஈறிலிருந்து ரத்தம் கசிந்தது. தன் ரத்தத்தை, எலும்பிலிருந்து வந்த சுவையாக நினைத்து சுவைத்து கொண்டிருந்ததாம். அதுபோல, சில மனிதர்கள், நம்மால் சிறிது காலம் அனுபவிக்க மட்டுமே கூடிய சொத்துக்காக குறுகிய கால வாழ்க்கையையும், அமைதியற்ற நரகமாக்கி, நீதிமன்ற வளாகத்திலேயே கழித்துக் கொண்டிருக்கின்றனர்.

'என்ன ஆனாலும் சரி; எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை. என் சொத்தை எல்லாம் விற்றாவது கேஸ் நடத்தி, அவனை ஒரு கை பார்த்து விடுகிறேன்' என்பது, ஆணவம் மிக்க மனிதர்கள் வாயிலிருந்து வெளிப்படும் அகங்கார வார்த்தைகள்.உரிமையியல் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகளின் உண்மை என்ன, நியாயம் எது என்று வழக்கு தொடர்ந்தவர்கள், அதை எதிர்ப்பவர்களுக்கு தெரியும். அதுபோல, இருவருக்கும் நெருக்கமானவர்களுக்கும் தெரியும்.


'லோக் அதாலத்'

அந்த இரு தரப்பினரும் ஒரு பொது இடத்தில் அமர்ந்து, நடுநிலையாக பேசினால், அவர்களது பிரச்னை, எவ்வித பணச்செலவும் இன்றி, ஒரு சில மணி நேரத்தில் முடிந்து விடும். ஆனால் அப்படி நடப்பதில்லை.இது போன்ற விவகாரங்களை பேசி தீர்த்துக் கொள்ள, சுயநலம் இல்லாத ஒரு குழுவை அப்பகுதி மக்கள் அமைத்து கொள்ளலாம். இந்த குழுவின் வேண்டுகோளின்படி, காவல் துறை, வருவாய் துறை மற்றும் பதிவுத்துறை உதவலாம்.

அந்த பகுதியில் உள்ள அரசியல் தலைவர்கள் கூட, அரசியல் ஆதாயம் தேடாமல், அந்த பகுதி மக்களின் நன்மதிப்பை பெற, இதுபோன்ற பிரச்னைகளை தீர்த்து வைக்கலாம்.வன்முறை குற்றங்களை குறைக்கவும், ரவுடிகள் பிரபலமாவதையும், தாதாக்கள் உருவாவதை தடுக்கவும் இது உதவும்; நீதிமன்றங்களின் சுமை நிச்சயமாக குறையும்.தற்போது கிராமங்களில் உள்ள முக்கியஸ்தர்கள் கூட, 'நமக்கேன் வம்பு' என்று ஒதுங்க ஆரம்பித்து விட்டனர்; நியாயத்தை பேச தயக்கம் காட்டுகின்றனர்.

இந்த தயக்கம் நீங்க வேண்டுமானால், சம்பந்தப்பட்ட இருவருமே தங்களது பிரச்னையில் நியாயம் கிடைத்தால் போதும் என்று கருத வேண்டும். நடுநிலையாளர்களுக்கு அழுத்தம் கொடுக்காமல்நியாயத்தை பேச அனுமதிக்க வேண்டும். அவர்களது முடிவை ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும்.இன்னும் சொல்லப்போனால், இரு தரப்பினரும் அமர்த்தியுள்ள வழக்கறிஞர்களே, தங்கள் கட்சிக்காரருக்கு வழக்கின் தன்மையை விளக்கி, அவர்களே பிரச்னையை தீர்த்து வைக்கலாம். அதற்கென ஒரு நியாயமான தொகையையும் கட்டணமாக பெற்றுக் கொள்ளலாம்.

நீதிமன்றங்களும், நீதியரசர்களும், இப்படி மன்றத்துக்கு வெளியே, சமரசமாக போவதை அனுமதிக்கின்றனர்.சமீபகாலமாக, 'லோக் அதாலத்' எனப்படும் மக்கள் நீதிமன்றம் மூலம், பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. அதுபோன்றதொரு அமைப்பை மக்கள் தாங்களாகவோ அல்லது அரசு அதிகாரிகளின் உதவியுடனோ அமைத்து கொள்ளலாம்.


போலி வழக்கறிஞர்கள்

அமைதியான, நியாயமான, நடுநிலையான பேச்சு மூலம் எவ்வளவு பெரிய பிரச்னையையும் தீர்த்துக் கொள்ள முடியும். சம்பந்தப்பட்டவர்களுக்கு அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். அதற்கு அவர்களுக்கு, இந்த மனித வாழ்க்கையின் நிரந்தரமற்ற தன்மை மனதில் பதிந்திருக்க வேண்டும்.பலரும் பொறாமைப்படும் அளவுக்கு, சொத்துக்களை வாங்கிக் குவித்தவர்களின் அகால மரணங்கள் இவர்களின் கண்களைத் திறக்க வேண்டும்; அகங்காரத்தை போக்க வேண்டும்.

உடன் பிறந்த சகோதரனின் உரிமையை மறுக்க அல்லது பறிக்க, மூன்றாவது மனிதரின் உதவியை நாடுவதைப் போல, ஒரு அநாகரிகமான, அநியாயமான செயல் இருக்க முடியாது.தமிழ் திரைப்படங்களில் கேலியாக சித்தரிக்கப்படும் கிராம நாட்டாமை நடத்தும் பஞ்சாயத்துகள்,உண்மையில் கேலிக்குரியவை அல்ல. பணச்செலவும், கால விரயமும் இன்றி இயங்கியஅற்புதமான நியாயஸ்தலங்கள் அவை. அரசின் வழிநடத்துதலுடனும், நேர்மையான, சமூக அக்கறையுள்ள அரசு அதிகாரி அல்லது ஓய்வு பெற்ற நீதிபதிகளின் கண்காணிப்பில் அவை இயங்கினால், சிறந்த வியப்பூட்டும் பலனை தரும்; அத்துமீறுவதற்கும் வாய்ப்பில்லை.

பல சிக்கலான முக்கிய சமுதாய பிரச்னைகள், நீதிமன்றங்களால் தீர்த்து வைக்கப்படுகின்றன என்பது எத்தனை உண்மையோ, அத்தனை உண்மை, பல அற்ப விஷயங்கள் அங்கு அழுகி போய்க் கொண்டிருக்கின்றன என்பதும் தான்.இருளை போக்கும் விளக்குக்கு, தன் நிழலைப் போக்கும் சக்தி கிடையாது என்பதை போல, சமுதாயத்தில் நிலவும் பல அவலங்களுக்கு தீர்வு காணும் நீதிமன்றங்களுக்கு, தன்னை களங்கப்படுத்திக் கொண்டிருப்பனவற்றை விலக்க தெரியாது.நேர்மையற்ற, திறமையற்ற நீதிபதிகளிடமிருந்தும், போலி வழக்கறிஞர்களிடம் இருந்தும் பலரால் மீண்டு வர முடியவில்லை.


சுமையை குறைப்போம்

சில வழக்கறிஞர்கள் வாங்கும் தொகைக்கு ஏற்ப, வழக்கில் அக்கறை செலுத்துவதில்லை. ஒரு சிலர் எதிர்தரப்பினரிடம் விலை போய், கட்சிக்காரருக்கு துரோகம் இழைத்து விடுவதாக கூறப்படுகிறது. நீதிபதியின் பெயரை கூறி, அதிக பணத்தை, கட்சிக்காரர்களிடம் கறந்து விடுகின்றனர்.நியாயத்தை நிலைநாட்டுவதற்காக இயற்றப்பட்டவை தான் சட்டங்கள். ஆனால், பல சந்தர்ப்பங்களில் சட்டத்தின் பெயரால் நியாயம் சாகடிக்கப்படுகிறது.

பல நேர்மையான, திறமையான வழக்கறிஞர்கள், நீதிபதிகள் உள்ளனர். நானும் ஒரு பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர் என்பதால், என் ஆதங்கத்தின் வெளிப்பாடே இக்கட்டுரை. பல நீதியரசர்கள் நீதிமன்றத்திலேயே இது போன்ற கருத்தை வெளியிட்டுள்ளனர்.நீதிமன்றங்களின் சுமையை குறைப்போம்; நிம்மதியான வாழ்க்கையை அனுபவிப்போம்!
மா.கருணாநிதி
காவல்துறை , கண்காணிப்பாளர் , ஓய்வு
சமூக ஆர்வலர்
தொடர்புக்கு:இ-மெயில்: spkaruna@gmail.com
மொபைல்: 98404 88111

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X