ஜம்மு - காஷ்மீரில் இந்திய விமானப்படை தளத்தின் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களை பயன்படுத்தி நடத்திய தாக்குதல், இந்திய ராணுவத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதையடுத்து முப்படைகளின் தளங்கள் உட்பட முக்கியமான இடங்களில், ட்ரோன் செயலிழப்பு சாதனத்தை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஜம்முவில் உள்ள விமானப்படை தளத்தில் சமீபத்தில் ட்ரோன்களை பயன்படுத்தி, இரண்டு வெடிகுண்டு தாக்குதல்கள்நடத்தப்பட்டன. இதில் இரண்டு வீரர்கள் காயம் அடைந்தனர்.இந்த தாக்குதலை பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் பயங்கரவாதிகள் நடத்தியிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.
அதிர்ச்சி
இது பற்றி என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு போலீசார் விசாரித்து வருகின்றனர். ட்ரோன்கள் வழியாக தாக்குதல் நடத்தப்ப்பட்டுள்ளது, இந்தியாவில் முதல் முறையாக இருக்கலாம். ஆனால் வேறு சில நாடுகளில் இதுபோல் தாக்குதல்கள் நடந்துள்ளன. சில பயங்கரவாத அமைப்புகள் ட்ரோன்கள் வழியாக ராணுவ தளங்கள் மற்றும் முக்கியமான இடங்களில், தாக்குதல்கள் நடத்தியுள்ளன.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில், 2018ல், அதிபர் நிகோலஸ் மடுரோ மீது ட்ரோன் வழியாக தாக்குதல் நடத்தப்பட்டது. மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், 2019ல் இரண்டு எண்ணெய் கிணறுகள் மீது ட்ரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர்.எனினும் ஜம்மு - காஷ்மீரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் ராணுவத்துக்கு மட்டுமின்றி, மத்திய அரசுக்கும் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் குறைந்து, இயல்பு வாழ்க்கை திரும்ப துவங்கியுள்ளது. இதை சீர்குலைக்கும் நோக்கிலேயே இந்த தாக்குதல்களை பயங்கரவாதிகள் நடத்தியுள்ளதாக தெரிகிறது.ராணுவ தளங்கள் மட்டுமின்றி, நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் இது போன்ற தாக்குதல்களை பயங்கரவாதிகள் நடத்த அதிக வாய்ப்பு உள்ளது.
ஜம்முவில் உள்ள விமானப்படை தளத்தின் மீது பயங்கரவாதிகள் குறி வைத்துள்ளது தெரிந்தது தான். இப்படிப்பட்ட தளத்தில் ட்ரோன்களை செயலிழக்க வைப்பதற்கான வசதிகள் செய்யாதது தான் வருத்தமான விஷயம்.டி.ஆர்.டி.ஓ., எனப்படும் இந்திய ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு கழகம், ட்ரோன்களை தடுக்கவும், செயலிழக்க வைக்கவும் ஒரு புதிய கருவியை தயாரித்துள்ளது. அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய இந்த கருவி, கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று, டில்லி செங்கோட்டையில் பிரதமர் பேசிய போது பொருத்தப்பட்டது.
'டெண்டர்'
இது மிக சிறப்பாக செயல்பட்டு, முப்படைகளின் தலைமை தளபதிகளின் பாராட்டை பெற்றது. இந்நிலையில் நாட்டின் ராணுவ தளங்கள் உட்பட முக்கியமான இடங்களில் இந்த ட்ரோன் தடுப்பு கருவியை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது பற்றி ராணுவ அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்திய விமானப்படை, 10 ட்ரோன் தடுப்பு கருவிகளை வாங்க முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டர்கள் விரைவில் வெளியிடப்படும்.இந்த கருவி நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இருக்கும். ட்ரோன்கள் பறந்து வருவதை துல்லியமாக கண்டறிந்து, அதை நடுவழியிலேயே செயலிழக்க வைக்கும் திறன் உடையது. விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ள பகுதியில் வரும் ட்ரோன்களை, இந்த கருவி சுட்டு வீழ்த்தும்.முப்படைகளின் தளங்கள், விமான நிலையங்கள், முக்கியமான கட்டடங்கள், சுற்றுலா தலங்களில் இந்த கருவியை பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
காத்திருக்கும் சவால்!
டில்லியில் நடந்த பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் ராணுவ தலைமை தளபதி நரவானே பேசியதாவது:நாட்டின் எல்லையை பாதுகாப்பது இப்போதும் மிகவும் கடினமான பணியாக மாறியுள்ளது. இதில் பல கடும் சவால்கள் காத்திருக்கின்றன. எல்லையில் பீரங்கிகள் வாயிலாக தாக்குதல் நடத்தப்படுவது மறைந்து வருகிறது; ட்ரோன்கள் வழியாக தாக்குதல்கள் நடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.
இதை எதிர்கொள்ள அதி நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.நவீன தொழில்நுட்பங்களை பயங்கரவாதிகள்தான் அதிகம் பயன்படுத்து கின்றனர். இதை எதிர்கொள்ள ராணுவம் தயார் நிலையில் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE